“அடுத்த முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நல்ல கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்யுங்கள். ஹைதராபாத் அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது காவ்யா மாறனின் முக பாவனைகளைப் பார்த்தால் என்னுடைய ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.”
இதைக் கூறியவர் நடிகர் ரஜினிகாந்த். 2023ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விழாவின்போது அவர் இதைக் கூறினார்.
ரஜினிகாந்த் மட்டுமல்ல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் போட்டிகளைப் பார்க்கும் அனைவராலும் விளையாட்டு அரங்கில் அணியை ஊக்குவிக்க வரும் காவ்யா மாறனின் முகபாவனைகளை மறக்க முடியாது.
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் ஐபிஎல் ரசிகர்களிடையே இவரது பெயர் பிரபலமடைந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
போட்டிகளின் நடுவே ஹைதராபாத் அணி விளையாடும் போக்குக்கு ஏற்ப அவர் வருத்தமடைவதும், கொண்டாடுவதுமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன.
கிரிக்கெட்டை பார்க்காதவர்கள்கூட காவ்யா மாறனை அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு அவர் பிரபலமடைந்துள்ளார்.
காவ்யா மாறன் யார்? அவர் வகித்து வரும் பொறுப்புகள் என்ன? வேறு எந்த நிறுவனங்கள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன? இங்கு தெரிந்து கொள்ளலாம்.
காவ்யா மாறன் யார்?
பட மூலாதாரம், Getty Images
சென்னையில் 1991ஆம் ஆண்டு பிறந்த காவ்யா மாறன், சன் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான கலாநிதி மாறனின் ஒரே மகள்.
காவ்யா மாறனின் தாத்தா முன்னாள் மத்திய அமைச்சரான முரசொலி மாறன். மேலும் காவ்யா முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
காவ்யா, சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், பின்னர் வெளிநாட்டிற்குச் சென்று முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். சன் குழுமத்தின் ஓர் அங்கமான சன் மியூசிக் மற்றும் வானொலி பிரிவுகளையும் அவர் நிர்வகித்து வந்தார்.
மேலும் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தைக் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. 2018ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார்.
சன் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் காவ்யா மாறன், 2019ஆம் ஆண்டில் இணைந்தார். காவ்யா மாறன் தற்போது சன் குழுமத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2008 முதல் 2012 வரையிலும் ஹைதராபாத் அணி டெக்கான் க்ரோனிக்கிள்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. அதன் உரிமையாளர் டி.வெங்கட்ராமி ரெட்டியின் மகள் காயத்ரி ரெட்டிதான் அணி நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.
அப்போது இந்த அணி டெக்கான் சார்ஜஸ் என அழைக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சன் குழுமம் இந்த அணியை வாங்கியது.
சன்ரைசர்ஸ் அணியின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA20 கிரிக்கெட் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என்ற அணியையும் காவ்யா நிர்வகிக்கிறார்.
இந்த அணி தென்னாப்பிரிக்காவில் உள்ள க்வெபெர்ஹா (முன்னர் போர்ட் எலிசபெத்) நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சன் குழுமம் இந்த அணியை 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.