சென்னை: “ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?” என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “டெல்லியின் ஆளுகைக்கு தமிழகம் என்றுமே கன்ட்ரோலில் இருக்காது என்று ஸ்டாலின் பேசி இருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில் என சேர்த்து முதலவர் சொல்லி இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் போன்ற தீவிரவாதம் தலை விரித்தாடிய மாநிலங்களையே கன்ட்ரோலில் கொண்டு வந்த மோடி அரசைப் பார்த்து, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?
கோழைத் தனத்தின் வெளிப்பாடே தற்புகழ்ச்சியின் உச்சம். முதலில் தமிழகம் உங்கள் கன்ட்ரோலில் இருக்கிறதா என்பதை யோசித்து பாருங்கள். “காலையில் எழுந்து பேப்பரை பார்த்தால், எந்த அமைச்சர் என்ன பிரச்சனை செய்திருப்பாரோ என்று பயத்தில் தூங்கவே முடியவில்லை,” என்று பொது மேடையில் ஒப்பாரி வைத்துவிட்டு அவுட் ஆப் கன்ட்ரோல் பற்றி நீங்கள் பேசலாமா?
மாணவர்கள் சாதி வெறியில் அரிவாள் தூக்கும் அளவுக்கு கல்வி நிலையங்களை கெடுத்து விட்டு, “கன்ட்ரோல் “பற்றி நீங்கள் பேசலாமா? தமிழக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் இருப்பதை சட்டசபையிலேயே பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டு விட்டு, எந்த கன்ட்ரோலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? திமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் போதை மருந்து நெட்வொர்க்கை செயல்படுத்திக் கொண்டிருந்தபோது உங்களுடைய கன்ட்ரோல் எங்கு போனது?
மேல் தளத்தில் ரெய்டு நடந்து கொண்டிருக்கையில், கீழ் தளத்தில் கூட்டணி பேரம் பேசிக் கொண்டிருந்தபோதே நீங்கள் யாருடைய கன்ட்ரோவில் இருந்தீர்கள் என்பதை நாடறியும்! பக்கத்து மாநில முதல்வரை விடுங்கள், துணை முதல்வர் உங்கள் அலுவலகம் வந்து சந்தித்தபோது காவிரியை பற்றி பேசுவதற்கு கூட நடுங்கும் உங்களுக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ பஞ்ச் டயலாக் தேவையா?
இந்தியாவில் அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று நினைத்த பல விஷயங்கள், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கன்ட்ரோலில் வந்து இருக்கிறது. பயங்கரவாதம் கன்ட்ரோலில் இருக்கிறது, வரி எய்ப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது, (தமிழ்நாடு தவிர) ஊழல் கட்டுப்பாட்டில் இருக்கிறது, மத மோதல் கட்டுப்பாட்டில் இருக்கிறது, மீனவர்கள் பிரச்சினை கட்டுப்பாட்டில் இருக்கிறது இப்படி கூறிக்கொண்டே போகலாம். ஒன்றே ஒன்று மட்டும்தான் பாக்கி இருக்கிறது. அது, வாய்ச்சொல் வீரர் திமுக மட்டுமே. அது 356 ஆ அல்லது 2026 ஆ எது என்பதை காலம் முடிவு செய்யும்” என தெரிவித்துள்ளார்.