பட மூலாதாரம், Ahmed Younis @ahmed.ys3
காஸாவில் கட்டாய இடப்பெயர்வின் குழப்பம் மற்றும் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில், காலணி அணியாத ஒரு சிறுவன், தனது தம்பியைச் சுமந்து கொண்டு, கண்ணீரில் குரல் அடைக்க “யா உம்மா” (அம்மா) என்று மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டு ஓடும் காட்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலத்தீனத்தை சேர்ந்த தன்னிச்சையான புகைப்பட பத்திரிகையாளர் அஹ்மத் யூனிஸ் எடுத்த இந்தக் காணொளியை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.
இந்தக் காட்சிகளின் மூலம் ஒரு எகிப்திய உதவி குழு அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடித்து, காஸாவின் தெற்கில் உள்ள அவர்களின் பெற்றோருடன் மீண்டும் சேர்க்க முடிந்தது.
இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் பாலத்தீனக் குழந்தைகள் அனுபவிக்கும் துயரத்தின் மற்றொரு குறியீடாக இந்தக் கதை பலரால் பார்க்கப்படுகிறது.
காணொளியில் உள்ள குழந்தைகள் யார்?
ஷார்ட் வீடியோ
8 வயது ஜதுவாதான், தனது 2 வயது தம்பி காலிதைச் சுமந்து கொண்டு ஓடுபவர். காஸா நகரைக் காலி செய்ய இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்ட பிறகு, குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் பெற்றோரிடமிருந்து பிரிந்த குழந்தைகள் ஓடும் தருணத்தை இந்தக் காணொளி படம்பிடித்துள்ளது.
பத்திரிகையாளர் அஹ்மத் யூனிஸ் காஸாவின் தெற்குப் பகுதியில் குழந்தைகளை மீண்டும் சந்தித்து, அந்தக் குடும்பத்தினருடன் பேசினார்.
அந்தக் குழந்தைகளின் தாயான மஹ்மூத் கலீல் அபு அரார், அந்த இரண்டு சிறுவர்களின் வைரல் காணொளியைப் பார்த்தபோது தான் உணர்ந்த விதம் குறித்து யூனிஸிடம் விவரித்தார்.
“என் மகன் இணையத்தில் தனியாகத் தன் தம்பியைச் சுமந்து செல்லும் காணொளியில் இருப்பதாக என்னிடம் கூறியபோது நான் அதிர்ச்சியடைந்தேன். நான் அந்தக் காணொளியைப் பார்த்தபோது, என்னால் தாங்க முடியவில்லை. அழுதேன், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆனால், ஜதுவா அப்படிச் செய்ததைப் பார்த்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன்.”
“இந்த வழியைக் கடக்கும்போது பெரியவர்களே சோர்வடைகிறார்கள், அப்படியானால் ஒரு குழந்தையைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள்.”
ஜதுவா தனது தம்பியைத் தூக்கிக்கொண்டு, கான் யூனிஸ் வரை 10 கி.மீ. தூரம் நடந்துள்ளார்.
காஸா நகரத்தில், இந்தக் குடும்பம் தால் அல்-ஹவா பகுதியில் இடம்பெயர்ந்திருந்தது.
“என் கணவர் குழந்தைகளுக்கு உணவு கொண்டு வர வெளியே சென்றிருந்தார்,” என்று நோஹா விவரித்தார்.
“ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசத் தொடங்கியது. அவர்கள் குண்டுகளை வீசினர், தாக்குதலுக்கு ரோபோட்களைப் பயன்படுத்தினர். குண்டுவீச்சு மிகவும் தீவிரமாக இருந்தது.”
அந்தத் தாய் தனது மகள்களுடன் இருந்து, அவர்களைக் காப்பாற்ற முயன்றார்.
பட மூலாதாரம், Ahmed Younis @ahmed.ys3
“குண்டுவெடிப்புகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக நடக்கத் தொடங்கின. நான் ஒரு கட்டடத்தின் நுழைவாயிலில் ஒளிந்துகொண்டேன். அந்த நுழைவாயில் எனக்குப் பின்னால் மூடப்பட்டு, நான் அங்கேயே சிக்கிக் கொண்டேன். என் குழந்தைகளுக்கு என்ன ஆனது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை,” என்று ஜதுவாவின் தந்தை ஜாசிம் அபு அரார் விவரித்தார்.
“ஜதுவா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான், ஒரு வெடிப்பு ஏற்பட்டபோது அவன் ஓடினான். தனது தாயார் இருந்த இடத்திற்குத் திரும்பியபோது, தாயாரை காணவில்லை. தனது தம்பி தரையில் கிடந்து அழுது கத்துவதைப் பார்த்தான், அதனால் அவனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.”
மற்றவர்கள் தப்பியோடிய அதே திசையில், ஜதுவா தன் தம்பியைச் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான்.
“என் அம்மாவையும் அப்பாவையும் நான் காணவில்லை. நான் என் தம்பியைத் தூக்கிக்கொண்டு நடந்தேன், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வெடுத்தேன்,” என்று அந்தச் சிறுவன் விவரித்தான்.
“நான் இரவில் தான் எனது இலக்கை அடைந்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் நான் வழியைக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.”
பட மூலாதாரம், Ahmed Younis @ahmed.ys3
துன்பத்தின் குறியீடு
வைரல் காணொளியை இணையத்தில் பார்த்தபோதுதான் தனது குழந்தைகள் உயிருடன் இருப்பதை ஜாசிம் தெரிந்து கொண்டார்.
“அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று நான் நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.
காஸா குடியிருப்பாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் எகிப்தியக் குழு, ஜதுவா மற்றும் அவரது தம்பியை மூன்று நாட்கள் தேடிய பிறகு, கண்டுபிடித்து, அவர்களைப் பெற்றோருடன் மீண்டும் இணைத்தது. தற்போது அந்தக் குடும்பம் கான் யூனிஸில் உள்ள அதே அமைப்பின் முகாமில் தங்கியுள்ளது.
வைரல் காணொளியையும், பிந்தைய சந்திப்புக் காணொளியையும் எடுத்த பத்திரிகையாளர் அஹ்மத் யூனிஸ், தனது வேலையின் தாக்கம் குறித்து விளக்குகிறார்.
” இடப்பெயர்வுகள், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் அல்லது பிற சம்பவங்கள் என இங்கு காஸாவில் பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். எங்கள் பதிவுகளுக்கு மக்களின் எதிர்வினையால் நாங்கள் அடிக்கடி சவால்களை எதிர்கொள்கிறோம். ‘யாருக்காகப் பதிவு செய்கிறீர்கள்? யார் இதைப் பார்க்கப் போகிறார்கள்? ஏன்?’ என்று அவர்கள் எங்களைக் கேட்கிறார்கள்.
என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்க்கவும், நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் பொதுவாகப் படம் பிடிக்கிறோம். கடவுளுக்கு நன்றி, இந்தக் காணொளி உலகையே உலுக்கியது.” என்றார் அஹ்மத் யூனிஸ்.
ஜதுவாவின் தந்தை, தனது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் “ஒரு கனவு உள்ளது” என்று குறிப்பிட்டார்.
“ஜதுவாவின் கனவு எதிர்காலத்தில் ஆசிரியராவதுதான்.”
பத்திரிகையாளர் அஹ்மத் யூனிஸைப் பொறுத்தவரை, காணொளியில் இருக்கும் சிறுவனின் கண்ணீர், காஸாக் குழந்தைகள் தாங்கும் அளவற்ற துன்பத்தையும் சுமையையும் குறிக்கிறது.
யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் டெஸ் இன்கிராம், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் காஸா நகரிலிருந்து ஜதுவா போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கட்டாய இடப்பெயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
“காஸா நகரிலிருந்து கட்டாயமாகப் பெருமளவில் இடம்பெயர்வது மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச கட்ட அச்சுறுத்தலாகும்,” என்று இன்கிராம் குறிப்பிட்டார்.
“காஸா நகரத்தில் மட்டும் குறைந்தது 10,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர், இப்போது குண்டுவெடிப்பு காரணமாக, அவர்களின் உயிரைக் காக்கக்கூடிய ஊட்டச்சத்து மையங்களில் மூன்றில் ஒரு பகுதியை அவர்களால் அணுக முடியவில்லை.”
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி 2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய எல்லையோரத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காஸாவில் ஒரு ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.
காஸா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலியத் தாக்குதல்களில் 18,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 65,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 1,67,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு குழு, 40,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இஸ்ரேலியத் தாக்குதல்களால் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களில் குறைந்தது 21,000 பேர் இப்போது மாற்றுத் திறனாளிகள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கட்டுரை பிபிசி-யின் அரபு சேவையால் வழங்கப்பட்ட தகவல்களை தொகுத்து தயாரிக்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு