படக்குறிப்பு, காஸா தெருக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் வீரர்கள்கட்டுரை தகவல்
காஸாவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் இடங்களில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த தனது பாதுகாப்பு படைகளில் 7000 உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் அழைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ராணுவ பின்னணி கொண்ட மூன்று ஆளுநர்களையும் ஹமாஸ் நியமித்துள்ளது, இவர்களில் சிலர் ஹமாஸின் ராணுவ பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இந்த உத்தரவு தொலைப்பேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வீரர்கள் பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதன் நோக்கம், “இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றுபவர்களையும், விரோதிகளையும் காசாவிலிருந்து சுத்தப்படுத்துதல்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய ஹமாஸின் பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காஸாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் பொதுமக்கள் உடைகளிலும், மற்றவர்கள் காஸா காவல்துறையின் நீல சீருடையிலும் இருந்தனர்.
காஸா நகரின் சப்ரா பகுதியில் ஹமாஸ் சிறப்பு படைகளைச் சேர்ந்த இருவர் துக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மூத்த தளபதியான இமாத் அகெலின் மகன் ஆவார். இமாத் தற்போது ஹமாஸின் ராணுவ உளவுப்பிரிவின் தலைவராக உள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
தெருக்களில் விட்டுச் செல்லப்பட்ட அவர்களின் உடல்கள் ஹமாஸிடம் கோபத்தை அதிகரித்து பெரிய ராணுவ பதிலடிக்கான சாத்தியங்களை அதிகரித்தது.
பின்னர் 300 ஆயுதமேந்திய துக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள் மெஷின் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இருந்ததாக நம்பப்பட்ட இடத்தை ஹமாஸ் உறுப்பினர்கள் சுற்றி வளைத்தனர்.
இன்று காலை துக்முஷ் குழு உறுப்பினர் ஒருவரைக் கொன்ற ஹமாஸ் மேலும் 30 பேரை சிறைபிடித்துள்ளது.
இந்தக் குழுவின் ஆயுதங்கள் சில போரின்போது ஹமாஸின் கிடங்குகளிலிருந்து களவாடப்பட்டவை. மற்ற ஆயுதங்கள் பல வருடங்களாக இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தவை.
போர் முடிந்த பிறகு காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் சூழலில் ஹமாஸின் அணிதிரட்டல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.
டிரம்பின் அமைதி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை சிக்கலாக்கக்கூடிய முக்கியமான பிரச்னை இது தான். ஹமாஸ் ஆயுதத்தை கைவிட வேண்டும் என டிரம்பின் அமைதி திட்டம் கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் அதிகாரி ஒருவர் சமீபத்திய படை குவிப்பு பற்றி நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு பிபிசியிடம் பேசுகையில், “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் கொள்ளையர்கள் மற்றும் ஆயுதமேந்தியவர்களின் கருணையில் நாங்கள் காஸாவை விட்டுவிட முடியாது. எங்களின் ஆயுதங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான சட்டப்பூர்வமானவை. ஆக்கிரமிப்பு உள்ளவரை ஆயுதங்கள் எங்களிடம் இருக்கும்.” எனத் தெரிவித்தார்.
காஸாவில் பாலத்தீன அதிகார சபைக்காக பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காஸா மீண்டுமொரு உள்நாட்டு சண்டையை நோக்கி நகர்வதாக அஞ்சுகிறேன் எனத் தெரிவித்தார்.
“ஹமாஸ் மாறவே இல்லை. தற்போதும் கூட ஆயுதமும் வன்முறையும் தான் அதன் இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழி என நம்புகிறது,” என பிபிசியிடம் தெரிவித்தார்.
“காஸா ஆயுதங்களால் நிறைந்திருக்கிறது. போரின்போது திருடர்கள் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் குண்டுகளையும் ஹமாஸிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். அதில் சில குழுக்களுக்கு இஸ்ரேலிடமிருந்து கூட ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.”
“ஆயுதங்கள், கோபம், ஏமாற்றம், குழப்பம் மற்றும் பிளவுபட்ட மற்றும் நொந்து போயிருக்கும் மக்கள் திரள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த துடியாக இருக்கும் ஒரு இயக்கம் – உள்நாட்டு போருக்கான சிறந்த சூழல் இது தான்.” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுமா அல்லது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் காஸாவை மையமாக கொண்ட மனித உரிமைகள் வழக்கறிஞர் கலீல் அபு ஷம்மலா.
“தற்போது உள்நாட்டு சண்டைக்கான அனைத்து சூழல்களும் இருப்பதால் காஸா மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் அச்சத்தில் உள்ளனர்.” எனத் தெரிவிக்கிறார் கலீல்.
தீவிர அழுத்தத்தின் காரணமாக தான் ஹமாஸ் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடுவது உட்பட எந்த வழியிலாவது தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கான அதன் தொடர் முயற்சிகள் ஒப்பந்தத்தை சீர்குலைத்து காஸா மக்களை மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்.” என்றார்.