பட மூலாதாரம், Getty Images
காஸாவிற்கான ஒரு புதிய அமைதித் திட்டம் குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தத் திட்டம் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. இஸ்ரேலிய சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அதற்கு ஈடாக, உயிருடன் இருக்கும் 20 இஸ்ரேலிய கைதிகளையும், இறந்ததாகக் கருதப்படும் இரண்டு டஜன் பணயக்கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று இத்திட்டம் கோருகிறது.
வெள்ளை மாளிகையின் 20 அம்ச முன்மொழிவு ஹமாஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கு அறிந்த பாலஸ்தீன வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
காஸாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும், எதிர்காலத்தில் ஒரு பாலத்தீன நாடு உருவாவதற்கான சாத்தியத்தை அனுமதிக்கிறது என்றும் இத்திட்டம் கூறுகிறது.
வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்தத் திட்டத்தை ‘அமைதிக்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்’ என்று விவரித்தார்.
ஆனால் ஹமாஸ் இந்தத் திட்டத்திற்கு உடன்படவில்லை என்றால், ‘ஹமாஸின் அச்சுறுத்தலை அழிக்கும் பணியை முடிக்க’ நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையை நிர்வகிக்கும் பாலத்தீன ஆணையம், அமெரிக்க அதிபரின் முயற்சிகளை ‘நேர்மையானது மற்றும் உறுதியானது’ என்று விவரித்துள்ளது.