படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்த 7 பணயக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி
ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இருதரப்பிலும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும் ஆவலில் குடும்பத்தினர் உணர்ச்சிமயமாக காட்சியளித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதி எய்ட்டன் ஹார்னை வரவேற்கும் ஆவலில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, முதல் 7 பேரில் ஒருவராக இஸ்ரேலிய பணயக்கைதி ஆலன் ஒஹெல்லை ஹமாஸ் விடுவித்த செய்தி அறிந்ததும் மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்
பாலத்தீன சிறைக்கைதிகள் விடுதலை
ஒப்பந்தப்படி, ஹமாஸ் 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். அவர்களில் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பேர் 2 தொகுதிகளாக விடுவிக்கப்பட்டனர்.
அதற்கு ஈடாக, இஸ்ரேல் 250 பாலத்தீன கைதிகளையும், தடுப்புக்காவலில் உள்ள 1,700 பாலத்தீனியர்களையும் விடுவிக்கும்.
இஸ்ரேல் சிறையில் இருந்து வெளியே வந்த பல வேன்கள் பாலத்தீன கைதிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்க ரமல்லா நகரில் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து வந்த வேன்கள். விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் அந்த வேன்களில் ஏற்றிச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.
படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளை வரவேற்க காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள்.
ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் கூடிய மக்கள்
முன்னதாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வருகைக்காக அவர்களது உறவினர்கள் டெல் அவிவ் நகரில் உள்ள ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் அதிகாலை 5 மணியளவிலேயே திரளாக கூடிவிட்டனர். அங்குள்ள பெரிய திரைகளில் பணயக்கைதிகள் விடுதலை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அந்த சதுக்கத்தில் காத்திருந்த மக்களின் புகைப்படத்தை ஒரு சமூக வலைதளப் பயனர் பகிர்ந்துள்ளார். ‘சதுக்கம் பணயக்கைதிகளின் வருகைக்காக காத்திருக்கிறது’ என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
இஸ்ரேலுக்கு புறப்படும் முன்பாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் தொடரும் என்றும், காஸாவிற்கான அமைதி வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்கிறார்
“யூதர்கள், இஸ்லாமியர்கள் அல்லது அரேபியர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் குறிக்கோள். இஸ்ரேலுக்குப் பிறகு, நான் எகிப்துக்குச் செல்வேன். அங்குள்ள மிகவும் சக்திவாய்ந்த, பெரிய, பணக்கார நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்,” என்று டிரம்ப் கூறினார்.
இஸ்ரேலுக்கு வந்த பிறகு, டிரம்ப் திங்கட்கிழமை எகிப்துக்குச் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் காஸா பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்ளார்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரும் எகிப்துக்கு வந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவரும் பங்கேற்க உள்ளார்.
பாதியில் தடைபட்ட டிரம்ப் உரை
அதிபர் டிரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
“மகிழ்ச்சி மற்றும் அதிகரித்துள்ள நம்பிக்கையுடன் இந்த நாளில் நாங்கள் ஒன்றுகூடுகிறோம்.” என தனது உரையை தொடங்கினார்.
மேலும், “துப்பாக்கி சத்தங்கள் நின்றுவிட்டன. இப்பகுதி இப்போது அமைதியாக இருக்கின்றன, எப்போதும் இப்படியே இருக்கும் என நம்புவோம்” என்றார்.
டிரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போதே இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘பாலத்தீனத்தை அங்கீகரியுங்கள்’ என எழுதப்பட்டிருந்த காகிதத்தை காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் இவரை வெளியேற்றினர். இதற்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இதனால் டிரம்பின் உரை சிறிது நேரம் தடைபட்டது.
சபாநாயகர் அமிர் ஒஹானா உத்தரவு பிறப்பித்த பிறகு டிரம்ப் தனது உரையை தொடர்ந்தார்.
மீண்டு தனது உரையை தொடர்ந்த அவர், “இஸ்ரேல் இப்போது வலிமையாக மாறிவிட்டது” என்றார்.
அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த நிகழ்வையும் டிரம்ப் நினைவு கூர்ந்தார். அந்த தாக்குதலை ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூதர்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல்களில் ஒன்று என்று விவரித்தார்.
“அந்த இரண்டு சபதங்களில் அமெரிக்கா உங்களுடன் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை ஒருபோதும் மறக்காதீர்கள்” எனக் கூறி, இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தார்.
இஸ்ரேலிய மக்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இருந்த வேதனையான கனவு இப்போது முடிந்துவிட்டது என்றும் அவர் கூறுனார்.
மேலும் “இது இப்போது இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கிற்கும் மிகவும் உற்சாகமான நேரம்” என்றார்.
அதன் பிறகு அமைதிக்கான உச்சி மாநாட்டிற்காக எகிப்து புறப்பட்டார் அதிபர் டிரம்ப்.
எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள்
பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர் ஹுசைன் அல்-ஷேக் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து, காஸாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தார்.
பாலத்தீன விடுதலை அமைப்பு (PLO), காஸா பிரச்னையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் டோனி பிளேருடன் சேர்ந்து, மற்ற நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால், காஸா விவகாரங்களை மேற்பார்வையிடும் குழுவில் டோனி பிளேர் இருப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறினார்.
இஸ்ரேல் பயணத்துக்கு புறப்படும் முன் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், ‘போர்களுக்கு தீர்வு காணவும், அமைதியை நிலைநாட்டவும் தான் நான் பணியாற்றுகிறேன்’ என்று கூறினார்.
‘இது நான் தீர்த்து வைத்த எட்டாவது போர். நான் இதை நோபல் அமைதி பரிசுக்காக அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்கிறேன்’ என்றும் அவர் கூறினார்.
டிரம்புக்கும் பிற தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற உள்ளன.
இந்த மாநாடு ‘காஸா அமைதி உச்சிமாநாடு’ என்று அழைக்கப்படுகிறது.
காஸா போருக்கு முடிவு காண்வதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காஸாவில் உணவு விநியோக லாரிகளுக்கு அருகில் மக்கள் கூடி, அவற்றை எடுத்துச் செல்லும் காட்சி.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ், தானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார்.
பாலத்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவிற்கு பிரிட்டன் ரூ.216 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது.