பட மூலாதாரம், Getty Images
செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா “அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்” எனக் கூறினார்.
பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இப்படிப் பேசியிருந்தார். இது குறித்துப் பேசிய நேதன்யாகு, “இது கவனிக்கத் தகுந்த விவகாரம்” என்றதோடு, “இதுபோன்ற சிந்தனைகள் மத்தியக் கிழக்கின் வடிவத்தை மாற்றியமைப்பதோடு, அமைதியைக் கொண்டு வரும்” என்றார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியக் கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து இதற்கான எதிர்வினைகளும் வந்துள்ளன.
காஸா இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் காஸா ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாலத்தீன பகுதிகளில் நடந்த தேர்தல்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதோடு, அதன் போட்டியாளரான ஃபத்தா அமைப்பைப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியதன் மூலம் காஸாவில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்தது.
ஹமாஸ் அமைப்பானது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில மேற்குலக நாடுகளால் தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவின் 41 கி.மீ நீளமும் 10 கி.மீ அகலமும் கொண்ட நிலப்பரப்பு, சுற்றிலும் இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியத் தரைக்கடலால் சூழப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பல பெரிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதலின்போதும் இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் காஸாவில் வசிக்கும் பாலத்தீனர்களே.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காஸா மீது தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் 15 மாத தொடர் தாக்குதலுக்கு வித்திட்டது. இதில் 47,540 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும் என்று ஹமாஸால் இயக்கப்படும் மருத்துவ அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. பல மாதங்களாக நடைபெற்ற மறைமுகமான கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது, ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது ஆகியவற்றுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது போன்ற உடன்படிக்கைகள் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எட்டப்பட்டன.
காஸா முனையை டிரம்ப் எடுத்துக் கொள்ள முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
காஸா முனையைக் கைப்பற்றுவது குறித்து டிரம்ப் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பது இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுள்ளது.
பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தத் திட்டத்தைப் புறக்கணித்துள்ளன. பாலத்தீனர்களை இடம்பெயரச் செய்யும் எந்த முடிவிலும் தங்களின் நிலைப்பாடு தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருப்பதாக வளைகுடா பிராந்திய நாடான சௌதி அரேபியா கூறியுள்ளது. ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளும் பாலத்தீனர்களை வெளியேற்றுவதற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
சர்வதேச சட்டங்களின்படி மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தீனர்களும் அரபு நாடுகளும் டிரம்பின் இந்தத் திட்டத்தைக் கட்டாய வெளியேற்றம் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சற்றும் குறையாத ஒன்று எனக் கருதுகின்றன.
அமெரிக்காவை பொருத்தவரை, டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்புவரை, வெளிவிவகாரங்களில் தலையிடுவது முதன்மையாக இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம், குடியேற்றம் போன்றவையே டிரம்ப் ஆதரவாளர்களின் முக்கியப் பிரச்னையாக இருந்தன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான இப்சோஸ், யுகோவ் கருத்துக் கணிப்புகளின்படி, வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தும் அரசை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் எனக் கூறப்பட்டது.
காஸாவை கைப்பற்ற வேண்டுமென்ற டிரம்பின் நோக்கத்தில், அமெரிக்க படைகளை அனுப்பும் நடவடிக்கையும் உள்ளடங்குமா என்பது தெரியவில்லை. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், “என்ன தேவையோ அதைச் செய்வோம்” என்று பதிலளித்தார்.
அரசியலமைப்பின்படி ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆயுத விற்பனையை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும், அதோடு அது தொடர்பான குழுக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
வாஷிங்டனில் உள்ள மத்தியக் கிழக்கு நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் ஹசன் மீயம்னா இது குறித்துப் பேசுகையில், “டிரம்ப் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அவருக்கு நாடாளுமன்றத்தின் வலுவான ஆதரவு இருக்கிறது” என்றார்.
பேராசிரியர் மீயம்னாவின் கூற்றுப்படி, காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்காகப் பெரும் தொகையைச் செலவிடுவது பற்றி டிரம்ப் இதுவரை எதுவும் பேசவில்லை, இதுகுறித்த திட்டங்கள் இன்னமும் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன. அதோடு, அரபு நாடுகளிடம் இருந்து நிதியைப் பெற்று காஸா மற்றும் மேற்குக் கரையையை மறுகட்டமைப்பு செய்ய அவர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுவதாக மீயம்னா குறிப்பிட்டார்.
வரலாற்று ரீதியாக காஸா முனை யாருக்கு சொந்தம்?
பட மூலாதாரம், Reuters
கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்படுவதற்கு முன்னதாக காஸா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது. தன்னைச் சுதந்திர நாடாக இஸ்ரேல் அறிவித்துக் கொண்டதற்கு மறுநாளே ஐந்து அரபுலக நாடுகளின் ராணுவங்கள் அதைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தின.
கடந்த 1949ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக சண்டை முடிவுக்கு வந்தபோது பிராந்தியத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது. ஒப்பந்தத்தின்படி, காஸா முனையை எகிப்து ஆக்கிரமித்திருந்தது, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும், மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலும் ஆக்கிரமித்திருந்தன.
பின்னர், 1967ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் காஸாவில் இருந்து எகிப்து விரட்டப்பட்டு, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டு காஸாவின் பாலத்தீன மக்கள் ராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.
இஸ்ரேல் 2005ஆம் ஆண்டில் தனது ராணுவத்தையும், இஸ்ரேலிய குடியேறிகளையும் முழுமையாக விலக்கிக் கொண்டது. ஆனாலும் எல்லைகள், வான் எல்லை கடற்கரை போன்றவற்றில் தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்கவைத்துக் கொண்டது. இது நடைமுறையில் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மீதான முழுமையான கட்டுப்பாட்டை இஸ்ரேலுக்கு வழங்கியது.
காஸா மீது இஸ்ரேல் கொண்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு, காஸாவை இப்போதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. 2006ஆம் ஆண்டு பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இதன் பின்னர் வந்த ஆண்டில் அதன் போட்டிக்குழுக்களை கடுமையான சண்டையின் மூலம் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியது.
இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலும் எகிப்தும் கடுமையான தடைகளை விதித்தன. இஸ்ரேல் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை இறுக்கியது.
இதன் பிறகு வந்த ஆண்டுகளில் ஹமாஸ், இஸ்ரேல் இடையே, 2008-09, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் பல பெரிய மோதல்கள் நிகழ்ந்தன. 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் பெரிய மோதல் ஒன்று தொடங்கியது. பின்னர் 11 நாட்கள் கழித்து போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.
காஸாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, காஸாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிராந்தியங்களில் அறியப்படாத அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, மூன்று பில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய் வளம் அங்கு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
“நிலவியலாளர்கள், இயற்கை வளப் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலத்தீன பிராந்தியத்தில் மேற்குக் கரையின் சி-ஏரியா மற்றும் காஸாவின் மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளப்படுகையின் மீது அமைந்துள்ளது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லாவன்ட் படுகையில் கண்டறியப்பட்டுள்ள புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படுகைகளைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை “2017ஆம் ஆண்டு விலை நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 39.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (453 பில்லியன் அமெரிக்க டாலர்) 122 டிரில்லியன் கனஅடி அளவுக்கான இயற்கை எரிவாயு மற்றும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (71 பில்லியன் அமெரிக்கடாலர்) மதிப்பிலான 1.7 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் இருக்கலாம்” எனக் கூறுகிறது.
டிரம்பின் பரிந்துரைகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை எடுப்பது தொடர்பானதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். மற்றவர்களின் கூற்றுப்படி காஸா மீதான அவரது விருப்பங்களுக்கு பொருளாதாரத்தைக் காட்டிலும் அரசியல் காரணங்களே இருப்பதாகக் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
புவிசார் அரசியலில் சிறப்பு ஆர்வம் கொண்ட எரிசக்திக் கொள்கை நிபுணரான லாரி ஹேடன் பிபிசியிடம் பேசுகையில் காஸாவின் கடலோரப் படுகைகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது 2000ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே கண்டறியப்பட்டதாகவும், அப்போதிருந்தே அப்பகுதியின் வளர்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறுகிறார். காஸாவை கையகப்படுத்துவது குறித்து டிரம்ப் முன்மொழிவுகளை வைத்திருப்பதற்கு “இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்” என்றாலும் இது மட்டுமே காரணமாக இருக்காது என்று கூறினார்.
“காஸாவில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அளவிடுவதற்கு இன்னமும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் மற்றும் நமது எதிர்பார்ப்புகளையும் மேலாண்மை செய்ய வேண்டும்” என்கிறார் லாரி.
காஸாவை சேர்ந்த மற்றொரு பொருளாதார நிபுணரான மஹர் டாபா பேசுகையில், “காஸாவுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் வளத்தை அதிகமாகக் கொண்ட வளைகுடா உள்ளிட்ட நாடுகள் டிரம்பின் வசம் உள்ளன. காஸா மீதான கவனக் குவிப்புக்கு அரசியல் காரணங்களே இருக்கின்றன” என்றார்.
பிபிசியிடம் பேசிய இஸ்ரேலுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான டென்னிஸ் ராஸ், “காஸாவில் நிலவும் பிரச்சனையை ஒரு ரியல் எஸ்டேட் கட்டட பிரச்னையைப் போல டிரம்ப் பார்ப்பதாக” குறிப்பிட்டார்.
“எப்போதுமே வறுமையில் வாடும் இப்பகுதியை நாங்கள் மாற்றிக் காட்டப் போகிறோம்” என டிரம்ப் கூறியதைச் சுட்டிக்காட்டிய டென்னிஸ், அவர் இதில் மிகத் தீவிரமாக இருப்பதாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
டிரம்பின் அறிவிப்பு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் முன்மொழிவை நேரடியாகத் தங்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாகவே பாலத்தீனர்கள் பார்க்கின்றனர்.
பாலத்தீன அதிபரான முகமது அப்பாஸ், காஸாவில் இருந்து பாலத்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அழைப்பை “சர்வதேச சட்டங்களின் மீதான தீவிர விதிமீறல்” எனவும் அப்பாஸ் குறிப்பிடுகிறார்.
“எங்கள் மக்களின் உரிமைகள் மீதான எந்த மீறலையும் அனுமதிக்க முடியாது, நாங்கள் பல்லாண்டுக் காலமாகச் சிரமப்பட்டிருக்கிறோம், மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம்” என்று அப்பாஸ் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலத்தீன குழுவின் தலைவரான ரியாத் மன்சூர் பேசுகையில் பாலத்தீனர்கள் ஒரு காலத்தில் தங்கள் வீடுகளாக இருந்தவற்றைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். “பாலத்தீனர்களை நல்ல இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் தங்களின் அசலான வாழ்விடங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்கட்டும்” எனவும் மன்சூர் குறிப்பிட்டார்.
காஸா முனையில் வசிக்கும் சாதாரண பாலத்தீன மக்கள் இதை தண்டனையின் வடிவமாகப் பார்க்கின்றனர். காஸாவில் இருந்து பிபிசியிடம் பேசிய 43 வயதான மகமூத் அல்மாஸ்ரி காஸாவில் வசிக்கும் ஒருவர்கூட டிரம்ப் கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்றார்.
“நாங்கள் இடிபாடுகளின் குவியலுக்கு நடுவே இருந்தாலும் சரி, எங்கள் வீடுகளை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம், டிரம்ப் போன்றோர் அமெரிக்கர்கள் யாரையாவது அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறி நிரந்தரமாக வேறு எங்கேனும் குடியேறுமாறு கேட்பார்களா?” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
காஸாவில் வசிக்கும் 28 வயது பெண்ணான செனபெல் அல்கவுல் டிரம்பின் முன்மொழிவுகளை “மிகவும் அபாயகரமானது” எனக் குறிப்பிடுகிறார். “வலி, பட்டினி, அழிவு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்வதால் காஸா மீதான எங்கள் உரிமையை எளிதாக விட்டுத் தருவோம் என்று டிரம்ப் நினைக்கிறார்” எனவும் செனபெல் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய பாலத்தீன வழக்கறிஞரான யூஸ்ஸெஃப் அல்யாதத், “காஸாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை, அழுத்தம் கொடுக்கும் கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இது காஸா மக்களைத் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவொரு தீங்கிழைக்கும் நடவடிக்கை” என்று குறிப்பிடுகிறார்.
நெவின் அப்தெலால் போன்ற பாலத்தீனர்கள் மறுகட்டமைப்பு திட்டம் என்ற ஒன்று இருக்குமானால், அதை பாலத்தீனர்களின் கரங்களால் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மறுகட்டமைப்பு முடியும் வரை அங்கு தற்போது இருக்கும் நல்ல இடங்களுக்கு மக்கள் நகர வேண்டும். ஆனால் ஒருவரும் வெளியேறக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு