காஸாவை “அமெரிக்கா கையகப்படுத்தி சொந்தமாக்கிக் கொண்டு, அதன் மக்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும்” என்ற டொனால்ட் டிரம்பின் திட்டம் பலிக்காது.
ஏனெனில் அந்தத் திட்டத்திற்கு அரபு நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. ஆனால் அரபு நாடுகள் இத்திட்டத்தை நிராகரித்துள்ளன.
காஸாவில் இருந்து வெளியேற்றும் மக்களை, ஜோர்டான் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அனுப்ப டிரம்ப் விரும்பினார். ஆனால், அந்த இரண்டு நாடுகளுமே அவரது திட்டத்தை எதிர்க்கின்றன. அதேபோல, அவரது திட்டத்திற்கான செலவுகளை சௌதி அரேபியா ஏற்கும் என எதிர்பார்த்தார். ஆனால், சௌதியும் இதை எதிர்த்துள்ளது.
மறுபுறம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மேற்கத்திய நட்பு நாடுகளும் இந்த யோசனைக்கு எதிராக உள்ளன. காஸாவில் உள்ள சில பாலத்தீனர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வெளியேற விரும்பலாம். ஆனால் 10 லட்சம் மக்கள் வெளியேறினாலும், 12 லட்சம் மக்கள் அங்குதான் இருப்பார்கள்.
அப்படியிருக்கையில், “மத்திய கிழக்கின் சொர்க்கபுரி” என டிரம்ப் அழைத்த காஸாவின் புதிய உரிமையாளராகும் அமெரிக்கா, அதன் தற்போதைய மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2003இல் இதேபோல் இராக்கில் அமெரிக்கா தலையிட்டு பேரழிவு ஏற்பட்டதற்குப் பிறகு, டிரம்பின் இந்தத் திட்டத்திற்குத் தற்போது அமெரிக்காவில் பெரிய அளவில் வரவேற்பு இருக்காது.
மேலும், இரு நாடு தீர்வு என்ற நீண்டகாலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு முடிவு கட்டுவதாக இது அமையும்.
ரஷ்யா, சீனாவுக்கு துணிச்சலை தரும்
இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திரமான பாலத்தீன அரசை நிறுவுவதன் மூலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற எதிர்பார்ப்புக்கு இது முடிவு கட்டும்.
நெதன்யாகு அரசாங்கம் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்க்கிறது. பல ஆண்டுகளாக தோல்வியடைந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, “இரு நாடுகள்” என்பது வெற்று முழக்கமாக மாறியது.
ஆனால், இது 1990களின் முற்பகுதியில் இருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையத் திட்டமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போதைய டிரம்பின் திட்டம் சர்வதேச சட்டத்தையும் மீறும்.
அமெரிக்கா சர்வதேச விதிகளை நம்புவதையும் ஆதரிப்பதையும் நிறுத்தினால், அது பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். யுக்ரேனில் நிலத்தைக் கையகப்படுத்த ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்குவிக்கப்படலாம். மேலும் தைவானை கைப்பற்ற முயல்வதில் சீனா மேலும் ஆக்ரோஷமாக மாறக்கூடும். அடிப்படையில், அனைவரும் பின்பற்றும் சர்வதேச விதிகள் இல்லாமல், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்த மிகவும் துணிச்சலாகச் செயல்படக்கூடும்.
மத்திய கிழக்கில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
வாஷிங்டனில், மகிழ்ச்சியாகத் தோன்றிய பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில், டிரம்ப் இதைச் சொன்ன விதத்தில் இருந்து, இது நடக்க வாய்ப்பில்லை என்பது புரிகிறது. அப்படியிருக்க இதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
டிரம்பின் கருத்துகள் எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், அவை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் இந்தக் கேள்விக்கான பதில்.
ஏனென்றால் டிரம்ப் இப்போது உலகின் மிக சக்திவாய்ந்த நபரான, அமெரிக்காவின் அதிபராக உள்ளார். அவர் இனி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரோ அல்லது தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க முயலும் அரசியல்வாதியோ அல்ல.
டிரம்பின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்புக்குப் பிறகு விரைவாக ஏற்படக் கூடிய விளைவுகளால், ஏற்கெனவே காஸாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பலவீனமான போர்நிறுத்தம் சீர்குலைந்து பலவீனமடையக்கூடும்.
இது “போர் நிறுத்தத்தின் முடிவாக இருக்கலாம்” என்று அரபு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு மூத்த நபர் என்னிடம் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி, எதிர்காலத்தில் காஸா எவ்வாறு ஆளப்படும் என்பதற்கான தெளிவான திட்டம் இல்லாததும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பலவீனமான புள்ளியாக உள்ளது.
இதனிடையில், தற்போது டிரம்ப் ஒரு திட்டத்தை வழங்கியுள்ளார். அது நிறைவேறாவிட்டாலும்கூட, பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மத்திய தரைக் கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடையிலான அனைத்து நிலங்களும், ஒருவேளை அதற்கு அப்பால் உள்ள பகுதிகளும், கடவுள் கொடுத்த யூத உடைமை என்று நம்பும் தீவிர தேசியவாத யூத கடும்போக்குவாதிகளின் திட்டங்களையும் கனவுகளையும் இத்திட்டம் வளர்க்கும்.
மறுபுறம், இந்தத் தீவிர தேசியவாத யூத கடும்போக்குவாதிகளின் தலைவர்கள், நெதன்யாகு அரசின் ஒரு பகுதியாக உள்ளனர். அவரை அதிகாரத்தில் வைத்திருக்க அவர்கள் உதவுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இறுதியில் பாலத்தீன மக்களை அகற்றிவிட்டு அவர்களுக்கு பதிலாக யூத மக்களைக் கொண்டு வர முடியும் என்ற நோக்கத்தோடு, காஸா யுத்தம் தொடர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
மேலும், அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு, காஸாவின் எதிர்காலத்திற்கான தீர்வை டிரம்பின் திட்டம் வழங்கியதாக நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
“எங்கள் நிலத்தில் மிகக் கொடூரமான படுகொலைகளை யார் செய்தாலும் அவர்கள் தங்கள் நிலத்தை நிரந்தரமாக இழக்க நேரிடும். இப்போது கடவுளின் உதவியுடன் பாலத்தீன நாடு என்ற ஆபத்தான யோசனையை முற்றிலுமாக அகற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று அவரது அறிக்கை கூறுகிறது.
இஸ்ரேலில் உள்ள மையவாத எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தத் திட்டம் குறித்துப் பெரிதாக ஆர்வமின்றிக் காணப்படுகின்றனர். ஒருவேளை எதிர்காலத்தில் பிரச்னை ஏற்படலாம் என அவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனாலும், இந்தத் திட்டத்திற்கு ஒரு கண்ணியமான வரவேற்பை அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், ஹமாஸ் மற்றும் பிற பாலத்தீன ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஒருவித பலத்தை வெளிப்படுத்தி, டிரம்புக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தை உணரலாம்.
பாலத்தீனர்களைப் பொறுத்தவரை, இஸ்ரேலுடனான மோதல் என்பது, சொத்துகளை அப்புறப்படுத்துதல் மற்றும் அவர்கள் அல்-நக்பா என்று அழைப்பதன் நினைவால், அதாவது “பேரழிவு” என்று அழைப்பதன் காரணமாக ஏற்படுகிறது.
கடந்த 1948இல் இஸ்ரேல் தனது சுதந்திரப் போரில் வெற்றி பெற்றபோது பாலத்தீனர்கள் பெருமளவில் வெளியேறியதை இது குறிக்கிறது. 1948ஆம் ஆண்டு நடந்த போரின்போது, 700,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் வெளியேறினர் அல்லது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற இஸ்ரேலிய படைகளால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஒருபோதும் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் இஸ்ரேல் அவர்களின் சொத்துகளைக் கைப்பற்ற சட்டங்களை இயற்றியது. எனவே, அதேபோன்று இப்போதும் நடக்கலாம் என்ற பயம் ஏற்படும்.
காஸாவை அழித்து மக்களை வெளியேற்ற, இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரைப் பயன்படுத்துகிறது என்று பல பாலத்தீனர்கள் ஏற்கெனவே நம்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால், இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக பாலத்தீனர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் இப்போது டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார் என்று அவர்கள் நம்பலாம்.
டிரம்பின் திட்டம் என்ன?
டிரம்ப் ஏதாவது சொல்வதால், அது உண்மையாகவோ அல்லது உறுதியாகவோ நடந்துவிடாது. அவரது அறிக்கைகள் பெரும்பாலும் அமெரிக்காவின் உறுதியான கொள்கைகளைக் காட்டிலும், ரியல் எஸ்டேட் பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் நடைபெறும் சூதாட்ட நகர்வுகளைப் போலவே இருக்கின்றன.
ஒருவேளை டிரம்ப் மற்றொரு திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட இவ்வாறு செய்யலாம். அது மட்டுமின்றி, அவர் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல விரும்புகிறார் என்ற வதந்தியும் பரவுகிறது.
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முயன்ற பலர், அதில் வெற்றி பெறாவிட்டாலும், அவர்களின் முயற்சிகளுக்காக, அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் காஸா அறிவிப்பை உலகம் கவனித்துக் கொண்டிருந்தபோது, மறுபுறம், இரானுடன் “சரிபார்க்கப்பட்ட அணுசக்தி அமைதி ஒப்பந்தம்” வேண்டும் என்ற தனது விருப்பத்தை, ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
இரானின் தலைவர்கள் அணு ஆயுதங்களை விரும்பவில்லை என்று மறுக்கிறார்கள். ஆனால் தெஹ்ரானில் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணரப்படுவதால் ஒரு தடுப்பாக அவை தேவைப்படுமா என்பது குறித்து ஒரு வெளிப்படையான விவாதம் நடந்துள்ளது.
பல ஆண்டுகளாக, இஸ்ரேலின் உதவியுடன் அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்களை அழிக்க வேண்டும் என்று நெதன்யாகு விரும்பினார். இரானுடன் ஒப்பந்தம் செய்வது அவரது திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை.
மேலும், டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், பராக் ஒபாமாவின் நிர்வாகம் இரானுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளுமாறு நெதன்யாகு நீண்ட மற்றும் வெற்றிகரமான பிரசாரத்தை மேற்கொண்டார்.
இரானியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, மறுபுறம் இஸ்ரேலிய தீவிர வலதுசாரிகளை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டுமென டிரம்ப் நினைத்திருந்தால், அவர் அதில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் அவரது நடவடிக்கைகள் நிச்சயமற்ற சூழலை உருவாக்கி, ஏற்கெனவே கொந்தளிப்பான பகுதியில் மேலும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு