கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தோஹாவில் ஹமாஸ் தலைவரும் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவருமான கலீல் அல்-ஹயா-வை நான் நேர்காணல் எடுத்தேன். செவ்வாய்கிழமை மதியம் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய கட்டடத்திலிருந்து, வெகு தொலைவில் இல்லாத ஒரு வீட்டில் நான் அவரை சந்தித்தேன்.
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகித்தவர் அல்-ஹயா. கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்கு செய்திகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் அல்-ஹயா முக்கிய பங்கு வகித்தார்.
போர் நிறுத்தம் சாத்தியம் என எதிர்பார்க்கப்பட்ட தருணங்களில், அல்-ஹயாவும் செவ்வாய்கிழமை பிற்பகல் குறிவைக்கப்பட்ட மற்ற சிலரும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடமிருந்து சிறிது தொலைவிலேயே இருந்தனர்.
அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அல்-ஹயாவும் ஹமாஸின் மற்ற முக்கிய தலைவர்களும் காஸாவில் போரை நிறுத்துவது தொடர்பாகவும் மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் அமெரிக்காவின் ராஜ்ஜிய முன்மொழிவுகள் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் துரிதமாக பொறுப்பேற்றுக்கொண்டது, ஹமாஸ் தலைமையை குறிவைப்பதற்காக அவர்களை ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான தந்திரம் தான் அமெரிக்காவின் இந்த சமீபத்திய முன்மொழிவுகளா என்ற யூகம் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
கத்தார் பாதுகாப்பானதா?
கடந்தாண்டு அக்டோபர் 3ம் தேதி ஓர் வீட்டில் எங்களின் சந்திப்புக்காக கலீல் அல்-ஹயா நடந்துவந்தார், அவருக்கு குறைவான பாதுகாப்பே இருப்பதைக் கண்டு நான் ஆச்சர்யம் அடைந்தேன். எங்களின் போன்களை அங்கே ஒப்படைக்க வேண்டியிருந்தது, ஓரிரு மெய்காப்பாளர்கள் மட்டும் வீட்டில் அவருடன் வந்தனர்.
வெளியே, சாதாரண உடையில் எஸ்யூவி வாகனத்தில் அமர்ந்து கத்தார் நாட்டு போலீஸ் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான். நூற்றுக்கணக்கான மெய்காப்பாளர்களால் வான்வழி தாக்குதல்களை தடுக்க முடியாமல் போகலாம், ஆனால் அல்-ஹயாவும் அவருடைய ஆட்களும் நிதானமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தனர்.
கத்தார் பாதுகாப்பான இடம் என நம்பப்பட்டதுதான் இங்கே முக்கியம், திறந்தவெளியில் நடமாடுவதற்கான பாதுகாப்பை அவர்கள் உணர்ந்தனர்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, இஸ்மாயில் ஹனியே
சில மாதங்களுக்கு முன்பு, 31 ஜூலை 2024 அன்று, டெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்தது. மசூத் பெஸெஷ்கியனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொள்ள அவர் வந்திருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
காஸாவில் போர் தீவிரமான நிலையில், கலீல் அல்-ஹயாவுடன் அதே அறையில் இருப்பது ஆபத்தானதாக இருக்குமா என நான் கருதினேன். எனினும், கத்தார் அதற்கு (ஆபத்துகளுக்கு) அப்பாற்பட்டது என அவரைப் போன்று நானும் நம்பினேன்.
கடந்த சில பத்தாண்டுகளாக, எதிரிகள் கூட ஒப்பந்தம் செய்துகொள்ள நினைக்கும், மத்திய கிழக்கின் ஸ்விட்சர்லாந்து என தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கத்தார் முயற்சித்து வருகிறது,
ஆப்கன் தாலிபன்களிடம் அமெரிக்கா தோஹாவில் தான் பேச்சுவார்த்தை நடத்தியது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கான மையமாக கத்தார் விளங்குகின்றது.
அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் வழிநடத்தும் அமைதி முயற்சிகள் மோசமாக தோல்வியை தழுவின. ஆனால், இப்போது அவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. மூத்த மேற்கத்திய ராஜ்ஜிய நிபுணர் ஒருவரின் வார்த்தைகளில் சொல்லப்போனால், “ராஜ்ஜிய உறவே இல்லை” எனலாம்.
காஸாவில் தொடரும் தாக்குதல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய மக்களிடம் கூறுகையில், தங்களின் எதிரிகள் இனி நிம்மதியாக தூங்க முடியாது என்றும், அக்டோபர் 7 தாக்குதல்களுக்காக அவர்கள் விலை கொடுக்க வேண்டிவரும் என்றும் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஹமாஸ் தலைவர் ஹலீல் அல்-கயா
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் வேகம் அதிகரித்து வருகிறது. தோஹாவில் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்கள் முன்பு, காஸா நகரில் உள்ள அனைத்து பாலத்தீனர்களும் வெளியேறி, தெற்கு நோக்கி இடம்பெயருமாறு இஸ்ரேலிய ராணுவமான ஐடிஎஃப் கூறியிருந்தது. இதனால் சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என நம்பப்படுகிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தனது உரையில் நெதன்யாகு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களுக்கு கூறுகையில், “இந்த கொலைகாரர்களால் (ஹமாஸ்) நீங்கள் தடம் புரளாதீர்கள். உங்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்துக்காக எழுந்து நில்லுங்கள். எங்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதிபர் டிரம்பின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளுங்கள். கவலை வேண்டாம், உங்களால் முடியும், வேறுவிதமான எதிர்காலத்துக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம், ஆனால், இவர்களை (ஹமாஸ்) நீங்கள் அப்புறப்படுத்த வேண்டும். அதை நீங்கள் செய்தால் நம்முடைய பொதுவான எதிர்காலத்துக்கு கட்டுப்பாடே இல்லை,” என்றார்.
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அவருடைய வார்த்தைகளை காஸாவில் உள்ள பாலத்தீனர்கள் கேட்டிருந்தால், அதை சிறிதும் நம்பியிருக்க மாட்டார்கள். பல ஆயிரக்கணக்கான அத்தகைய மக்களின் வீடுகள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை இஸ்ரேல் அழித்தது.
காஸா ஏற்கெனவே பட்டினியாலும் காஸா நகரம் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டு, அப்பிராந்தியத்தில் மனிதநேய பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்டாயமாக ஏராளமானவர்களை இடம்பெயரச் செய்வது, மக்கள் மீதான இஸ்ரேலின் கடும் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
இஸ்ரேல் ஏற்கெனவே காஸாவில் 60,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களை கொன்றுள்ளது, அவர்களுள் ஏராளமானோர் குடிமக்கள். போர் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் ஏற்கெனவே நெதன்யாகு கைது வாரண்டை எதிர்கொண்டு வருகிறார், மேலும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்காக சர்வதேச நீதிமன்றத்தால் இஸ்ரேல் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தோஹாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், நெதன்யாகு மற்றும் அவருடைய அரசாங்கம் காஸாவில் மட்டுமல்லாது, அனைத்து நிலைகளில் இருந்தும் முன்னேறி தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதற்கான அறிகுறியே. அமெரிக்காவின் ஆதரவுடன் தங்கள் ராணுவம் நினைத்ததை செய்ய முடியும் என இஸ்ரேல் நம்புகின்றது.
தோஹாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா இஸ்ரேலை அரிதாக கண்டித்துள்ளது. கத்தார் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக உள்ளது, அமெரிக்காவின் பெரிய ராணுவ தளம் கத்தாரில் உள்ளது, மேலும் அமெரிக்காவில் பெரிதளவில் முதலீடு செய்துள்ள நாடாக கத்தார் உள்ளது.
ஆனால், தான் கேட்கப்பட வேண்டிய ஒரே தலைவராக கருதும் டொனால்ட் டிரம்ப், இதனை ராஜ்ஜிய ரீதியில் சரிப்படுத்திக் கொள்வார் என நெதன்யாகு நினைப்பதாக தோன்றுகிறது.
காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. ஐ.நாவில் இம்மாத இறுதியில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மற்ற மேற்கத்திய நாடுகள் பாலத்தீனத்தை சுதந்திரமான நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கு எதிர்வினையாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதியை மேற்கு கரையுடன் இணைப்பதற்கான தங்கள் கோரிக்கையை நெதன்யாகுவின் தீவிர தேசியவாத அமைச்சரவையின் கூட்டணி கட்சியினர் வலுப்படுத்துவர்.