பட மூலாதாரம், BASHAR TALEB/AFP via Getty Images
இரண்டு ஆண்டுகளாக நீடித்த காஸா போர், அந்த சிறிய பகுதியைக் கடந்தும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மோதல் லெபனான், சிரியா, இரான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இந்தப் போர் மத்திய கிழக்குப் பகுதியின் அரசியலை மட்டுமல்லாமல், உலகத்துடனான அந்தப் பகுதியின் உறவையும் மாற்றி அமைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் (UCL) அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணை பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஜூலி நார்மன் இதுபற்றிப் பேசும்போது, “இந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பகுதியும் உலகமும் எவ்வளவு மாறப்போகின்றன என்பதை நாம் மிகைப்படுத்திச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அதன் தாக்கம் மிக ஆழமானது” என்றார்.
2023 அக்டோபர் 7, ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகவும் மோசமான தாக்குதலாகும். இதில், சுமார் 1200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர்.
“இந்த தாக்குதல், இஸ்ரேலின் பாதுகாப்பு பலமானது என்ற நம்பிக்கையை உடைத்தது” என்று சிந்தனைக் குழுவான சாதம் ஹவுஸ் (Chatham House) அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க திட்ட இயக்குநர் டாக்டர் சனம் வாகில் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்தார்.
இரண்டு ஆண்டு யுத்தத்தின் தாக்கம்
காஸாவின் எல்லைகள், கடற்கரை மற்றும் வான்பரப்பை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், காஸாவில் ஒரு பெரும் ராணுவத் தாக்குதலை தொடங்கியது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சக தகவலின்படி, இரண்டு ஆண்டுகளில் 68,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை ஐக்கிய நாடு சபையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
காஸாவில் ஏற்பட்ட பேரழிவு, அதன் மக்கள் அனுபவித்த மன அழுத்தம் ஆகியவை கற்பனை செய்ய முடியாதவை என்றும், பல தலைமுறைகளுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார் டாக்டர் நார்மன். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலும், மக்களை பிணைகைதிகளாக்கியதும் சமூகத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன என்கிறார் அவர்.
பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP via Getty Images)
அந்த அக்டோபர் 7 நிகழ்வு அந்தப் பகுதியில் ‘டாமினோ எஃபக்ட்’ (domino effect) எனப்படும் தொடர் விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேல் காஸாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்த, ஹமாஸுடன் தொடர்பில் இருக்கும் ஆயுத குழுக்களான லெபனானின் ஹெஸ்பொலா மற்றும் யேமனின் ஹூத்தி ஆகியோரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
சிரியா மற்றும் ஹமாஸ் உள்ளிட்ட குழுக்கள் நீண்டகாலமாக இரான் ஆதரிக்கும் ‘ஆக்சிஸ் ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (Axis of Resistance)-ன் அங்கமாக இருக்கின்றன.
“இஸ்ரேல் இந்த அனைத்து குழுக்களிடமிருந்தும் வரும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முயற்சித்தது. ஆனால், அக்டோபர் 7க்குப் பிறகு, அது போதாது என்று இஸ்ரேல் முடிவு செய்தது” என்று கூறுகிறார் அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த மூன்று அதிபர்களின் வெளிநாட்டு கொள்கை வகுப்பில் பங்காற்றிய அரசியல்வாதி எலியட் அப்ராம்ஸ்.
“முதலில் ஹமாஸை தாக்கிய இஸ்ரேல், பின்னர் ஹெஸ்பொலாவையும் அதன்பின் இரானையும் தாக்கியது. இது அவர்களின் பாதுகாப்பு சூழ்நிலையைப் பற்றிய பகுப்பாய்வில் ஒரு முக்கிய மாற்றமாகும்” என்றும் அவர் கூறினார்.
2024 செப்டம்பரில், லெபனானில் உள்ள ஹெஸ்பொலா உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை இஸ்ரேல் வெடித்துத் தகர்த்தது.
இதற்குப் பிறகு, இஸ்ரேல் அந்த நாட்டில் குண்டுவீச்சைத் தொடங்கியது. பின்னர் தெற்கு பகுதியில் தரைவழித் தாக்குதலையும் ஆரம்பித்தது.
இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதல்களில், ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட உயர்பதவிகளில் இருந்த பல தலைவர்கள் உயிரிழந்தனர்; அந்த அமைப்பின் பெரும்பாலான அடிப்படை வசதிகளும் ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.
பட மூலாதாரம், AFP via Getty Images
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஹெஸ்பொலா மற்றும் இரானின் கூட்டாளியாக இருந்த சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஓர் எழுச்சியைத் தொடங்கினார்கள்.
அதனால் அங்கே 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பஷார் அல்-அசாத்தின் பதவி இரண்டே வாரங்களில் முடிவுக்கு வந்தது.
டாக்டர் நார்மன் சொல்வதன்படி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களும் சிரியாவின் உள்நாட்டு அழுத்தங்களும் பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
“ஹெஸ்பொலா மற்றும் இரான் பலவீனமடைந்ததால், பஷார் அல்-அசாத் அரசாங்கம் ஆதரவை இழந்துவிட்டது” என்று அவர் கூறுகிறார்.
இந்தக் காலகட்டத்தில், சிரியா எதிர்காலத்தில் தங்கள் மீது தாக்குதல்கள் நிகழத்தாமல் இருக்க அவர்களின் ராணுவத் தளங்களை இஸ்ரேல் தாக்கியது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் இஸ்லாமிய போராளியான புதிய சிரிய அதிபர் அஹ்மது அல்-ஷரா, தன் அரசு இஸ்ரேலுடன் போர் செய்ய விரும்பவில்லை என்றும், சிரிய நிலப்பரப்பை எந்த வெளிநாட்டு தாக்குதலுக்கும் பயன்படுத்த அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Rami Alsayed/NurPhoto via Getty Images
இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக மத்திய கிழக்கு பகுதியில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஹெஸ்பொலா அமைப்பின் நீண்ட தூர ஏவுகணைகளை உள்ளடக்கிய பெரிய ஆயுதக் கிடங்கு இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்தது.
“இஸ்ரேலும் இரானும் பல ஆண்டுகளாக மறைமுகமாகவும் மற்றவர்களின் மூலமாகவும் சண்டையிட்டாலும், நேரடியாக ஒருவரையொருவர் தாக்கியதில்லை” என்கிறார் எலியட் அப்ராம்ஸ்.
ஆனால் 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வான்வெளித் தாக்குதல்கள் நடக்குமளவுக்கு பதற்றம் அதிகரித்தது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இரானின் அணுசக்தி மையங்களை இஸ்ரேல் தாக்க, அது 12 நாள் யுத்தத்திற்கு வழிவகுத்தது.
அமெரிக்காவும் இதில் பங்கேற்று, நிலத்தடி தளங்களை அழிக்கும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசியது. பின்னர், கத்தாருடன் இணைந்து இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேலைகள் செய்தது.
பட மூலாதாரம், MENAHEM KAHANA/AFP via Getty Images
பெரிய அளவிலான தாக்கம்
இந்த நிகழ்வுகள் இஸ்ரேலைத் தாக்குவதற்காக இரான் உருவாக்கி பராமரித்து வந்த ஆயுதக் குழுக்களை அழித்துவிட்டன என்கிறார் எலியட் ஆப்ரம்ஸ். ஹமாஸ், ஹெஸ்பொலா மற்றும் இரான் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்கு பலவீனமடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நிகழ்வுகள் நடந்த வேகம் அந்தப் பகுதியையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனால் பெரும் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இரானின் மற்றொரு கூட்டாளியான ரஷ்யா, பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ச்சியால், அந்தப் பகுதியில் தங்களின் முக்கிய ஆதரவாளரை இழந்திருக்கிறது.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் தற்போதைய சிரிய அதிபர் அஹமது அல்-ஷரா இருவரும் சிரிய உள்நாட்டுப் போரின் போது எதிரிகளாக இருந்தனர். அந்த நேரத்தில், பஷார் அல்-அசாத்தை ஆதரிக்க ரஷ்யா தங்கள் ராணுவ வலிமையை பயன்படுத்தியது.
ரஷ்யாவுக்கு சிரியாவில் இரண்டு முக்கியமான ராணுவத் தளங்கள் உள்ளன. அவை ஆப்பிரிக்காவில் அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில், அதிபர் அஹமது அல்-ஷரா ரஷ்ய ராணுவத் தளங்களுக்கு அனுமதி வழங்குவாரா என்பதில் தெளிவில்லாமல் இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
2025 அக்டோபரில் ரஷ்ய அதிபர் புதினுடன் நடைபெற்ற சந்திப்பில், ரஷ்யாவின் ஆதரவையும் முதலீட்டையும் நாடிய அதிபர் ஷரா, “அனைத்து பழைய ஒப்பந்தங்களையும் மதிப்போம்” என்று கூறினார். இருப்பினும், அந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, மத்திய கிழக்குப் பகுதியில் சீனாவின் செல்வாக்கும் குறைந்துள்ளது.
“போருக்கு முன்பு, சீனா மத்திய கிழக்குப் பகுதியில் மத்தியஸ்தம் செய்யும் நாடாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. இரான் மற்றும் சௌதி அரேபியாவுக்கு இடையிலான தூதரக உறவுகளை மீட்டெடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கும் வித்திட்டது. ஆனால் காஸா போர் அமெரிக்காவின் கவனத்தை மீண்டும் மத்திய கிழக்குப் பக்கமாக திருப்பியது. அதனால் சீனா பின்வாங்க முடிவு செய்தது” என்று டாக்டர் நார்மன் கூறுகிறார்.
இதற்கிடையில், துருக்கி சிரியாவின் புதிய அரசுக்கு நெருக்கமான கூட்டாளியாக மாறி வருகிறது. பல தசாப்தங்களாக இரான் மற்றும் ரஷ்யா செல்வாக்கின் கீழ் சிரியா இருந்தது. ஆனால் இப்போது சிரியாவில் துருக்கி பெரும் பங்காற்றும் வாய்ப்புள்ளது என்று டாக்டர் நார்மன் கூறுகிறார்.
ஒரு திருப்புமுனை
காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுடன் சேர்ந்து, துருக்கியும் முக்கிய பங்காற்றியது.
ஹமாஸ் அரசியல் தலைமையகமும் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமும் அமைந்துள்ள கத்தார், மத்தியஸ்தம் செய்யும் ஒரு முக்கிய நாடாக இருந்தது.
2025 செப்டம்பரில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் கத்தார் கடும் அதிருப்தி அடைந்தது.
அமெரிக்காவின் கூட்டாளியான கத்தார் மீது நடைபெற்ற இந்தத் தாக்குதல் “போரின் முடிவை நோக்கிய ஒரு திருப்புமுனையாக” அமைந்தது என்று எலியட் ஆப்ரம்ஸ் நம்புகிறார்.
பட மூலாதாரம், Getty Images
அந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிடம் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தை கத்தார் கேட்டதாகவும், அதை டிரம்ப் கொடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மீது அழுத்தத்தை அதிகரித்திருக்கிறார். மோதலை முடிக்கவும் கத்தாரிடம் மன்னிப்பு கேட்கவும் நெதன்யாகுவை டிரம்ப் கட்டாயப்படுத்தினார்.
“பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பு சம்மதிக்கவும், டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும் கத்தார், எகிப்து மற்றும் துருக்கி மிக முக்கிய பங்காற்றின” என்று டாக்டர் நார்மன் கூறுகிறார்.
பிரான்ஸ், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரித்தது கூட இந்த நிகழ்வில் தாக்கம் ஏற்படுத்தியதாக அவர் நம்புகிறார்.
சில விமர்சகர்கள் இந்த நடவடிக்கையை வெறும் குறியீட்டுச் செயல் என்று கருதினாலும், அது போர்நிறுத்தம் குறித்து ஹமாஸுக்கு மற்ற நாடுகள் அழுத்தம் கொடுப்பதை எளிதாக்கியது என்று அவர் கூறுகிறார்.
இஸ்ரேல் ‘தனிமைப்படுத்தப்பட்டுள்ளது’
காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் பற்றி மற்ற நாடுகளுக்கு இருந்த கோபமும் அங்கு நிலவிய மனிதாபிமான நெருக்கடியும் கூட அக்டோபரில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு காரணமாக அமைந்திருந்தன.
ஆகஸ்ட் மாதம், காஸாவில் பஞ்சம் ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த ஒரு அமைப்பு தெரிவித்தது. ஆனால், அது பொய் என்று மறுத்தது இஸ்ரேல்.
செப்டம்பரில், ஐ.நா. விசாரணை அறிக்கை காஸாவில் பாலத்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியது. ஆனால், அதையும் பொய் என்றது இஸ்ரேல்.
“ஐரோப்பிய மக்கள் காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை ‘இனப் படுகொலை’ என்று குறிப்பிடாமல் இருந்தாலும், அதை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மனநிலை அமெரிக்காவிற்கும் பரவியுள்ளது” என்கிறார் டாக்டர் வாகில்.
“மொத்தத்தில், இன்றைய சூழ்நிலையில் இஸ்ரேல் அந்தப் பகுதியில் இராணுவ ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் நாடாகத் தெரிகிறது” என்றும் அவர் கூறினார்.
“ராணுவ நடவடிக்கைகளின் விளைவாக சர்வதேச அளவிலும் பிராந்திய அளவிலும் இஸ்ரேல் பாதிக்கப்பட்டுள்ளது; பல தசாப்தங்களுக்கு முன் இருந்ததை விட இப்போது இஸ்ரேல் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
1967ம் ஆண்டு முதல், காஸா மற்றும் மேற்குக் கரை பகுதிகளை உள்ளடக்கிய பாலத்தீனத்தை, இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பிரதேசமாகத்தான் ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.
அக்டோபரில் காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் தனது ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பது முதல் காஸாவுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக நடக்குமா, பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகாரம் பெறுவதற்கான நம்பகமான பாதை உருவாகுமா என்பது வரை இன்னும் பல விஷயங்கள் உறுதியற்றவையாகவே உள்ளன என்று அந்த மூன்று நிபுணர்களும் கூறுகின்றனர்.
இருந்தாலும், “அந்த நிலைமை முழுமையாக மாறியுள்ளது, சில உறவுகள் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன,” என்று டாக்டர் நார்மன் கூறுகிறார்.
மத்திய கிழக்கு பகுதியின் மீது மீண்டும் கவனம் திரும்பியுள்ளது; “இது அந்தப் பகுதியில் இதுவரை பார்த்த போரும் மோதலுமாய் இல்லாமல், ஒரு சிறந்த எதிர்காலத்தின் மீதான புதிய அர்ப்பணிப்பை உருவாக்கும்” என்று அவர் நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு