பட மூலாதாரம், EPA/SHUTTERSTOCK
டொனால்ட் டிரம்ப் உலக நிகழ்வுகளின் மையத்தில் இருக்க விரும்பும் அமெரிக்க அதிபர் என்றாலும் இது அவருக்கும் ஒரு வியக்கத்தக்க தருணமாகத்தான் அமைந்தது.
புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டிரம்ப் தலைமை தாங்கிய கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ குறுக்கிட்டார். ‘ஒரு முக்கிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. உலகிற்கு இதைச் சொல்ல வேண்டும்’ என்ற செய்தியை அவர் டிரம்பிடம் வழங்கினார்.
அந்த செய்தியை பெற்றதும், அறையில் இருந்தவர்களிடம் மற்றும் வீடியோவைக் காணும் மில்லியன் கணக்கான மக்களிடம், “அவர்களுக்கு நான் தேவைப்படுவேன்…” “மத்திய கிழக்கில் சில பிரச்னைகளைத் தீர்க்க நான் இப்போது செல்ல வேண்டும்” என்று கூறி, டிரம்ப் அன்றைய கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
எகிப்தில் மூன்று நாட்கள் நடந்த மறைமுக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டிரம்ப் ஏற்படுத்த விரும்பும் போர் நிறுத்தத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன.
எகிப்தின் செங்கடல் ஓரத்தில் ஷார்ம் எல்-ஷேக் என்ற ரிசார்ட்டில், இஸ்ரேலிய மற்றும் பாலத்தீன பேச்சுவார்த்தையாளர்கள் ஹோட்டலின் தனித்தனி மாடிகளில் இருந்தனர். கத்தார் மற்றும் எகிப்தைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் அவர்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு வலு சேர்க்கவும், இஸ்ரேலியர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், டிரம்ப் தனது மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை அனுப்பினார். ஹமாஸ் குழுக்கு அழுத்தம் கொடுக்க கத்தார் பிரதமர், எகிப்து மற்றும் துருக்கி உளவுத்துறைத் தலைவர்கள் வந்திருந்தனர்
இந்த ஒப்பந்தம் பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றாலும், அதற்கு போர் முடிந்துவிட்டது என்று அர்த்தம் அல்ல.
ஆனால் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த துயரச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்பு இதன் மூலம் தற்போது உருவாகியுள்ளது எனலாம்.
இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
போர்நிறுத்தம் ஏற்பட்டதும், மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதற்குப் பதிலாக, பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என போர் நிறுத்தத் திட்டம் கூறுகிறது.
இஸ்ரேலிய ராணுவம் தற்போது உள்ள இடங்களில் இருந்து பின்வாங்கும். இதனால், காஸா பகுதியின் 53% மட்டுமே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இஸ்ரேல், காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும். தினமும் 400 லாரிகள் உதவிகள் அனுமதிக்கப்படும். இவை ஐ.நா மற்றும் பிற அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் ஒரு பெரிய முன்னேற்றம் தான். ஆனால், போரை முடிக்க இன்னும் பல படிகள் தேவை. டிரம்பின் திட்டம் ஒரு அடிப்படைக் கட்டமைப்பு மட்டுமே. இதுகுறித்த மேலதிக விபரங்கள் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
பட மூலாதாரம், Reuters
இஸ்ரேல், காஸா பகுதியிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் விரும்புகிறது.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது நடக்காது என கூறுகிறார்.
ஹமாஸ், கனரக ஆயுதங்களைக் கைவிட தயாராக இருந்தாலும் சில ஆயுதங்களை வைத்திருக்க விரும்புகிறது.
நெதன்யாகு, காஸாவை முழுமையாக ஆயுதமற்ற பகுதியாக மாற்ற விரும்புகிறார்.
”இஸ்ரேலின் வெற்றி என்பது பணயக்கைதிகள் வீடு திரும்புவது மட்டுமல்ல. ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும், மேலும் இஸ்ரேலுக்கு ஆபத்தாக உருவாக முடியாதபடி இருக்க வேண்டும்” என நெதன்யாகு பலமுறை கூறியுள்ளார்.
பைடனின் திட்டம் என்னவாக இருந்தது ?
2024 மே மாதத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டிரம்ப் முன்மொழிந்த திட்டத்தைப் போலவே ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தார்.
இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்பது அந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அதற்குப் பதிலாக, ஹமாஸ், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டது. மேலும், இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்காது என்பதற்கான வாக்குறுதியும் அந்த திட்டத்தில் இருந்தது.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அந்த திட்டத்திற்கு உடன்படத் தயங்கினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ”போரைத் தொடர்வதுதான் பணயக்கைதிகளை மீட்பதற்கும் ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்கும் ஒரே வழி” என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
பட மூலாதாரம், Reuters
ஒருவேளை பைடனின் திட்டம் இரு தரப்பினருக்கும் மிக விரைவாக முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமாகத் தோன்றியிருக்கலாம்.
ஆனால், அமெரிக்கா இஸ்ரேல் மீது கொண்டுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, நெதன்யாகுவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
இதுதான், இப்போது நடந்ததற்கும் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடக்காததற்கும் இடையிலான முக்கிய வித்தியாசம்.
இஸ்ரேல் போரை நடத்தும் விதம் குறித்து பைடன் கவலை தெரிவித்தபோதும், அமெரிக்காவின் அரசியல், நிதி அல்லது ராணுவ ஆதரவை நிறுத்துவதாக ஒருபோதும் அச்சுறுத்தவில்லை. 2000- பவுண்டு குண்டுகள் கொண்ட ஒரு ஆயுத விநியோகத்தை தடை செய்ததைத் தவிர அவர் வேறு விதமான அச்சுறுத்தல்களை முன்வைக்கவில்லை.
அமெரிக்காவின் உதவி இல்லாமல் இஸ்ரேல் போரை நடத்தியிருக்க முடியாது. ஆனால் அந்த சார்பை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த பைடன் தயங்கினார். நெதன்யாகு அவரை எதிர்த்துப் போராட முடியும் என்று பைடன் நம்பிக்கை கொண்டிருந்தார்.
மாறாக, டிரம்ப் ராணுவத்திலும் அரசியலிலும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தாலும், அதற்குப் பதிலாக இன்னும் பலவற்றைப் பெற விரும்புகிறார்.
தோஹா தாக்குதலின் விளைவு
செப்டம்பர் 9 அன்று தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் முயற்சி செய்தது. ஆனால் அது தோல்வியடைந்த முயற்சியாக இருந்தாலும் ஒரு முக்கிய திருப்புமுனைக்குக் காரணமான நிகழ்வாக அமைந்தது.
அந்தத் தாக்குதலின் பிரதான இலக்காக ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா மற்றும் முக்கிய துணைத் தலைவர்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள் அந்த நேரத்தில் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர் நிறுத்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.
அல்-ஹய்யாவும் அவரது குழுவினரும் தாக்குதலில் உயிர் தப்பினார்கள், ஆனால் அவரது மகன் உயிரிழந்தார். தற்போது அல்-ஹய்யா எகிப்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் குழுவை வழிநடத்துகிறார்.
இஸ்ரேல், கத்தார் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபமடைந்தார்.
பட மூலாதாரம், Anadolu via Getty Images
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க நெதன்யாகு அனுமதி கேட்டபோது, கத்தார் பிரதமரை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்கும்படி நெதன்யாகுவை வலியுறுத்தினார் டிரம்ப்.
நெதன்யாகு தாம் தயார் செய்திருந்த மன்னிப்பு உரையை போனில் வாசித்தபோது போன் ஹாண்ட்செட் கேபிள் நீண்டு இருந்தது. ஏனெனில் டிரம்ப் போனை தன் மடியில் வைத்து கொண்டு நெதன்யாகு பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த தருணம் ஒரு ஆசிரியர் தவறு செய்த மாணவனை மன்னிப்பு கேட்கச் சொல்லும் காட்சி போலிருந்தது. அந்த தருணத்தின் புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை வெளியிட்டு, கத்தார் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானால் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பை வழங்கும் என அறிவித்தார்.
கத்தார், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாகவும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளத்தைக் கொண்ட நாடாகவும் உள்ளது. மேலும் பிராந்திய அமைதிக்கான டிரம்பின் பரந்த திட்டத்தின் முக்கிய பகுதியாகும் என்பதால் அவருக்கு அந்த மன்னிப்பு தேவைப்பட்டது.
அந்த திட்டத்தின் மையத்தில், செளதி அரேபியா இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கும் ‘பெரிய ஒப்பந்தம்’ ஒன்று உள்ளது. ஆனால், தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்காவை தங்கள் கூட்டாளிகளைப் பாதுகாக்க இயலாத ஒரு நாடாக வெளிப்படுத்தி விட்டது.
பட மூலாதாரம், Getty Images
அதேபோல், மற்ற பல விஷயங்களும் மாறிவிட்டன. இஸ்ரேலிய ராணுவ படைகள் பல பாலத்தீனர்களைக் கொன்று, காஸாவின் பெரும்பகுதியை அழித்துவிட்டன.
1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் நெதன்யாகு மேடையேறியபோது, பல பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
அமெரிக்கா இன்னும் இஸ்ரேலின் சக்திவாய்ந்த கூட்டாளியாக இருந்தாலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.
இதனால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எதிர்ப்பை மீறி முடிவெடுப்பதில் அமெரிக்காவுக்கான அரசியல் ரீதியாக ஆபத்து குறைந்துள்ளது.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற பல நாடுகள் பாலத்தீனத்தை அரசாக அங்கீகரித்துள்ளன.
காஸாவில் நடந்த அழிவுகள், உதவிப் பொருட்கள் மீது இஸ்ரேல் விதித்த தடைகளால் ஏற்பட்ட பஞ்சம் குறித்து இந்நாடுகள் தங்களது பொது அறிக்கைகளில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.
செப்டம்பர் 9 அன்று தோஹா மீது நடத்தப்பட்ட தாக்குதல், அரபு மற்றும் இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் புதிய அவசர உணர்வை உருவாக்கியது. அரிதான வகையில் ஒன்று திரண்ட இந்த நாடுகள் இஸ்ரேலை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்புக்கு அழுத்தம் தந்தது.
டிரம்ப் முன்வைத்த 20 அம்சத் திட்டம் உண்மையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், பணயக்கைதிகள் வீடு திரும்பிய பின், பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்குவதற்கான வழியைக் கண்டுபிடிப்பாரா என்பது இப்போது எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
அமைச்சரவையில் உள்ள அவரது தீவிர தேசியவாத கூட்டாளிகள் அது நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
வளைகுடா நாடுகள், காஸா பகுதியை மீண்டும் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு வகிக்க விரும்புகின்றன. இந்த நாடுகள், போர் மீண்டும் தொடங்காமல் இருக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.
இருபுறத்திலும் காணப்பட்ட கலவையான மனநிலை
ஷார்ம் எல்-ஷேக்கில் ஏற்பட்ட முன்னேற்றம், இஸ்ரேலிலும் காஸா பகுதியிலும் கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்டது. பல உயிரிழப்புகளுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் அது இனிமையுடன் கலந்த கசப்பான தருணமாக இருந்தது.
இஸ்ரேலில், பணயக்கைதிகளின் குடும்பங்களும் அவர்களது ஆதரவாளர்களும் தங்கள் அன்புக்குரியவர்களை காஸாவிலிருந்து மீட்டெடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
உயிருடன் உள்ளோரும் உயிரிழந்தோரும் வீடு திரும்பினால், பெரும்பாலான இஸ்ரேலியர்கள் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து குறிப்பிடுகின்றன.
தற்போது சுமார் 20 பணயக்கைதிகள் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், 28 பேரின் உடல்களைத் திருப்பித் தர ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், இறந்த அனைவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சேதமடைந்த காஸா பகுதிகளுக்குள் பாலத்தீதீனர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பணயக்கைதிகளுக்கான பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 250 கைதிகளையும், கடந்த இரண்டு ஆண்டுகளில் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலிய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 1,700 பேரையும் விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
வீடு திரும்பும் அவர்களை பாலத்தீனர்கள் வீரர்களாக வரவேற்கத் தயாராக உள்ளனர்.
பட மூலாதாரம், EPA/SHUTTERSTOCK
2002ஆம் ஆண்டு இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, ஐந்து ஆயுள் தண்டனைகளும் கூடுதலாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட மர்வான் பர்கூட்டியை விடுவிக்க இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
பல பாலத்தீனர்கள் அவரை தங்களின் ‘நெல்சன் மண்டேலா’வாகவே பார்க்கின்றனர். தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக தாக்குதல்களைத் திட்டமிட்டதற்காக 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்ற நெல்சன் மண்டேலாவைப் போல அவரை கருதுகிறார்கள் பாலத்தீன மக்கள்.
இஸ்ரேலியர்கள் ஆபத்தான ”பயங்கரவாதிகள்” எனக் கருதும் தங்கள் முக்கிய தளபதிகளில் சிலருக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது. இவர்களை விடுவிப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய யஹ்யா சின்வார், 2011-ஆம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டவர். பின்னர் அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹமாஸ் சமர்ப்பித்த பட்டியலில், 2002-ஆம் ஆண்டு பாஸ்ஓவர் திருவிழாவைக் கொண்டாடிய 35 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த தாக்குதலுக்குப் பொறுப்பாகக் கூறப்படும் அப்பாஸ் அல் சயீத் உள்ளிட்ட பலர் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் தற்போது 35 ஆயுள் தண்டனைகளும், கூடுதலாக 100 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகிறார்.
1996-ஆம் ஆண்டு ஜெருசலேமில் தற்கொலை ஆயுததாரிகளை அனுப்பி பேருந்துகளை வெடிக்கச் செய்து, பல இஸ்ரேலியர்களை கொன்று காயப்படுத்தியதற்காக 46 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹசாம் சலாமா என்பவரும் அந்த பட்டியலில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய நபர் ஆவார்.
பட மூலாதாரம், Reuters
இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் கடந்த 3,000 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய நிகழ்வாக இருக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் பெருமையாகக் கூறுகிறார். இப்படி மிகைப்படுத்திக் கூறுவதுதான் டிரம்பின் பாணி.
ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட பாலத்தீதீனர்களுக்கு பதிலாக இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் திட்டத்தில் உள்ள மற்ற முக்கிய அம்சங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டால், இரு தரப்பினரையும் பல ஆண்டு காலமாக பாதித்து வந்த சூழல் ஓரளவுக்காவது முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தைகள் எதிரிலிருந்தாலும், காஸா போரின் முடிவு மத்திய கிழக்கில் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாக அமையலாம் என சிலர் கருதுகிறார்கள். அது நடக்க வேண்டுமென்றால், டிரம்ப் இதுவரை வெளிப்படுத்தாத செயல்பாட்டு முறை தேவைப்படும்.
எகிப்தில் நடைபெற்ற குறுகிய, தீவிரமான பேச்சுவார்த்தை அவரது ஆணவம் மற்றும் மிரட்டல் பாணிக்கும் பொருத்தமாக இருந்தது.
ஆனால், ஜோர்டான் நதி முதல் மத்தியதரைக் கடல் வரை உள்ள நிலப்பகுதியை கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் சிக்கலான விஷயம்.
இதைச் செய்ய, முற்றிலும் வேறுபட்ட திறன்களும் நீண்டகால முயற்சியும் தேவைப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு