பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 9-ம் தேதி, கத்தாரில் ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய போது, அது அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பை இன்னும் தள்ளி வைப்பதாகத் தோன்றியது.
இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் நட்பு நாடான கத்தாரின் இறையாண்மையை மீறியது அந்த மோதல் ஒரு பிராந்தியப் போராகப் பரவும் அபாயத்தை உருவாக்கியது. அப்போது, ராஜ்ஜீய முயற்சிகள் முற்றிலும் சீர்குலைந்ததாகத் தெரிந்தது.
ஆனால், இதுவே பின்னர் ஒரு திருப்புமுனையாக மாறியது.
இதைத் தொடர்ந்து, மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த இலக்கை, டிரம்பும், அவருக்கு முன் பதவி வகித்த அதிபர் ஜோ பைடனும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக முயற்சித்து வந்தனர்.
இது நிலையான அமைதியை நோக்கிய முதல் படி மட்டுமே.
ஹமாஸ் ஆயுதங்களை கைவிடுவது, காஸாவின் நிர்வாகம், இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவது போன்ற விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் மிகப்பெரிய சாதனையாக இது இருக்கும்.
இது பைடனுக்கும் அவரது குழுவுக்கும் எட்டாத ஒரு இலக்கு.
டிரம்பின் தனித்துவமான பாணியும், இஸ்ரேல் மற்றும் அரபு உலகுடனான அவரது வலுவான உறவுகளும் இந்த முன்னேற்றத்திற்கு உதவின.
ஆனால், பல ராஜ்ஜீய வெற்றிகளைப் போலவே, இதற்குப் பின்னாலும் இருவரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகளும் இருந்தன.
நெதன்யாகுவுடன் டிரம்ப் நெருங்கிய உறவு
பொது இடங்களில், டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எப்போதும் புன்னகையோடு தென்படுகிறார்கள்.
‘இஸ்ரேலுக்கு என்னைப் போன்ற நண்பர் வேறு யாரும் இல்லை’ என்று டிரம்ப் பெருமையுடன் சொல்கிறார். நெதன்யாகு அவரை “வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்கு கிடைத்த மிகச் சிறந்த கூட்டாளி” என்று புகழ்கிறார். இது வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல், பல முக்கிய நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டுள்ளன.
டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றினார். பாலத்தீன மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங்கள் சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானவை என்ற அமெரிக்காவின் நீண்டகால நிலைப்பாட்டையும் அவர் கைவிட்டார்.
இஸ்ரேல் கடந்த ஜூன் மாதம் இரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய போது, அமெரிக்க விமானங்கள் மூலம் மிக சக்திவாய்ந்த குண்டுகளை பயன்படுத்தி இரானின் அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை குறிவைத்து தாக்க டிரம்ப் உத்தரவிட்டார்.
பட மூலாதாரம், Reuters
அந்த நிகழ்வுகள், இஸ்ரேல் மீது மறைமுகமாக அதிக அழுத்தம் கொடுக்க டிரம்புக்கு வாய்ப்பளித்திருக்கலாம்.
அறிக்கைகளின்படி, சில பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான நிபந்தனையுடன் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்குமாறு நெதன்யாகுவை அமெரிக்காவின் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக வற்புறுத்தினார் என அறியப்படுகிறது.
ஜூலை மாதத்தில், சிரியப் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது குண்டுவீச்சும் நடத்தப்பட்டது. அப்போது, தனது போக்கை மாற்றும்படி நெதன்யாகுவுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்தார்.
இஸ்ரேலியப் பிரதமர் மீது டிரம்ப் காட்டிய உறுதியும், அவர் பயன்படுத்திய அழுத்தத்தின் அளவும் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்ததாக சர்வதேச அமைதிக்கான கார்னெகி அறக்கட்டளையின் ஆரோன் டேவிட் மில்லர் கூறுகிறார்.
“ஒரு அமெரிக்க அதிபர், ஒரு இஸ்ரேலிய பிரதமரிடம் ‘நீங்கள் இணங்க வேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்’ என்று நேரடியாக இதற்கு முன்பு சொன்னதற்கான முன்னுதாரணமே இல்லை” என அவர் குறிப்பிடுகிறார்.
மாறாக, நெதன்யாகு அரசாங்கத்துடனான ஜோ பைடனின் உறவு தொடக்கம் முதலே பலவீனமாக இருந்தது.
அவரது “வெளிப்படையான ஆதரவு” வழங்கும் உத்தி, இஸ்ரேலை பொதுவாக ஆதரித்தால், போர் நடத்தையை மறைமுகமாக கட்டுப்படுத்தலாம் என்பதாக இருந்தது.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக நீடித்த இஸ்ரேல் ஆதரவும், காஸா போர் குறித்து பைடனின் ஜனநாயகக் கூட்டணிக்குள் எழுந்த தீவிர பிளவுகளும் அதன் அடித்தளமாக இருந்தது.
பைடன் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அவரது உள்நாட்டு ஆதரவை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது. ஆனால் டிரம்பின் உறுதியான குடியரசுக் கட்சி அடித்தளம், அவருக்கு அரசியல் ரீதியாக அதிக சுதந்திரத்தை வழங்கியது.
முடிவாக, உள்நாட்டு அரசியல் அல்லது தனிப்பட்ட உறவுகளை விட, பைடன் தலைமையிலான காலகட்டத்தில் இஸ்ரேல் அமைதிக்குத் தயாராக இருக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக இருந்திருக்கலாம்.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் எட்டாவது மாதத்திற்குள், இரான் கட்டுப்படுத்தப்பட்டது. வடக்கில் ஹெஸ்பொலா பலவீனமடைந்தது. காஸா சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், டிரம்பின் அனைத்து முக்கிய உத்தி சார்ந்த இலக்குகளும் நிறைவேற்றப்பட்டிருந்தன.
வளைகுடாவின் ஆதரவைப் பெற உதவிய வணிக உறவு
தோஹாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஒரு கத்தார் குடிமகன் உயிரிழந்தார், ஹமாஸ் அதிகாரிகள் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் அந்தச் சம்பவம், போர் நிறுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் கடுமையான இறுதி எச்சரிக்கை விடுக்கத் தூண்டியது .
காஸாவில் இஸ்ரேலுக்கு டிரம்ப் சுதந்திரம் கொடுத்திருந்தார்.
இரானில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு அமெரிக்க ராணுவ வலிமையையும் அளித்தார். ஆனால், கத்தார் மண்ணில் நடந்த தாக்குதல் முற்றிலும் வேறுபட்ட விஷயம். அது, போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது தொடர்பாக அரபு நாடுகள் கொண்டிருந்த நிலைப்பாட்டை நோக்கி டிரம்பை நகர்த்தியது.
பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ்எஸிடம் பேசிய டிரம்ப் நிர்வாக அதிகாரிகள், இந்தத் தாக்குதல் ஒரு திருப்புமுனை என்று கூறினர்.
இது டிரம்பை அதிகபட்ச அழுத்தத்தை செலுத்தி சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஊக்கப்படுத்தியது.
பட மூலாதாரம், Reuters
டிரம்புக்கும் வளைகுடா நாடுகளுக்குமான நெருக்கமான உறவுகள் நன்கு அறியப்பட்டவை. டிரம்புக்கு கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் வணிகத் தொடர்புகள் உள்ளன. அவரது இரு பதவிக்காலங்களும் சவுதி அரேபியாவில் அரசு பயணங்களுடன் தொடங்கின. இந்த ஆண்டில் அவர் தோஹா, அபுதாபிக்கும் சென்றிருந்தார்.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்கிய ஆபிரகாம் ஒப்பந்தங்கள், டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் மிகப்பெரிய ராஜ்ஜீய சாதனையாகக் கருதப்படுகின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அரேபிய தீபகற்ப தலைநகரங்களில் டிரம்ப் செலவிட்ட நேரம், அவரது சிந்தனையை மாற்றியது என்று வெளியுறவு கவுன்சிலின் எட் ஹுசைன் கூறுகிறார்.
இந்த மத்திய கிழக்கு பயணத்தின் போது டிரம்ப் இஸ்ரேலுக்குச் செல்லவில்லை. அதற்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கத்தாருக்குச் சென்றார். அங்கு, ‘போரை நிறுத்த வேண்டும்’ என்ற ஒரே கோரிக்கை மீண்டும் மீண்டும் ஒலித்தது.
தோஹா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஒரு மாதத்துக்குள், நெதன்யாகு கத்தார் பிரதமரிடம் தொலைபேசியில் மன்னிப்பு கேட்கும் போது, டொனால்ட் டிரம்ப் அருகிலேயே அமர்ந்திருந்தார். அதே நாளின் பிற்பகுதியில், இஸ்ரேல் பிரதமர், காஸாவுக்கான டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்தத் திட்டம் பிராந்தியத்தின் முக்கிய இஸ்லாமிய நாடுகளின் ஆதரவையும் பெற்றிருந்தது.
நெதன்யாகுவுடனான டிரம்பின் உறவு, ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அவருக்கு உதவியிருக்கலம் என்ற நிலையில், இஸ்லாமிய தலைவர்களுடனான அவரது நீண்டகால உறவுகள், அவர்களின் ஆதரவைப் பெற்றதுடன், ஹமாஸை ஒப்பந்தத்தில் இணங்கச் செய்ய அவர்களை நம்ப வைக்கவும் உதவியிருக்கலாம்.
“டிரம்ப் இஸ்ரேலியர்களுடனும், மறைமுகமாக ஹமாஸுடனும் செல்வாக்கு செலுத்தும் நிலையை உருவாக்கினார் ” என்று உத்திசார் மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் ஜான் ஆல்டர்மேன் கூறுகிறார்.
“அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. தனக்கு ஏற்றாற்போல செயல்படுவது முந்தைய அதிபர்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. ஆனால் டிரம்ப் அதில் வெற்றி பெற்றார்”என அவர் விளக்குகிறார்.
இஸ்ரேலில் நெதன்யாகுவை விட டிரம்ப் அதிகம் பிரபலமானது, அவருக்கு உதவியது என்றும் ஆல்டர்மேன் சொல்கிறார்.
தற்போது, இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டதுடன், காஸா பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு வெளியேறவும் உறுதியளித்துள்ளது.
மறுபுறம், ஹமாஸ், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் பிடித்த அனைத்து பணயக்கைதிகளையும் (உயிருடன் உள்ளவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும்) விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அந்தத் தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவை சிதைத்து, 67,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களின் மரணத்திற்கும் காரணமான இந்தப் போரின் முடிவு, இப்போது சாத்தியமாகத் தோன்றுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் முயற்சி
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் எழுந்த கடும் கண்டனம், டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையையும் பாதித்தது.
பாலத்தீனர்களுக்கு ஏற்பட்ட அழிவும், மனிதாபிமான பேரழிவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமாக உள்ளன. சமீப மாதங்களில் நெதன்யாகு அரசாங்கம் சர்வதேச அளவில் அதிகமாக தனிமைப்படுத்தப்பட்டது.
இஸ்ரேல் பாலத்தீனர்களுக்கான உணவு;பபொருள் விநியோகத்தை ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் பிறகு காஸா நகரத்துக்கு எதிரான தாக்குதலைத் திட்டமிட்டதாக அறிவித்தது. இதனால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான பல முக்கிய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்த முழுமையான ஆதரவு நிலைப்பாட்டுடன் இனி ஒத்துப்போக முடியாது என்று முடிவு செய்தன.
பட மூலாதாரம், Reuters
இதன் விளைவாக, இஸ்ரேல்–பாலத்தீன மோதலின் எதிர்கால திசை குறித்து அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே வரலாற்று பிளவு உருவானது.
பிரான்ஸ் பாலத்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்த போது, டிரம்ப் நிர்வாகம் அதனை கடுமையாக விமர்சித்தது. பின்னர் அதையே பிரிட்டனும் செய்தது. இந்நாடுகள் “இரு நாடுகள் தீர்வு” என்ற யோசனையை உயிருடன் வைத்திருப்பதற்கும், இரு தரப்பிலும் உள்ள தீவிரவாத சக்திகளை ஒதுக்கவும், இஸ்ரேல்–பாலத்தீனத்தின் ராஜ்ஜீய பாதையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் முயன்றன.
ஆனால், மக்ரோன் தனது அமைதித் திட்டத்துக்கு சவுதி அரேபியாவை இணைத்ததில் அவரது திறமையை வெளிப்படுத்தினார்.
காஸாவின் நீண்டகால எதிர்காலத்தைப் பற்றிய பார்வையில், டிரம்ப் ஒரு பக்கம் ஐரோப்பிய-அரபு கூட்டணியையும், மறுபக்கம் இஸ்ரேலிய தேசியவாதிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளையும் எதிர்கொண்டார். அவர் தனது வளைகுடா நண்பர்களைத் தேர்ந்தெடுத்தார்.
பிரான்ஸ்–சவுதி அமைதித் திட்டத்தின் கீழ், அரபு நாடுகள் ஹமாஸ் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல்களை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாகக் கண்டித்தன. காஸா மீதான தனது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, தனது ஆயுதங்களை பாலத்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த அமைப்பை அரபு நாடுகள் வலியுறுத்தின.
இது அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குக் கிடைத்த முக்கியமான ராஜ்ஜீய வெற்றியாகக் கருதப்பட்டது. டொனால்ட் டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டமும், முக்கிய பகுதிகளில் பிரான்ஸ்–சவுதி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தெளிவற்றதாகவும், நிபந்தனைக்குட்பட்டதாகவும் இருந்தாலும் அதில் “பாலத்தீன அரசமைப்பு” பற்றிய குறிப்பும் இடம்பெற்றிருந்தது.
துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிடம் ஹமாஸ் மீது அழுத்தத்தைத் தொடருமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டதுடன், நெதன்யாகுவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மையப்படுத்தி, போரை முடிவுக்குக் கொண்டுவர கடும் அழுத்தம் கொடுத்தார்.
டிரம்புக்கு ‘இல்லை’ என்று சொல்ல யாராலும் முடியவில்லை.
டிரம்பின் தனித்துவமான பாணி
டொனால்ட் டிரம்பின் வழக்கத்திற்கு மாறான நடத்தை இன்னும் அதிர்ச்சியூட்டும் திறனைக் கொண்டுள்ளது. அது பொதுவாக ஆரவாரமாகத் தொடங்கி, பின்னர் மெதுவாக வழக்கமான ஒரு திசைக்கு மாறுகிறது.
டிரம்ப், அவரது முதல் பதவிக்காலத்தில், வட கொரியா தலைவரை குறிவைத்து “சிறிய ராக்கெட் மனிதன்” என்று அவமதித்ததும், “தீ மற்றும் சீற்றம்” போன்ற எச்சரிக்கைகள் விடுத்ததும், அமெரிக்கா வட கொரியாவுடன் போரின் விளிம்புக்குக் கொண்டு செல்வதாகத் தோன்றியது.
ஆனால் அதன் பின் டிரம்ப் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
தனது இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில், காஸாவை ஒரு சர்வதேச கடற்கரை விடுதியாக (oceanfront resort) மாற்றி, பாலத்தீனர்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டும் என்ற அதிர்ச்சியூட்டும் யோசனையை டிரம்ப் முன்வைத்தார்.
இஸ்லாமிய தலைவர்கள் அதனால் கடும் கோபமடைந்தனர். அனுபவ மிக்க மத்திய கிழக்கு ராஜ்ஜீய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம், பைடனின் ஒப்பந்தத்திலிருந்தோ அல்லது அமெரிக்காவின் நட்பு நாடுகளின் நீண்ட கால ஆதரவு திட்டங்களிலிருந்தோ பெரிதாக வேறுபடவில்லை.
வழக்கமான முடிவை அடைய டிரம்ப் எடுத்த பாதை குழப்பமானதாகவும், வழக்கத்திற்கு மாறானதாகவும் இருந்தது. ஐவி லீக் பல்கலைக் கழகங்களில் கற்பிக்கும் ராஜ்ஜீய பாணியைப் போல இது இல்லாவிட்டாலும், அந்தச் சூழலில், அது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.
கூடுதல் தகவல்: கெய்லா எப்ஸ்டீன்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு