பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்பின் இஸ்ரேல் மற்றும் எகிப்து பயணம், அவர் விரும்பிய வெற்றிப் பயணமாக அமைந்தது.
ஜெருசலேமிலும் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கிலும் அவர் ஆற்றிய உரைகளைப் பார்த்தவர்கள், தனது அதிகாரத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் ஒருவரைக் கண்டனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கிடைத்த கைதட்டல்களையும், எகிப்தில் பல உலகத் தலைவர்கள் தன்னை வரவேற்க வந்ததையும் கண்டு, டிரம்ப் மகிழ்ந்தார்.
அங்கு இருந்த ஒரு மூத்த தூதர், ‘டிரம்ப், அங்கு வந்திருந்த உலகத் தலைவர்களை, தன் படத்தில் நடிக்கும் துணை நடிகர்களைப் பார்ப்பதை போல தோன்றியது’ எனக் கூறினார்.
வரலாற்றைச் சிறப்புமிக்க திருப்புமுனையைத் தான் உருவாக்கியதாக ஷர்ம் எல்-ஷேக்கில் டிரம்ப் பேசினார்.
“என் வாழ்நாள் முழுவதும் நான் ஒப்பந்தங்கள் செய்துள்ளேன். பெரிய ஒப்பந்தங்கள் தானாகவே நடக்கும். அதுதான் இங்கேயும் நடந்திருக்கிறது. ஒருவேளை இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஒப்பந்தமாக இருக்கலாம்”என்று அவர் கூறினார்.
டிரம்பின் உரைகளைக் கேட்டவர்களுக்கு, வேலை முடிந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம்.
ஆனால், உண்மை அது அல்ல. சந்தேகத்திற்கு இடமின்றி, போர் நிறுத்தத்தையும், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தையும் டிரம்ப் செய்த முக்கிய சாதனைகள் எனக் கூறலாம்.
கத்தார், துருக்கி, எகிப்து ஆகியவை தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி ஹமாஸை ஒப்புக்கொள்ள வைத்தன.
இது கூட்டு முயற்சிதான். ஆனாலும் அதில் டிரம்பின் பங்கு முக்கியமானது.
ஏனென்றால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்பு மறுத்து வந்த நிபந்தனைகளை, தற்போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் அழுத்தம் கொடுத்ததால்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது ஏற்பட்டுள்ளது போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளுக்கு பதிலாக கைதிகள் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் மட்டும்தான். முழுமையான அமைதி ஒப்பந்தமோ, அல்லது அதற்கான தொடக்கமோ அல்ல.
டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடுத்த கட்டம், காஸாவை ஆயுதமற்ற, பாதுகாப்பான பகுதியாக மாற்றி, பாலத்தீனியர்கள் அடங்கிய குழு அதனை நிர்வகிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இந்தக் குழு, டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்துக்கு கீழ் இயங்கும். இதை நடைமுறைப்படுத்த, இன்னும் பல விஷயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும்.
மொத்தத்தில், இந்த காஸா ஒப்பந்தம் மத்திய கிழக்கில் நிலையான அமைதிக்கான பாதையோ, இறுதி இலக்கோ அல்ல.
அது இதுவரை எட்டப்படாத ஒரு இலக்காகவே உள்ளது.
பட மூலாதாரம், Reuters
சோர்வடைந்த தரப்புகள்
ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வதில், தலைவர்கள் உண்மையாகவே அர்ப்பணிப்புடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
பெரும்பாலான போர்கள், சோர்வடைந்த தரப்புகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் முடிவடைகின்றன. டிரம்ப் கூறியபடி காஸா போர் முடிந்துவிட்டது என்றால், அது அத்தகைய முடிவாகக் கூட இருக்கலாம்.
ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மற்றொரு வழி, முழுமையாக வெற்றி பெறுவது.
அதில், போரில் வெற்றி பெற்றவர்களால் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். இதற்கான சிறந்த உதாரணமாக, 1945-இல் நாஜி ஜெர்மனி நிபந்தனையின்றி சரணடைந்ததைக் கூறலாம்.
செப்டம்பர் 9-க்கு முன், நெதன்யாகு கத்தார் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டபோது, இஸ்ரேலின் எதிரியை முற்றிலும் அழித்து, காஸாவின் எதிர்காலத்தை இஸ்ரேல் வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் இருந்ததாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் டிரம்பை கடுமையாகக் கோபப்படுத்தியது. கத்தார், அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளம் கத்தாரில் உள்ளது.
டிரம்பின் மகன்களும் அங்கு தொழில் செய்கிறார்கள்.
ஆனால், தனது இலக்கு ஹமாஸ் தலைமைதான், கத்தார் அல்ல என்று நெதன்யாகு கூறினாலும், டிரம்ப் அதனை ஏற்கவில்லை.
டிரம்பைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் நலன்கள் இஸ்ரேலின் நலன்களை விட மேலானவை. இஸ்ரேலை ஆதரிப்பதற்காக, பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களுக்குத் தீங்கு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்த ஜோ பைடனைப் போல டிரம்ப் கிடையாது.
டிரம்ப் மீண்டும் வாஷிங்டன் டி.சி.க்கு திரும்பியுள்ளார். அமெரிக்கர்கள் இப்போது ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தூதர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்த ஒப்பந்தத்தின் சிறிய விவரங்களைக்கூட சரியாக ஒழுங்குபடுத்துவது மிக முக்கியம், ஆனால் அது உடனடியாக நடக்காது. அதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதும் ஒரு பிரச்னையாக இருக்கலாம்.
பொதுவாக,போர் நிறுத்தங்கள் ஆரம்பத்தில் பலமுறை மீறப்படுவது வழக்கம். ஆனால் நீண்ட காலம் நீடிக்கும் அமைதி ஒப்பந்தம் என்றால் இரு தரப்பும் உண்மையாக அமைதியை விரும்பி, அதை செயல்படுத்த உறுதியுடன் இருக்கும்.
இஸ்ரேலியர்களும் பாலத்தீனியர்களும், வெவ்வேறு காரணங்களுக்காக, பணயக்கைதிகளும் கைதிகளும் வீடு திரும்பியதில் மகிழ்ந்தார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி 24 மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அதில் விரிசல்கள் தோன்றத் தொடங்கிவிட்டன.
ஹமாஸ், கொல்லப்பட்ட 28 பணயக்கைதிகளில் 4 பேரின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்பியுள்ளது. இஸ்ரேல் காஸாவில் ஏற்படுத்திய சேதங்களில் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்று ஹமாஸ் கூறுகிறது. இதனால், இஸ்ரேலின் பொறுமை குறைந்து வருகிறது.
இந்த உடல்கள் திருப்பி அனுப்பப்படாவிட்டால், இஸ்ரேலில் இது பெரும் பிரச்னையாக மாறும்.
பட மூலாதாரம், Getty Images
ஹமாஸ் அனுப்பும் செய்தி
ஹமாஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை, காஸாவிற்கு அனுப்பப்படும் உதவிகளை பாதியாகக் குறைப்பதாகவும், எகிப்துடனான ரஃபா எல்லையை மீண்டும் திறக்கப்போவதில்லை என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், காஸா ஒப்பந்தத்தை எதிர்க்கும் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், “ராணுவ அழுத்தம் மட்டுமே பணயக்கைதிகளை மீட்கும்” என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் காஸாவின் 53% பகுதியை இன்னும் ஆக்கிரமித்துள்ளன. இன்று காலை, தங்கள் படைகளை நெருங்கியதாகக் கூறி சில பாலத்தீனியர்களைச் சுட்டுக் கொன்றனர். காஸாவின் பாலத்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு, இதுபோன்ற இரண்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்ததாக பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
மறுபுறம்,இஸ்ரேல் ராணுவம் இன்னும் போர் நிறுத்தத்துக்கு முன்பு பயன்படுத்திய விதிகளையே பின்பற்றிக் கொண்டிருக்கலாம். அவர்கள் தங்கள் தளங்களைச் சுற்றி இரண்டு கற்பனைக் கோடுகளை அமைத்துள்ளனர். முதல் கோட்டை யாராவது கடந்தால், எச்சரிக்கை அளிக்கும் வண்ணம் துப்பாக்கிச்சூடு நடைபெறும். இரண்டாவது கோட்டை யாராவது கடந்தால், நேரடியாக அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
ஆனால், இந்த கோடுகள் எங்கே உள்ளன என்பது பாலத்தீனியர்களுக்குத் தெரியாது. அதாவது, இது நேரடி துப்பாக்கிச் சூடு மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதைப் போன்றது.
மறுபுறம், ஹமாஸ் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. ஆயுதமேந்திய, முகமூடி அணிந்த ஹமாஸ் உறுப்பினர்கள் மீண்டும் காணப்படுகின்றனர். அவர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட சில போட்டி ஆயுதக் குழுக்களைத் தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.
இஸ்ரேலுடன் ஒத்துழைத்ததாகக் கூறி, கண்கள் கட்டப்பட்டு மண்டியிட வைக்கப்பட்ட பாலத்தீனியர்களை ஹமாஸ் சுட்டுக் கொல்வது போன்ற கொடூரமான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காட்சிகள், ஹமாஸை எதிர்க்க நினைப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதோடு, இஸ்ரேலின் தாக்குதல்களைத் தாண்டியும் ஹமாஸ் உயிர்ப்புடன் இருப்பதாக உலகிற்கு செய்தி அனுப்புகின்றன.
பட மூலாதாரம், Reuters
டிரம்ப் உணர்ந்து கொள்வார்
காஸாவுக்கான டிரம்ப் திட்டத்தின் 15வது அம்சம், அமெரிக்கா “அரபு மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து, காஸாவில் உடனடியாக நிலைநிறுத்த ஒரு தற்காலிக சர்வதேச நிலைப்படுத்தல் படை (ISF) உருவாக்கும்” என்று கூறுகிறது.
போர் நிறுத்தம் உறுதியாக இல்லாவிட்டால், அந்தப் படையை உருவாக்குவதும் அங்கு அனுப்புவதும் சாத்தியமில்லை. ஹமாஸிடம் உள்ள ஆயுதங்களை அகற்ற படையைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், பங்களிக்கும் நாடுகள் தங்கள் படைகளை அனுப்பாது.
ஹமாஸ் சில கனரக ஆயுதங்களை கைவிடக்கூடும் என்று சூசகமாகக் கூறியுள்ளது, ஆனால் முழுமையாக ஆயுதமற்றதாக மாறாது.
இஸ்ரேலுக்கு எதிரான சித்தாந்தத்தை ஹமாஸ் கொண்டுள்ளது, மேலும் ஆயுதங்கள் இல்லாவிட்டால் அதன் பாலத்தீனிய எதிரிகள் பழிவாங்க வருவார்கள் என்பதையும் ஹமாஸ் அறிந்திருக்கிறது.
வேறு யாரும் இதைச் செய்யாவிட்டால், இஸ்ரேல் அதனைச் செய்துவிடும் என நெதன்யாகு அச்சுறுத்தியுள்ளார்.
ஹமாஸின் ஆயுதங்களை “எளிய வழியிலோ அல்லது கடினமான வழியிலோ” நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜோர்டான் நதிக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையிலான நிலம் தொடர்பாக அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் பல தலைமுறைகளாக நடந்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று டிரம்ப் தனது காஸா ஒப்பந்தம் குறித்து தெரிவித்துள்ளார்.
இது மத்திய கிழக்கு முழுவதற்குமான அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
அமைதியை ஏற்படுத்தும் பணி முடிந்துவிட்டதாக டிரம்ப் உண்மையில் நம்பினால், அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் அர்த்தம்.
அமைதியை ஏற்படுத்த, தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும், கடினமான ராஜ்ஜிய பணிகளைச் செய்ய வேண்டும். போரில் உள்ள இரு தரப்பும் வலியுடன் கூடிய தியாகங்களையும் சமரசங்களையும் செய்யத் தயாராக வேண்டும். அமைதி ஏற்பட, சில கனவுகளையும் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்கலாம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர்களும் நம்பியுள்ளனர்.
எனவே, ஒரு அதிபர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும், ‘அமைதி ஏற்படும் ‘ என்று முடிவு செய்வதால் மட்டும் அது நடக்காது என்பதை டிரம்ப் உணர்ந்து கொள்வார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு