பட மூலாதாரம், Prodip Guha/Getty Images
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடன இயக்குநர் தனஶ்ரீயின் திருமணமும் சரி, விவாகரத்தும் சரி இரண்டும் சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டன. இருவரின் திருமணம் டிசம்பர் 2020இல் நடந்தது. மார்ச் 2025இல் அவர்கள் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து சாஹல் தரப்பிலிருந்தோ, தனஶ்ரீ தரப்பிலிருந்தோ எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் வரவில்லை.
ஆனால், சமூக ஊடக பயனர்கள் யூகங்களை கூறுவதில் சளைக்கவில்லை. நீண்ட காலத்திற்கு வதந்திகள் நீடித்தன.
விவாகரத்துக்கு சிலர் சாஹலை குற்றம்சாட்டினர், சிலர் தனஶ்ரீயை குற்றம்சாட்டினர்.
இந்த யூகங்களுக்குப் பிறகு, இருவரும் வெவ்வேறு நேர்காணல்களில் இறுதியாக தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜூலையில், யுஸ்வேந்திர சாஹல் யூடியூபர் ராஜ் ஷமானியின் பாட்காஸ்டில் விவாகரத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய வதந்திகள், மன அழுத்தம், கவலை குறித்து பேசினார். இப்போது அவரது முன்னாள் மனைவி தனஶ்ரீயின் நேர்காணலும் வெளியாகியுள்ளது.
ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே யூடியூப் சேனலில் நெறியாளர் கரிஷ்மா மேஹ்தாவுக்கு அளித்த நேர்காணலில், தனஶ்ரீ விவாகரத்து, எதிர்மறை கருத்துகள் மற்றும் மனநலம் குறித்து பேசியுள்ளார்.
சாஹலின் டீ-ஷர்ட் குறித்து தனஶ்ரீ: ‘வாட்ஸ்ஆப்பில் சொல்லியிருக்க வேண்டும்’
பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
இருவரின் விவாகரத்து செயல்முறையின் போது ஒரு டீ-ஷர்ட் மிகவும் விவாதத்திற்குள்ளானது. அது குறித்து இருவரும் நேர்காணலில் பேசியுள்ளனர்.
உண்மையில், விவாகரத்து முடிவு அன்று யுஸ்வேந்திர சாஹல் ‘Be Your Own Sugar Daddy’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு டீ-ஷர்ட் அணிந்து வந்திருந்தார்.
இந்தியில் இந்த வரியின் பொருள்: “மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல், உங்கள் நிதித் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்யும் ஒரு நபராக இருங்கள்.”
சமூக ஊடகப் பயனர்கள், தனஶ்ரீ வாழ்க்கைச் செலவுத் தொகையாக (அலிமோனி) சாஹலிடம் கேட்ட தொகையை கேலி செய்யும் வகையில் இந்த டி-ஷர்ட்டை அணிந்ததாகக் கூறினர்.
அப்போது சாஹல் இதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால் நேர்காணலில் இதைப் பற்றி பேசினார்.
தான் எந்தவொரு நாடகத்தையும் உருவாக்க விரும்பவில்லை என்றும் ஆனால் ஏதோ ஒரு சம்பவம் நடந்ததால் இப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
“அந்த டி-ஷர்ட் மூலம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினேன்.”
இந்தக் கருத்துக்கு தனஶ்ரீ ஒப்பவில்லை என்று அவரது பதில்களிலிருந்து தெரிகிறது.
இந்தக் கருத்துக்கு தனஶ்ரீ பதிலளிக்கையில், சஹால் இந்த செய்தியை வாட்ஸ்ஆப்பில் கூட அனுப்பியிருக்கலாம், டி-ஷர்ட்டில் எழுதி தெரிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பினார்.
இந்த டி-ஷர்ட் விவகாரம் தன்னை மிகவும் புண்படுத்தியது என்றாலும் இந்தச் சம்பவம்தான் முன்னேற உதவியாக இருந்தது, என தனஶ்ரீ சொல்கிறார்.
“நீதிமன்றத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. மனதளவில் எல்லோரும் தயாராகவே இருந்தோம். ஆனாலும், திருமண முறிவு செயல்முறையின்போது நீதிமன்றத்தில் நான் அழுது தீர்த்தேன்,” என்கிறார் தனஶ்ரீ.
“ஒரு துணையாக எவ்வளவு முயற்சி செய்தேன் என்பது எனக்குத் தெரியும். சிறியவை முதல் பெரியவை வரை எல்லாவற்றிலும் நான் என் துணையுடன் உறுதியாக நின்றேன். அதனால்தான் அன்று நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.”
“ஆனால், அந்த டி-ஷர்ட் விவகாரத்தைப் பார்த்தபோது, இனி சிரித்தபடி முன்னேறுவேன் என்று அதே நேரத்தில் முடிவு செய்துவிட்டேன். அந்த டி-ஷர்ட் சம்பவம் எனக்கு ஒரு உந்துதலாக அமைந்தது. அது எனக்கு முன்னேறுவதற்கு தைரியத்தைக் கொடுத்தது.”
பட மூலாதாரம், Prodip Guha/Getty Images
வதந்திகளால் மன அழுத்தம் – சாஹல்
சாஹல் – தனஶ்ரீ திருமண முறிவின்போது பல வதந்திகள் பரவின. இந்த வதந்திகளால் தங்கள் மனநலம் பாதிக்கப்பட்டதைப் பற்றி இருவரும் தங்கள் நேர்காணல்களில் பேசியுள்ளனர்.
இந்த வதந்திகள் உங்களை எப்படி பாதித்தன என்ற கேள்விக்கு, சாஹல் “திருமண முறிவு காரணமாக நான் ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தேன். அதற்கு மேல் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளால் என் மனம் முற்றிலும் மரத்துப்போனது. 2-4 மாதங்கள் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், நான் யாரிடமும் இதைச் சொல்லவில்லை.” என்றார்
“எல்லாம் இருந்தும் என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்றால், நான் வாழ்வதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், என் நண்பர்களும் குடும்பத்தினரும் இதிலிருந்து மீள உதவினார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“பெற்றோருக்காக வலுவாக இருக்க வேண்டியிருந்தது” – தனஶ்ரீ
தனஶ்ரீயும் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சிரமங்களைப் பகிர்ந்தார்.
“அந்த நேரத்தில் எனக்கு ஆதரவு தேவைப்பட்டது, என் பெற்றோருக்கும் தேவைப்பட்டது. அவர்களுக்காக நான் வலுவாக இருப்பது முக்கியமாக இருந்தது. நான் இந்த தலைமுறையைச் சேர்ந்தவள் என்பதால், எதிர்மறைக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். ஆனால், பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் இதை விளக்குவது கடினமாக இருந்தது,” என அவர் தெரிவித்தார்.
“பலமுறை சமூக ஊடகங்களில் செய்திகளைப் பார்த்து என் அம்மா மனம் உடைந்து போனார். அம்மா-அப்பாவிடம் இருந்து தொலைபேசியை வாங்கி வைத்திருக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் நான் பெற்றோரைத் தேற்றினேன், சில சமயங்களில் அவர்கள் என்னைத் தேற்றினார்கள்,” என்று நேர்காணலில் தனஶ்ரீ கூறினார்.
பட மூலாதாரம், Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images
தனஶ்ரீக்கு ‘பாட்காஸ்ட்’ பயம்!
சாஹல் பாட்காஸ்டில் திருமண முறிவு குறித்து பேசியவற்றுடன் தன்ஶ்ரீ ஒத்துப்போவதில்லை என்று அவரது பதில்களிலிருந்து தெரிகிறது. அவருக்கு எதற்காவது பயம் உள்ளதா என்று கேட்கப்பட்டது.
“பேய், இருட்டு, உயரம் எதற்கும் என எனக்கு பயம் இல்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்கு பயம் உண்டு – பாட்காஸ்ட்!” என்று அவர் பதிலளித்தார். இந்தக் கூற்று சாஹலின் பாட்காஸ்ட்டை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது.
முதல் படத்திற்காக உற்சாகமாக இருக்கும் தனஶ்ரீ
இப்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர் மற்றும் தங்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்பதை இருவரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
மீண்டும் காதல் குறித்து கேட்கப்பட்டபோது சாஹல், “இப்போது நான் என்னை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறேன். திருமண முறிவு நடந்து சில மாதங்களே ஆகியுள்ளன. ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றி மீண்டும் யோசிக்கலாம்,” என்று தெரிவித்தார்.
“நான் என்னை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறேன். எனது முழு கவனமும் வளர்ச்சி மற்றும் தொழிலில் உள்ளது,” என்று தனஶ்ரீயும் கூறினார்.
“இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்தேன், ஆனால் அப்படி நடக்கவில்லை. என்னிடம் பல திட்டங்கள் உள்ளன,” என்றும் தனஶ்ரீ மேலும் கூறினார்.
அக்டோபரில் அவரது முதல் திரைப்படம் வெளியாகிறது. இது தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள ஒரு நடன-நாடகப் படமாகும். இதற்காக அவர் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். மேலும் சில திரைப்பட வாய்ப்புகளும் அவரிடம் உள்ளன.
பட மூலாதாரம், Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Image
‘பெண் தில்ஜித்’ ஆக விரும்பும் தனஶ்ரீ
“நான் நடிகர், பாடகர் மற்றும் நடனமாடுவர் என ஒரு பெண் தில்ஜித் (தோசாஞ்) ஆக விரும்புகிறேன்.” என தனஶ்ரீ கூறினார்.
மீண்டும் காதல் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். “நாம் அனைவரும் வாழ்க்கையில் காதலை விரும்புகிறோம். நான் தன்னை நேசிப்பதில் (செல்ஃப் லவ்) நம்பிக்கை கொண்டவள், ஆனால் நமக்குள் நல்லதாக ஏதேனும் நடக்கவேண்டும் என விதி எழுதியிருந்தால், ஏன் கூடாது?”
“எனது பெற்றோரும் நண்பர்களும் இதையே விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காதல் இருக்க வேண்டும். நான் காதலுக்கு தயாராக இருக்கிறேன்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு