சென்னை: சென்னையில் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடிய இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொரு சம்பவத்தில் பேட்மிட்டன் விளையாடியபோது ஓய்வு பெற்ற ராணுவ கர்னலும் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). சென்னையில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் பணி செய்து வரும் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, இவர் ஆதரவு தெரிவித்த அணி வெற்றி பெற்றது. இதனால், உற்சாகம் அடைந்த கார்த்திக், போட்டி முடிவடைந்த பின்னர் மைதானத்தை சுற்றி வந்ததோடு மட்டும் அல்லாமல் உற்சாக குரலெழுப்பி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்டு சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்திக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மாரடைப்பால் கார்த்திக் இருந்துள்ளது தெரியவந்தாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராணுவ கர்னல் உயிரிழப்பு: தலைமைச் செயலகத்தில் முன்னாள் படைவீரர்கள் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் கர்னல் ஜான்சன் தாமஸ்(50). கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார். இந்நிலையில், அண்ணாசாலை மன்றோ சிலை எதிரே உள்ள ராணுவ மைதானத்தில் ஜான்சன் தாமஸ் பேட்மிட்டன் விளையாடினார். அப்போது, அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு அங்கேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஜான்சன் தாமஸ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.