• Mon. Mar 23rd, 2026

24×7 Live News

Apdin News

‘கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சியால் இந்தியாவில் வறட்சி’ – 8,200 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது?

Byadmin

Mar 23, 2026


இந்திய பருவமழையை பாதித்த கிரீன்லாந்து குளிர்ச்சி – 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

உலகின் ஒரு மூலையில் நடந்த காலநிலை மாற்ற நிகழ்வால், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள மற்றொரு நாட்டின் பருவமழைக் காலத்தில் தாக்கம் செலுத்த முடியும் என்பதைக் கேட்கும்போது வியப்பாகத் தோன்றலாம்.

ஆனால், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் பீர்பால் சஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வடக்கு அட்லாண்டிக் பகுதியிலும் கிரீன்லாந்திலும் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சி, இந்தியாவின் பருவமழையை பலவீனப்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் காலநிலை அமைப்பு தனித்தனியாக அன்றி, ஒன்றோடொன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் காலநிலையில் திடீரென ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதை விஞ்ஞானிகள் “8.2ka குளிர்ச்சி நிகழ்வு” என்று அழைக்கிறார்கள். இது ஹோலோசீன் காலகட்டத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான திடீர் குளிர்ச்சி நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆய்வறிக்கைப்படி, அந்தக் காலகட்டத்தில் கிரீன்லாந்தில் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்தது. அதேநேரம், வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் அளவும் குறைந்தது. இவையனைத்தும், உலகளாவிய நீர்சுழற்சியிலும் காலநிலை அமைப்பிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டுவதாக பீர்பால் சஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் மகேஷ் தாக்கர் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

By admin