11
கிரீன்லாந்தை, அமெரிக்கா வாங்க அனுமதிக்காவிட்டால் பல ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள், இன்று (18) அவசரமாக ஒன்றுகூடுகின்றனர். ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தலை விவாதிக்க தலைவர்கள் அவசரக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பெப்ரவரி 1 முதல் இங்கிலாந்து, டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டியுள்ளார். மேலும், கிரீன்லாந்து தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் இந்த வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இதை “முற்றிலும் தவறானது” என விமர்சித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறியுள்ளார். எந்த மிரட்டலும் ஐரோப்பாவை பாதிக்காது என்றும் இம்மானுவேல் உறுதியாக தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முனைப்புக் காட்டுவதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஆர்க்டிக் பகுதிக்கு துருப்புகளையும் அனுப்பியுள்ளனர்.
இதேநேரத்தில், அமெரிக்காவின் கையகப்படுத்தல் முன்மொழிவுக்கு எதிராக கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் வளங்கள் நிறைந்த கிரீன்லாந்து, வட அமெரிக்கா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளுக்கிடையே முக்கியமான புவியியல் நிலையைக் கொண்டுள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் அது முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.