0
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக, எட்டு ஐரோப்பிய நாடுகளின் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும் என முன்னதாக அறிவித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் ட்ரம்ப் ( Donald Trump) அந்த முடிவை தற்போது மீளப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனினும், கிரீன்லாந்தைக் கையப்படுத்தும் தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதற்காக இராணுவ பலத்தை பயன்படுத்தும் சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில், NATOவின் தலைவர் மார்க் ருட்டே (Mark Rutte) உடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக Truth Social தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பிராந்தியம் தொடர்பான எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த தீர்வு முழுமை பெற்றால், அது அமெரிக்காவுக்கும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் சாதகமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டே, வரி விதிப்பு மிரட்டலைத் திரும்பப் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.