பட மூலாதாரம், Getty Images
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி, தாலி அணிந்தபடி பள்ளிக்கு வந்ததை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
மாணவியிடம் விசாரித்ததில், அவரது பெற்றோர் முடிவில் அவருக்கு திருமணம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறிய தகவலின் அடிப்படையில், மாவட்ட சமூக நலத்துறையும், குழந்தைகள் நலக்குழுவும் விசாராணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், சமூக நலத்துறை அளித்தப் புகாரின் அடிப்படையில், சிறுமியை திருமணம் செய்த 25 வயது இளைஞரும், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
இச்சம்பவத்தில் நடந்தது என்ன?
அதிகாலையில் பூட்டிய கோவில் முன் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, பெற்றோரின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) அதிகாலை அதே பகுதியில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் முடிந்து தாலி அணிந்தபடி மாணவி பள்ளிக்கு வந்திருக்கிறார்.
“இதனை பார்த்த ஆசிரியர்களும், சக மாணவியரும் அதிர்ச்சியடைந்தார்கள். சிறுமிக்கு திருமணம் செய்வது குழந்தைத் திருமண தடைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் சமூக நலத்துறை விசாரணையின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது,” என்று மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஊரில் யாருக்கும் தெரியாமல் இருக்க, இந்த குழந்தை திருமணம் அதிகாலையில் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதுபற்றி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சக்தி சுபாசினி, பிபிசி தமிழிடம் கூறியதாவது: “ஊரில் உள்ள முருகன் கோவிலில் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த திருமணம் நடந்திருக்கிறது. கோவில் தரப்பில் பூசாரிகள் யாரும் இல்லை. மூடியிருந்த கோவிலுக்கு முன் திருமணம் செய்திருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
திருமணத்துக்குப் பின் பள்ளிக்கு வந்த மாணவி
திருமணம் முடிந்த பின்னர் அந்த சிறுமி பள்ளிக்கு வழக்கம் போல படிக்கச் சென்றிருக்கிறார். கழுத்தில் தாலி அணிந்தபடி அவர் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார். “சில நாட்களுக்கு முன்பே அந்தச் சிறுமி தன்னுடைய வீட்டில் ஏதோ நல்ல காரியம் நடக்கப்போவதாகவும், அதற்காக புதிதாக துணி எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்” என்று அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட சமூக நலத்துறை அதிகாரி சக்தி சுபாசினி நம்மிடம் விவரித்தார்.
மேலும், முதல்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்தச் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடந்திருப்பதாக தெரியவரவில்லை என்றும் அவர் கூறினார்.
விசாரணைக்குப் பின்னர், சமூக நலத்துறை அளித்தப் புகாரின் பேரில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் அதிகாலையில் நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்குப் பின் சில மணி நேரங்களில் சிறுமி பள்ளிக்கு வந்துவிட்டார். மேலும், சிறுமியிடம் விசாரித்ததில் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக தெரியவில்லை, எனவே தற்போதைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
குழந்தைத் திருமணத்தை எதிர்கொண்ட சிறுமியுடைய பெற்றோர் அன்றாட கூலிகளாகவே வேலை செய்து வருகிறார்கள். அவர்களுடைய வசிப்பிடத்தில் ஒரு சிறுவனிடம் தனது மகள் பேசிக்கொண்டிருப்பதை சில நாட்கள் முன் பெற்றோர் பார்த்ததாகவும் அந்த சிறுவன் தங்கள் மகளோடு வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே உடனடியாக திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கு பெற்றோர் வந்ததாகவும் விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறுமியை திருமணம் செய்த 25 வயதான ஆண் வழக்கை எதிர்கொண்டுள்ளார். காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த மர வேலை செய்துவரும் அவர், அவருடைய பெற்றோருடன் அதிகாலை நேரத்தில் முருகன் கோவிலுக்கு முன் வந்து திருமணம் செய்திருக்கிறார். காவல்துறையினர் அவரை நேரில் விசாரணை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சரவணன், “நேரடி விசாரணை நடந்துவருகிறது. எங்களுடைய குழுவினர் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்றிருக்கிறார்கள். புகாரின் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
ஓர் ஆண்டில் 73 குழந்தை திருமண புகார்கள்
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில், குழந்தை திருமணம் நடந்திருப்பதாக 73 புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த புகார்களில் 38 சம்பவங்களில் திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்திலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்ட திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வெகு சில பொய்யான புகார்களும் பெறப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதை தடுப்பது மிக மிக சவாலான காரியம் என்று கூறுகிறார் சமூக நலத்துறை அதிகாரி சக்தி சுபாசினி.
மேலும் அவர் “கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சில திருமணங்கள் பெற்றோர் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன. இன்னும் வேறு சில நேரங்களில் சிறுவர்கள் தாங்களே முடிவு செய்து திருமணம் செய்துகொள்கின்றனர். அந்த சிறுவர்களிடம் இவ்வாறு முடிவு செய்வது தவறு என்று எடுத்துக் கூறி அவர்களை பள்ளிக்கு படிக்க அனுப்புவது சவாலாக இருக்கிறது. வேறு பல நேரங்களில் பொருளாதார காரணங்களால் குடும்பத்தினர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க அவசரப்பட்டு முடிவு செய்கிறார்கள். வறுமையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்படுகிறது” என்றார்.
வேறு சில நேரங்களில் வேற்று சமூகத்தினரை விரும்பிவிடுவார்களோ என்ற பயத்திலும் பெற்றோர், தம் குழந்தைகளை தங்கள் சமூகத்திலேயே ஒரு ஆணுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.
குழந்தை திருமணத்திலிருந்து தப்பித்து வீட்டில் இருப்பதற்கான சூழல் இல்லாத சிறுமிகளை பாதுகாத்து, அவர்களது படிப்பு தொடர்வதற்கான பணிகளையும் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது குழந்தை திருமணம் செய்யப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் இருந்து வருகிறார். அவரது பெற்றோரை தொடர்புகொள்ள முயன்றும் அவர்களிடம் பேச இயலவில்லை.
குழந்தை திருமண ‘ஹாட் ஸ்பாட்’களை கண்டறிய கோரிக்கை
குழந்தை திருமண தடைச் சட்டம் இருந்தும் திருமணங்கள் நடைபெறுகிறது என்றால், அந்த சட்டத்தால் குழந்தை திருமணங்களை தடுக்க முடியவில்லை என்று அர்த்தம் என்கிறார் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன்.
“தேசிய குடும்ப நல ஆய்வு தரவுகளின் படி தமிழ்நாட்டில் 12% அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதவாது 5 ஆயிரம் திருமணங்கள் நடைபெற்றால் அதில் சுமார் 600 திருமணங்கள் குழந்தை திருமணங்களாகும். ஒவ்வொரு திருமணத்திலும் சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளர், கோவில் பூசாரி என அனைவரையும் கைது செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. அது சாத்தியம் இல்லை. எனவே கூர்நோக்குடன் திட்டங்கள் தேவை” என்றார் தேவநேயன்.
மாநிலத்தில் கிருஷ்ணகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன என்று கூறும் அவர், “குழந்தை திருமண ஹாட் ஸ்பாட்களை கண்டறிந்து, அந்த இடத்துக்குத் தேவையான குறிப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” என்கிறார்.
பட மூலாதாரம், HANDOUT
குழந்தைத் திருமண தடைச் சட்டத்தில் தண்டனை என்ன?
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006, இந்தியாவில் நாடு முழுவதும் நடைபெறும் திருமணங்களுக்குப் பொருந்தும்.
இந்தச் சட்டத்தின்படி 21 வயது நிறைவடைந்த ஆண் 18 வயதுக்குக் குறைவான பெண்ணைத் திருமணம் செய்தால் சட்டப்படி அந்த ஆண் தண்டிக்கப்படுவார்.
அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் திருமணம் செய்து வைக்கும் நபர்களுக்கும் இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு குழந்தைத் திருமணம் நடக்கிறது என்றாலும் அல்லது குழந்தைத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தாலும் அதை உடனடியாக யார் வேண்டுமானாலும் காவல்துறையிடம் புகார் கூறலாம். 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு அழைத்து தகவலைத் தெரிவிக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு