இன்றைய ( 04/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி 1000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது என்றும் நிறுவனத்தின் நஷ்டத்தை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்றும் தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கிருஷ்ணகிரியில் உற்பத்தி ஆலையை கொண்டுள்ளது. உற்பத்தி பிரிவில் தான் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் 500 பேரை பணியிலிருந்து நீக்கி இருந்தது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 4000 விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் உள்ளன. கடந்த 2024 டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூபாய் 564 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் நஷ்டம் ரூபாய் 376 கோடியாகும்.
தொடக்கத்தில் ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால் வாகனத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள் முக்கியமாக பேட்டரி தீப்பற்றுவது, விற்பனைக்கு பிந்தைய சேவையில் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறாதது, போன்றவற்றால் நிறுவனம் பின்னடைவை சந்திக்க தொடங்கியது.
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீது 10,644 புகார்கள் வந்துள்ளன எனினும் இதில் 99.1 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மணமானதும் குழந்தை பெற்றுக்கொள்ள ஸ்டாலின் அறிவுறுத்தல்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு குறித்த விவாதம் நடைபெறும் வேளையில், திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என நாகப்பட்டினத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் எனது இந்து பிசினஸ் லைன் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“முன்பு இளம் தம்பதியினர் தங்களுக்கு உரிய நேரத்தை எடுத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துவோம். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நீங்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தற்போது முன்மொழியப்படும் தொகுதி மறுசீரமைப்பின் படி, மாநிலத்துக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு மக்கள் தொகை ஒரு காரணியாக இருக்கும். நாம் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதால் இன்று இந்த நிலையில் இருக்கிறோம்” என்று முதல்வர் மு க ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரைய பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு முடிவு
பட மூலாதாரம், Getty Images
கிரைய பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குழு அமைத்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல்வர் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரின் உத்தரவின்படியும் விடுபட்ட மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்குவது தொடர்பாக வாரிய மேலாண்மை இயக்குனர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறுகிறது என அந்த செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் அந்த செய்தியில், “கூட்டத்தில் வாரிய மேலாண்மை இயக்குனர் அன்சுல் மிஸ்ரா பேசிய போது கிரையப் பத்திரம் பெறாத மனைகள் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார். வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் ஆகிய இரு திட்டப்பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெற்ற மனைகள் தவிர்த்து இது நாள் வரையில் கிரைய பத்திரம் பெறாமல் மனைக்கு உண்டான தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் நிலுவையிலுள்ள 12 ஆயிரத்து 495 மனைகளை சமுதாய பங்கேற்பு உதவியாளர்களைக் கொண்டு ஒவ்வொரு மனையாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு 25 மனைகள் விதம் 10 நாட்களுக்கு 250 மனைகள் ஆய்வு செய்ய 50 சமுதாய பங்கேற்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மனைக்கு உண்டான ஆவணங்களை பெற்று அதன் விவரத்தினை வாரியத்துக்கு 10 தினங்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் என தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
பட மூலாதாரம், X@iamVikramPrabhu
சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் ‘அன்னை இல்லம்’ என்ற வீட்டின் ஒரு பகுதியை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” ‘ஜெகஜால கில்லாடி’ என்ற திரைப்படத்தின் தயாரிப்புக்காக சிவாஜி கணேசனின் பேரனான நடிகர் துஷ்யந்த் ராம்குமாரின் ஈசன் தயாரிப்புகள் என்ற நிறுவனம் வாங்கிய 3.74 கோடி ரூபாய் கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடமிருந்து இந்த கடனை வாங்கும் போது, ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. கடன் தொகையை திருப்பித் தராததால் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
திரைப்படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை துஷ்யந்த திருப்பி செலுத்தவில்லை. எனவே ஆண்டுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடி செலுத்த வேண்டும் என்று கடன் கொடுத்த தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அவகாசம் கேட்ட பொழுதும் கூட இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 33% மின்சாரக் கட்டணக் குறைப்பு எப்போது? – பிரேமதாச கேள்வி
பட மூலாதாரம், Facebook
அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்த 33 வீத மின்சார கட்டணத்தை எப்போது குறைக்கப் போகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியதாக இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் அந்த செய்தியில், ” ஜனாதிபதி அன்று மக்களுக்கு தெரிவித்த வாக்குறுதியை ஏன் அரசாங்கத்துக்கு செய்ய முடியாது என கேட்கிறோம். அதேபோன்று 9 ஆயிரம் ருபாவுக்குரிய மின் கட்டணத்தை 6 ஆயிரம் ரூபாவாகவும் 3 ஆயிரம் ரூபா மின்கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவாகவும் அனைவருக்கும் நூற்றுக்கு 33 வீதம் மின் கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசாங்கம் நூற்றுக்கு 20 வீதம் மின்சார கட்டணத்தை குறைத்திருக்கிறதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதுவும் மக்கள் போராடியதாலே அதனை குறைத்தார்கள். 6 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க முடியாது என்றே தெரிவித்தார்கள். அதனால் எஞ்சிய நூற்றுக்கு 13 வீத மின்சார கட்டண குறைப்பை எப்போது அரசாங்கம் மேற்கொள்ளப்போகிறது என அமைச்சரிடம் கேட்கிறேன்.
மேலும், அண்மையில் நாட்டில் திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்டதற்கு குரங்கு பாய்ந்ததால் ஏற்பட்டது என சிலர் தெரிவித்து வந்தார்கள். ஆனால் அது எதனால் ஏற்பட்டது என எங்களுக்கு தெரியாது. என்றாலும் குரங்கு ஒன்றின் காரணமாக முழு நாட்டினதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இவ்வாறு செய்தி வெளியிடும்போது நேரடி முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? சர்வதேச முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? என்று சஜித் பிரேமதாச பேசினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.