பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்கின்றனர்.
மருத்துவ படிப்பு மீதான ஆர்வமும், மருத்துவர் பணி மீதான சமூக மதிப்பும் இருப்பதன் காரணமாக இந்தியாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 13,15,853 பேர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
அவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்துக்கும் சற்று அதிகமான இடங்கள் மட்டுமே உள்ளன.
அது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதிகபடியான கட்டணமும், இந்திய மாணவர்கள் வெளிநாடு செல்ல காரணமாக உள்ளது.
ஏன் வெளிநாடு செல்கின்றனர்?
ரஷ்யாவில் மருத்துவம் பயின்று தற்போது தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் மருத்துவர் அருள் வர்மன், ” 2014-ம் ஆண்டு நான் 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றேன். அப்போது நீட் தேர்வு கிடையாது. என்னுடைய பள்ளி மதிப்பெண்கள் மூலம் கிடைத்த கட்-ஆப் மதிப்பெண்ணை கொண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விசாரித்த போது – ‘நன்கொடை’ கட்டணம் மட்டுமே 30 முதல் 35 லட்சம் கேட்டனர், பிறகு மொத்த படிப்பை முடிக்க கணக்கு போட்டு பார்த்தால், கிட்டத்தட்ட 80 லட்சம் செலவாகும் என தெரியவந்தது. எனவே பொறியியல் படிப்பில் சேரலாம் என்றிருந்தேன். என்னுடைய அப்பா விவசாயி, அம்மா கூலி வேலை செய்து வந்தார். செய்தித்தாளில் வெளிநாட்டு மருத்துவ படிப்பு குறித்து விளம்பரத்தை பார்த்து, நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எனது தந்தை. ஓராண்டுக்கு சுமார் 1.5 லட்சம் செலவில் படித்துவிடலாம் என்று ஏஜெண்டு விளம்பரம் செய்திருந்தார். எனினும் தங்கும் செலவு, உணவு என மொத்தமாக ரூ.10 முதல் ரூ.15 லட்சம் செலவாகியது” என்கிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்து முடித்து விட்டு, தற்போது தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் மருத்துவர் லகாந்தி, “12ம் வகுப்பு மதிபெண்களைக் கொண்டு எனக்கு பல் மருத்துவம் படிக்கவே இடம் கிடைத்தது. ஒரு தனியார் கல்லூரியில் ரூ.50 லட்சம் மற்றொன்றில் ரூ.25 லட்சம் ‘நன்கொடை’ கட்டணம் மட்டுமே கேட்டார்கள். எனது அம்மா மருந்தாளுநர், அப்பா தொழில் செய்து வருகிறார்.
ஏஜென்சி விளம்பரம் ஒன்றை பார்த்து அவர்களை தொடர்பு கொண்டோம். பிலிப்பைன்ஸ் இந்தியா போன்ற தட்பவெட்ப நிலை கொண்ட நாடு, எனவே அங்குள்ள நோய்களும் இங்குள்ள நோய்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறினர். பிலிப்பைன்ஸில் உள்ள Davao Medical School- சேர்க்கைப் பெற்றேன். ரூ. 25 லட்சம் செலவாகும் என்று கூறி கடைசியில் ரூ.35 லட்சம் செலவானது.” என்றார்.
பட மூலாதாரம், Dr Lagandhi
மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை ஒழுங்குப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை அந்தந்த மாநில அரசு நிர்ணயிக்கிறது. அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அந்தந்த மாநில அரசுகள் அமைத்துள்ள குழு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. நிகர்நிலைப் பல்கலைகழங்களில், தனியார் கல்லூரிகளில் உள்ள 50% மேனேஜ்மெண்ட் பிரிவு இடங்களுக்கான கட்டண வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. எனினும் மருத்துவ படிப்புக்கான கட்டணம் விண்ணை தொடும் அளவு இருக்கின்றன. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடு செல்ல இது ஒரு முக்கிய காரணமாகும்.
“48% இடங்களை கொண்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.60 லட்சம் முதல் ஒரு கோடி அல்லது அதற்கும் மேல்…இதன் விளைவு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சீனா, ரஷ்யா, யுக்ரேன், பிலிப்பைன்ஸ், வங்கதேசம் போன்ற குறைந்த கட்டணம் இருக்கும் சுமார் 50 நாடுகளுக்கு சென்று படிக்கின்றனர்” என்று பொருளாதார ஆய்வு 2024-25 கூறுகிறது.
எந்த நாடுகளுக்கு செல்கின்றனர்?
2021-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் வெளிநாட்டில் மருத்துவ படிப்பின் காலம் குறைந்தது 54 மாதங்கள் இருக்க வேண்டும் என்று வரையறுத்தது. அந்தந்த நாட்டின் மொழியை கற்றுக் கொள்ள ஆறு மாத காலம் படிப்பின் ஒரு பகுதியாக இருக்கும். மொழியை கற்றுக் கொள்ளும் காலம் இந்த 54 மாதங்களில் அடங்காது என்றும் தெரிவித்தது. இது போக ஓராண்டு காலம் செய்முறைப் பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.
பொதுவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மீது மாணவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தியாவில் படிப்பதை விட குறைந்த செலவில் ஜார்ஜியா, உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ படிப்பை மேற்கொள்ளலாம். இந்தியாவில் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி வரை செலவாகும் நிலையில், இந்த நாடுகளில் அதை விட 50%க்கும் குறைவான செலவில் படிப்பை முடித்துவிடலாம் என்கின்றனர் மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவும் ஏஜென்சிகள்.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஐ எம் டி பி எனும் அமைப்பின் இயக்குநர் சசிதரன் நம்பியார், “கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ரூ.40 லட்சத்துக்கு உள்ளாக மருத்துவ படிப்பு முழுவதையும் முடித்து விடலாம். இந்த நாடுகளில் 12ம் வகுப்பில் 50% முதல் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் மருத்துவம் படிக்க தகுதி பெறலாம்” என்கிறார்.
பிரபலமாகி வரும் கிர்கிஸ்தான், கசகஸ்தான்
மேலும், “கொரோனா காலத்துக்கு முன்பு சீனாவுக்கு நிறைய மாணவர்கள் சென்றனர். அங்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சத்தில் மருத்துவ படிப்பை முடிக்கலாம். ஆனால் கொரோனா பெருந்தொற்று, இந்திய-சீனா எல்லை தகராறுகள் காரணமாக அங்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சமீபமாக வெகுவாக குறைந்துள்ளது. அதே போன்று போர் காரணமாக யுக்ரேனுக்கு செல்லக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. சமீப ஆண்டுகளில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் நாடாக கிர்கிஸ்தான் மற்றும் கசகஸ்தான் ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அங்கு கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. ரூ.25 லட்சத்துக்கும் குறைவான செலவில் முழு படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்ப முடியும். அதே போன்று வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு காஷ்மீர், மேற்கு வங்கம், மற்றும் சில வட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் மருத்துவம் படிக்க செல்வதுண்டு. தென் மாநிலங்களிலிருந்து சிறிய எண்ணிக்கையிலானவர்கள் அங்கு செல்கின்றனர். தற்போது அரசியல் நிலைமைகள் காரணமாக அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆசியாவில் இந்த நாடுகளை தவிர, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வியட்நாமுக்கு மாணவர்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர். இங்கும் ரூ.25 லட்சதுக்கும் குறைவான செலவில் மருத்துவ படிப்பை முடித்துக் கொள்ள முடியும் ” என்று சசிதரன் கூறுகிறார்.
வெளிநாட்டு மருத்துவ படிப்பு குறித்த மாணவர்களுக்கான ஆலோசகரான தாய்பிரபு, “ரஷ்யா-யுக்ரேன் போருக்கு பின், இந்திய மாணவர்களை ஈர்க்கும் வகையில் சமீபத்தில் வியட்நாமில் மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய பாடத்திட்டத்தை மிகவும் ஒத்ததாக உள்ளது. அதே போன்று வங்கதேசத்தில் படிப்பதும் கிட்டத்தட்ட கொல்கத்தாவில் படிப்பது போன்று தான். ஆனால் அரசியல் நிலைமைகள் காரணமாக, சமீப காலமாக மாணவர்களுக்கு அதிகம் பேர் அங்கு செல்வதை விரும்பவில்லை. மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் மருத்துவம் பயில்கிறார்கள், ஆனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது அங்கு கட்டணம் அதிகம்” என்கிறார்.
உஸ்பெகிஸ்தானில் அப்போலோ குழுமம் இந்திய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை இந்தியர்களைக் கொண்டு கற்று தருகிறார்கள் என்றும், அங்கு சுமார் ரூ.40 லட்சத்தில் படிப்பை முடித்து திரும்பலாம் என்றும் சசிதரன் குறிப்பிடுகிறார்.
பார்க் இண்டர்நேஷ்னல் எஜுகேஷன் எனும் ஏஜென்சியின் நிர்வாக இயக்குநர் அசோக் குமார், “ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, யுக்ரேனில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு, உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.” என்கிறார்.
“பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்கில மொழி பேசப்படுவதால் இந்திய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க அது விருப்பமான நாடாக உள்ளது. அங்குள்ள சீதோஷ்ண நிலை இந்தியாவுக்கு ஒத்ததாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் உள்ள நோய்களும் பிலிப்பைன்ஸ்-ல் உள்ள நோய்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவையாக உள்ளன. எனவே மாணவர்கள் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கிறது. உள்ளூரில் ஆங்கிலம் பேசுவதால், நோயாளிகளுடன் நேரடியாக பேசவும் முடிகிறது” என்று தாய்பிரபு கூறுகிறார்.
அசோக் குமார் “பிலிப்பைன்ஸ் நாட்டில் படிப்பவர்கள் விசா புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வர வேண்டாம், படிப்புக் காலத்தில் அங்கிருந்தே புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்த நாட்டில் மட்டும் தான் மாணவர்கள் இறந்தவர்களின் பராமரிக்கப்பட்ட உடலை பயன்படுத்தி கற்றுக் கொள்ள முடியும். பிற நாடுகளில் மனித உடல் மாதிரிகளே பயன்படுத்தப்படுகின்றன. பிலிப்பைன்ஸை நாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார்.
இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் பயின்று, இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்று நினைத்தால், அவர்கள் நாடு திரும்பிய பிறகு, Foreign Medical Graduate Examination (FMGE) எனும் தேர்வை எழுத வேண்டும்.
FMGE தேர்வு எழுதியவர்களின் விவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, 2024-ம் ஆண்டில் கிர்கிஸ்தானில் படித்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதினர். அடுத்ததாக சீனாவில் படித்த 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர், ரஷ்யாவில் படித்தவர்கள் கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர், பிலிப்பைன்ஸ்-ல் படித்தவர்கள் 9 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
2019-ம் ஆண்டு இந்த தேர்வை எழுதியவர்களில் சீனாவிலிருந்து திரும்பியவர்களே அதிகமானோர். சீனாவில் படித்து திரும்பிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வை எழுதினர். அப்போது கிர்கிஸ்தானில் படித்த 3 ஆயிரத்துக்கும் சற்று அதிகமானோரே இந்த தேர்வை எழுதினர். பிலிப்பைன்ஸ்-ல் படித்தவர்கள் 1460 பேர் மட்டுமே இந்த தேர்வை எழுதியிருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர்கள் அதிகம் செல்வதை இந்த தரவுகள் காட்டுகின்றன.
மேற்கு நாடுகளுக்கு செல்வது குறைவு
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் பயின்று முடிக்க, ரூ.2.5 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவாகலாம் என்கிறார் சசிதரன் நம்பியார். “மேலும் பன்னிரண்டாம் வகுப்பில் 90% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே அங்கு சென்று மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. அப்படி படிப்பவர்கள் பெரும்பாலும் அந்த நாட்டிலேயே மருத்துவராக பயில்வார்கள், இந்தியாவுக்கு திரும்பி வர விரும்புவதில்லை” என்கிறார்.
ஆனால் இந்த நாடுகளில் படிப்பதற்கு மற்றுமொரு வழி இருக்கிறது என்கிறார் அவர். “மலேசியாவில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்வதன் மூலம், அங்கிருந்து மேற்கு நாடுகளில் மருத்துவம் பயின்று முடிக்க முடியும். படிப்பின் முதல் பகுதியை மலேசியாவிலும் அடுத்தடுத்த ஆண்டுகளை வேறு நாடுகளிலும் படிக்கும் வசதி உள்ளது. மலேசியாவில் படிப்பதற்கு 12ம் வகுப்பில் 86% மதிப்பெண்கள் வேண்டும்” என்கிறார்.
ஜெர்மனியில் அரசு கல்வி நிறுவனங்களில் மருத்துவ படிப்பை இலவசமாக மேற்கொள்ளலாம் என்றாலும், அவர்களின் மொழியை கற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நிறைய மாணவர்கள் அங்கு செல்வதில்லை. மாணவர் ஆலோசகர் தாய்பிரபு “ஜெர்மன் மொழியில் பி2, அல்லது சி3 வரை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பாடம் ஜெர்மன் மொழியிலேயே கற்றுத்தரப்படும்” என்கிறார்.
அசோக் குமார், “வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் நாடு திரும்பிய பிறகு FMGE தேர்வை எழுத வேண்டும். அந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவில் படிப்பவர்கள், வெளிநாட்டில் படிப்பவர்கள் என அனைவருக்கும் பொதுவான நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படலாம் என்று அரசு ஆலோசிப்பதால், இந்தியாவில் அதிக பணம் செலவிழத்து படிப்பதற்கு பதில் வெளிநாட்டில் படிக்கலாம் என்று மத்திய தர வகுப்பினர் யோசிக்கக் கூடும்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு