சென்னை: கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக ஆயர் பேரவையின் பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக்குழு சார்பில், கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, கடந்த மாதம் கலந்துரையாடல் நடந்தது.
அப்போது, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி மே 24-ம் தேதி திண்டுக்கல் வெள்ளோடு அருகே மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்துவாக இருக்கும்போதுதான் வன்னியரே தவிர, கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகு எப்படி வன்னியர் என்று குறிப்பிட முடியும்? இந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை ஆக்கிரமிக்கும் முயற்சி இது. திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறு செய்கின்றனர்.
இந்த மாநாடு நடைபெற்றால் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, மாநாட்டை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் வன்னியர் சமூக மக்களை ஒன்று திரட்டி, இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இந்த கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்துகின்றன.
இதனால் தமிழகம் முழுவதும் ஏழை மாணவர்கள் பயனடைந்து வந்தனர். தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கல்விக்கட்டணம் செலுத்தப்படுவதில்லை. இதனால் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திக்கின்றன. எனவே, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.