பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், கா.அ. மணிக்குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டென்மார்க் நாட்டு மன்னர் நான்காம் பிரடெரிக் தனது காலனி ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த தரங்கம்பாடிக்கு ஜெர்மானிய சமயப் பணியாளர்களான பார்த்தலோமி டீயோ சீகன்பர்க், ஹென்றிலே பூச்சா இருவரையும் அனுப்பி வைத்தார். அங்கு அவர்கள் நிறுவியிருந்த (1706) லுத்தரன் திருச்சபைக்கு 1750ஆம் ஆண்டு வந்த கிறிஸ்தியன் F. சுவார்ட்ஸ், பிரஷ்யாவின் பிராண்டன்பர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சொனன்பர்க்கில் பிறந்தவர் (1726).
ஹலேயில் ஒரு ஆதரவற்றோர் விடுதியில் தங்கி பயிற்சி முடித்து (1746) டென்மார்க் நாட்டு கோபன்ஹேகனில் பாதிரியாரானார் (1749). அங்கிருந்து தரங்கம்பாடி வந்த சுவார்ட்ஸ் தமிழகத்தின் தென், தென்கிழக்கு மாவட்டப் பகுதிகளில் கிறிஸ்தவம் வேரூன்ற பணியாற்றினார்.
தரங்கம்பாடியில் சமயப்பணி
தரங்கம்பாடியில் சுவார்ட்ஸ் 11 ஆண்டுகள் சேவை செய்தார். அப்போது அவர் தமிழ், போர்ச்சுகீசிய மொழி, ஆங்கிலம் கற்றதோடு உருது, பாரசீக மொழிகளிலும் புலமை பெற்றார். இந்திய மன்னர்கள், கிழக்கிந்திய கம்பெனி சிவில், ராணுவ அதிகாரிகளையும் தனது செயல்பாடுகளால் ஈர்த்தவர்.
1762ஆம் ஆண்டு சுவார்ட்ஸ் திருச்சிராப்பள்ளி சென்றார். ஆற்காட்டு நவாபின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சி மலைக்கோட்டையின் நடுவில் 1766ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் நவாபுடன் அவருக்கிருந்த செல்வாக்கைக் குறிக்கிறது.
கம்பெனி அரசின் அரசியல் தூதுவராக
பட மூலாதாரம், Getty Images
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த கம்பெனி அரசு ஹைதர் அலி, திப்புசுல்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த சுவார்ட்ஸ்-ஐ பயன்படுத்தியது. தஞ்சாவூரில் நான்கு பள்ளிக்கூடங்களைத் தொடங்குவதற்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனையை தஞ்சாவூரிலிருந்த அரசின் பிரதிநிதி ஜான் சுல்லிவன் ஏற்ற பின்னரே ஹைதருடனான சுவார்ட்ஸ் சந்திப்பு நடந்தது (1769). ஹைதர் அலி நாட்டில் மூன்று மாதம் முகாமிட்டு எவ்விதத் தங்கு தடையுமின்றி கடவுளுக்கு சேவை செய்ததாகவும், தனது கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி ஹைதர் அலி பதில் அளித்ததாகவும் சுவார்ட்ஸ் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
‘இறுதியில் விடை பெறும்போது ஹைதர் அலி எனது பயணச் செலவுக்கென்று ஒரு பணமுடிப்புக் கொடுத்தார். நான் ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக தூது வந்ததால் அப்பணமுடிப்பை கம்பெனி அதிகாரிகளிடம் கொடுத்தேன். அவர்கள் வேண்டாம், அதை திருப்பிக் கொடுத்துவிடு என்று சொன்னார்கள். இத்தொகை இருந்தால் தஞ்சாவூரில் ஒரு இலவசப்பள்ளி நிறுவலாமே எனக் கருதி அதற்கு சுல்தானின் அனுமதி பெற்றேன்’ என்று சுவார்ட்ஸ் நினைவு கூறுகிறார்.
தஞ்சாவூரில் அன்று நிலவிய அரசியல்- பொருளாதார நிலை
மராட்டிய வம்சாவளியைச் சேர்ந்த தஞ்சாவூர் மன்னர் ஆங்கிலேயர்களின் ஆதரவாளராக இருந்தபோதும் கம்பெனி ராணுவம் 1773ஆம் ஆண்டு நவாபுடன் கூட்டு சேர்ந்து முற்றுகையிட்டு தஞ்சாவூரைக் கைப்பற்றியது. முற்றுகையின்போது மன்னரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 400,000 பவுண்ட் செலுத்தி தனது அரசுரிமையை மீட்டாலும், நிலவரி நிர்வாகம் நவாபிடம் ஒப்படைக்கப்பட்டது.
நவாப் மனசாட்சியற்ற ஒரு வட்டிக் கடைக் காரருக்கு (பால் பென்ஃபீல்ட்) தான் வாங்கியிருந்த கடனுக்காக செழிப்புமிக்க அப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றார். கடுமையான வரிவிதிப்பால் தஞ்சாவூர் பத்து ஆண்டுகளில் முற்றிலும் சீரழிந்தது. மக்கள் பெரும் வறுமையில் வாடினர்.
சுவார்ட்ஸ்-தஞ்சாவூர் மன்னர் சந்திப்பு
திருச்சியில் இருந்தாலும் மக்கள்தொகை அதிகமிருந்த தஞ்சாவூரில் பணியாற்ற சுவார்ட்ஸ் மனம் விரும்பியது. இந்நேரத்தில் (1769) ஏற்கெனவே லுத்தரன் திருச் சபையின் பணிகளைக் கேட்டுத் தெரிந்திருந்த, கிறிஸ்தவரிடம் எந்தவொரு வஞ்சகமும் இருக்காது என நம்பிய தஞ்சாவூர் மன்னர் துள்ஜாஹி (1763-1773 & 1776-1787) சுவார்ட்ஸ்-ஐ சந்திக்க ஒப்புக்கொண்டார். பிரிட்டிஷ் பேரரசரின் எழுபத்தினான்காம் படையின் தளபதி பெங் (ஜெர்மானியர்) அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். மன்னர் தொங்கிய ஊஞ்சலில் அமர்ந்து உரையாடுவதற்கு ஏற்றவாறு 12 அடி தொலைவில் சுவார்ட்ஸ் அமர்வதற்கு நாற்காலி போடப்பட்டிருந்தது. ‘இவர் ஒரு பாதிரியார்’ என்று சுவார்ட்ஸ் மன்னருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். சுவார்ட்ஸ் தன் பேச்சுத் திறமையால் மன்னரை எளிதாக கவர்ந்தார்.
சுவார்ட்ஸ் முயற்சியால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருந்தவர்களை, ‘இவர்கள் என் மக்கள்’ என்று கூறிக்கொண்டே அவர்களிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்ற துள்ஜாஹி, லுத்தரன் திருச்சபைக்கு மானியம் வழங்க உறுதி அளித்தார். அதன்படி வழங்கப்பட்ட வருடாந்திர மானியம் நாற்பது ஆண்டு காலம் தொடர்ந்தது. பின்னர் மற்றொரு தருணத்தில் மன்னரின் வேண்டுகோளின் படி ஒரு தம்பதியினருக்கு அரசவையில் தமிழில் பாட்டுப்பாடி திருமணத்தை சுவார்ட்ஸ் நடத்தி வைத்தார்.
1774ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பை சென்னையில் சந்தித்து தஞ்சாவூரில் தேவாலயம் கட்ட இடம் கேட்டு அது மறுக்கப்பட்டது. காரணம்: சுவார்ட்ஸ் கிறிஸ்தவப் பணிகளை செய்திட ரோமன் கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. பின்னர் சுவார்ட்ஸ் பெயரில் மன்னர் துள்ஜாஹியால் தேவாலயம் அங்கு கட்டப்பட்டது (1777).
பட மூலாதாரம், AMERICAN TRACT SOCIETY
திருநெல்வேலியில் சமயப்பணி
கம்பெனி ராணுவ அதிகாரிகளின் மீது அவர் செலுத்திய செல்வாக்கால் பாளையங்கோட்டையில் மராத்திய பிராமணப்பெண் கோகிலாவின் மதமாற்றம் சாத்தியமாயிற்று. கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, கிளாரிந்தா எனப் பெயர் சூட்டப்பட்ட அந்தப் பெண்மணி முயற்சியால் அப்பகுதியில் கிறிஸ்தவம் பரவியதோடு பாளையங்கோட்டையில் ஒரு தேவாலயமும் அமைந்தது.
கிளாரிந்தாவின் அர்ப்பணிப்பு
சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்த குடும்பத்திலிருந்து வந்த கோகிலா வயதான ஒரு திவானுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு, புகுந்த வீட்டில் கணவராலும் அவரது குடும்பத்தாராலும் கொடுமைப்படுத்தப்பட்டவர். கணவர் இறந்து உடன்கட்டைஏற இருந்தவரை தடுத்து மீட்ட லிட்டில்டன் என்ற ஆங்கிலேய அதிகாரி, அவர் மீது காதல் வசப்பட்டார். ஆனால் ஏற்கெனவே அவருக்கு திருமணமாகி மனைவி இங்கிலாந்தில் இருந்தார். எனவே, சட்டப்படி இரண்டாவது முறை திருமணம் செய்ய முடியவில்லை.
இதை சுவார்ட்ஸ் அறிந்திருந்ததால் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் செய்து வைக்க பாளையங்கோட்டை வர மறுத்தார். இருப்பினும், அவரது சமயப் பணியையும், கொடைத் தன்மையையும் கேள்விப்பட்டு, லிட்டிங்டன் இறந்தபிறகு அவரை முறையாக கிறிஸ்தவராக்க ஒப்புக்கொண்டு சுவார்ட்ஸ் 1778ஆம் ஆண்டு பாளையங்கோட்டைக்குச் சென்று அவருக்கு சுவார்ட்ஸ் ஞானஸ்நானம் செய்து வைத்தார். கிளாரிந்தா, லிட்டிங்டன் சமாதிகள் அடுத்தடுத்து பாளையங்கோட்டையில் இன்று கிளாரிந்தா பெயரிலிருக்கும் தேவாலய வளாகத்தில் உள்ளது.
திருநெல்வேலி முக்கிய புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மையமாதல்
1780இல் பாளையங்கோட்டையில் 40 பேர் கொண்ட திருச்சபை இருந்தது. அப்போது அங்கு ஆற்காடு நவாபுக்கு உட்பட்ட ஆங்கிலேயர் படை ஒன்று இருந்ததாக சுவார்ட்ஸ் தனது பயணக்குறிப்பில் எழுதுகிறார். தஞ்சாவூர் திரும்பிய சுவார்ட்ஸ் சபையின் நலனுக்காக தன்னால் உருவாக்கப்பட்ட சத்தியநாதனை தஞ்சாவூரிலிருந்து பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
சத்திய நாதன் மூலமே நாடார்களின் கிறிஸ்தவ இயக்கம் தென் தமிழகத்தில் தொடங்கியது. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு கல்வி கற்பித்திட கல்வி நிறுவனங்களும் உண்டாயின. 1785ஆம் ஆண்டில் கிளாரிந்தா முயற்சியால் கட்டப்பட்ட தேவாலயத்தை வழிபாட்டுக்கு அர்ப்பணிக்க சுவார்ட்ஸ் பாளையங்கோட்டைக்கு இரண்டாம் முறையாக சென்றார்.
சுவார்ட்ஸ் அனுப்பி வைத்த ஐரோப்பிய பாதிரியார் ஜெய்னிக்கே
நாற்பதிலிருந்து நானூற்று மூன்றாக உயர்ந்திருந்த கிறிஸ்தவர் எண்ணிக்கையால் பாளையங்கோட்டைக்கு ஒரு ஐரோப்பிய பாதிரியாரை அனுப்ப முடிவு செய்த சுவார்ட்ஸ் தனது நாட்டைச் சேர்ந்த ஜெய்னிக்கேவை அனுப்பினார் (1791). ஜெய்னிக்கே முயற்சியால், விவிலியத்தை பரப்புவதற்கான சபையினர் (Society for Promotion of Christian Knowledge) பாளையங்கோட்டை சென்று பணியாற்றினர். அர்ப்பணிப்பு, ஆர்வம், புத்திசாலித்தனம் அனைத்தும் கொண்ட ஜெய்னிக்கே மாவட்ட ஆட்சியருடன் குற்றாலம், களக்காடு போன்ற வனப்பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரு வகை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஜெய்னிக்கே அங்கிருந்து கிளம்பி கடைசி நாட்களை ராமநாதபுரத்தில் கழித்தார்.
ஜெய்னிக்கே திருநெல்வேலியில் இருந்தபோது சத்தியநாதனுக்கு உதவ சாத்தான்குளத்துக்கு அருகிலிருந்த ஒரு சிறிய கிராமத்தில் முதலில் மதம் மாறிய, சுவார்ட்ஸ் அனுப்பிவைத்த சுந்தரம் என்ற டேவிட் முயற்சியால் அவர் சார்ந்த நாடார் சமுதாயத்தினர் அதிக எண்ணிக்கையில் மதம் மாறியதால் நாடார்கள் உயர் சாதியினரால் தொடர்ந்து தாக்கப்பட்டனர். அந்நிலையைச் சமாளிக்க, அவர்கள் தனியாக வாழ்வதற்காக நிலம் ஜெய்னிக்கே பெயரில் வாங்கப்பட்டு அவர்களுக்கு வீடு கட்டி குடியேறச் செய்தனர். அவ்வூர் முதலூர் என பெயரிடப் பெற்றது (1799).
இவை அனைத்தையும் ராமநாதபுரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்த ஜெய்னிக்கே 1800இல் காலமானார்.
பட மூலாதாரம், South Asia Books
பஞ்ச நிவாரண நடவடிக்கைகள்
1781முதல் 1783 வரை தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களின் போது மக்கள் அனுபவித்த துயரங்களை சுவார்ட்ஸ் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. அந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமானவர்கள் இறந்து போனதாகவும், முழு உடல் பலத்துடன், சோர்வின்றி இருக்கும் ஒரு மனிதரைப் பார்ப்பது அரிதாய் இருந்ததாகவும், பெரும்பாலானோர் நடமாடும் எலும்புக்கூடுகளாக இருந்ததாகவும் சுவார்ட்ஸ் எழுதுகிறார். ‘போர், பஞ்சம், தொற்றுநோய், பல்லாயிரக்கணக்கான மக்களை சாகடித்துள்ளது. நாம் எவ்விதக் குறையும் இல்லாமல் தேவையானவற்றைப் பெற்றுக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்கிறோம்’ என வருந்தி அரசுக்கு 1784இல் கடிதம் எழுதியதோடு, தன்னைச் சுற்றிலுமிருந்த மக்களுக்கான காப்பகம் ஒன்று செயல்பட ஏற்பாடு செய்தார்.
ஒரு காலத்தில் அதிக மக்கட்தொகையுடன் வளமாக இருந்த நாகப்பட்டினம் ஏழ்மையில் மூழ்கிய போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய ரெவரென்ட் ஜெருக்கேவை சுவார்ட்ஸ் அங்கு அனுப்பி வைத்தார். அவர் தந்தை போல அங்குள்ள மக்களை கவனித்துக் கொண்டதாகவும் அங்கிருந்து அவர் கடலூருக்கு மாற்றப்பட்டபோது அனைவரும் வேதனை அடைந்ததாகவும் சமகால ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இளவரசர் சரபோஜியின் பாதுகாவலர்
முதுமையால் பலவீனமாகியிருத்த மன்னர் தனக்குப்பின் ஆண் வாரிசு இல்லாததால் 9 வயது சிறுவனை தத்தெடுத்திருந்தார். 1788ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று சுவார்ட்ஸ்-ஐ அரண்மனைக்கு வருமாறு அழைத்தார். உடனே அங்கு சென்ற சுவார்ட்ஸிடம் 9 வயது சிறுவனைக் காட்டி,’ இவன் என்னடைய மகன் அல்ல; உன்னுடைய மகன், இவனைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள உன்னுடைய கைகளில் ஒப்படைக்கிறேன்’ என்றார்.
அதிர்ந்து போன சுவார்ட்ஸ், ‘உங்களுடைய விருப்பத்துக்குக் கட்டுப்படுகிறேன். ஆனால் என் சக்திக்கு அப்பாற்பட்டது. நாட்டில் குழப்பம் ஏற்பட்டால், குழந்தைக்கு என்னால் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா? ஏற்கெனவே உங்கள் அவையில் பல கோஷ்டிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியாததா?… வேறு ஏதாவது மாற்று யோசனையில் ஈடுபடலாம்’ என்றார்.
‘என்ன அது’ என்று வினவிய மன்னரிடம், ‘உங்களுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவரிடம் ஒப்படைத்து வளர்க்கச் சொல்லுங்கள்’ என்ற சுவார்ட்ஸ் ஆலோசனையை ஏற்று விடைபெற்ற மன்னர் மாலையில் குழந்தையின் தாயிடம் சம்மதம் பெற்று தனது சகோதரரை அழைத்து முடிவை தெரிவித்து, இளவரசர் இனி உன்னைத்தான் தந்தை என்று அழைப்பார் என்றார். இம்முடிவுக்கு கம்பெனி நிர்வாகம் அனுமதித்தது மட்டுமின்றி, சுவார்ட்ஸ் நிபந்தனையின் படி ஆண்டொன்றுக்கு 500 பக்கோடாக்கள் வழங்கவும் ஒப்புக்கொண்டது.
ஆசிரியராக சுவார்ட்ஸ்
தஞ்சாவூரில் சுவார்ட்ஸ் இடம் கல்வி பயின்ற கிறிஸ்தவ தொண்டர் ஒருவரின் மகனான வேதநாயகம்[சாஸ்திரியார்] பாடல் இயற்றுதலில் வல்லுநர். தஞ்சாவூர் அரசவைக் கவிஞராக இருந்த அவரது முக்கிய படைப்புகளில் பெத்லகேம் குறவஞ்சி, ஜெபமாலை குறிப்பிடத்தக்கதாகும். இவரும் சரபோஜியும் சுவார்ட்ஸிடம் குருகுல முறையில் கல்வி பயின்றவர்கள்.
சரபோஜி ராஜாவாக அங்கீகரிக்கப்படுதல்
1787இல் மன்னர் இறந்தபிறகு சுவார்ட்ஸ் சரபோஜியின் பாதுகாவலராக இருந்தார். எதிர்பார்த்தது போல, சரபோஜி அரியணை ஏற துள்ஜாஹியின் மற்றொரு சகோதரனான அமர் சிங்கிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதை தன்னுடைய சாமர்த்தியத்தாலும் கம்பெனி அரசிடம் தனக்கிருந்த நட்புறவினாலும் சரபோஜியே தஞ்சாவூரின் இரண்டாம் சரபோஜி பான்ஸ்லே ராஜாவாக அங்கீகரிக்கப்படச் செய்தார் சுவார்ட்ஸ்.
மதம் மாறிய சீர் மரபினர்
சுவார்ட்ஸ் சாதிய முறைக்கு எதிரானவரானாலும் அதன் வெளிப்பாட்டை நாசுக்காகக் கையாண்டார். பறையர் சமூகத்தினர் தான் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவத்தைத் தழுவுவதாகவும், அதனால் நமக்கு நற்பெயர் ஏதும் வரப்போவதில்லை என்ற மாகாண ஆளுநர் சர் ஆர்ச்சிபால்ட் கேம்பெல்லின் தனிச்செயலர் மாண்ட் கோமரியின் கருத்தை மறுத்த சுவார்ட்ஸ் தனது சபையில் மூன்றில் இரு பகுதியினர் “சூத்திரர் அல்லது பிராமணரல்லாத சாதியினர்” என்று பதில் கூறுகிறார்.
சமூக சூழலால் வாழ்வாதாரத்திற்காக திருட்டுத் தொழிலுக்குத் தள்ளப்பட்ட சுமார் 7,000 கள்ளர் வகுப்பினர் சுவார்ட்ஸ் அறிவுரைக்கிணங்க விவசாயத்திற்குத் திரும்பியதாகவும், அதைப்பார்த்து எஞ்சியவர்களும் திருட்டுத் தொழிலைகைவிட்டுவிட்டு இனி அத்தொழிலைத் தொடரமாட் டோம் என எழுதிக் கொடுத்திருப்பதாகவும், அதில் பலர் கிறிஸ்தவர்களாக மாறியிருப்பதாகவும் சுவார்ட்ஸ் தனது டைரியில் குறிப்பிடுகிறார்.
தென் தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர்
சுவார்ட்ஸ் பள்ளிக்கூடங்கள் நிறுவுவதில் சிறப்புக்கவனம் செலுத்தினார். சுவார்ட்ஸ் பாளையங்கோட்டைக்குச்சென்று திரும்பிய நாளிலிருந்து கிறிஸ்தவ சபையும் கல்வி கற்பிக்க பள்ளிகளும் ஒன்றிணைந்து வளர்ச்சியடைந்தன. 1784ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி அரசின் பிரதிநிதியாக இருந்த ஜான் சுல்லிவனுடன் ராமநாதபுரம் சென்று ஜமீன்தாரிடம் அனுமதி பெற்று பள்ளிக்கூடம் ஒன்றை அங்கு சுவார்ட்ஸ் நிறுவினார். தஞ்சாவூரில் சுல்லிவன் உதவியுடன் ஒரு ஆங்கிலப்பள்ளி 1792ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்தகைய ஆங்கிலப் பள்ளிக்கூடங்களைத் தொடங்குவதற்கான அவரது வேண்டுதலை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த அரசு ஏற்றது. தஞ்சாவூர் மன்னர் முயற்சியின் மூலம் இதர சில பாளையக்காரர்களை தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து நிதி பெற்று சிவகங்கை, கும்பகோணம் போன்ற இடங்களிலும் பள்ளிக்கூடங்கள் 1792ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
சுவார்ட்ஸ் ஏற்படுத்திய கல்விப்புரட்சியால் சென்னை மாகாணத்தில் இதர தனியார் பள்ளிகளை விட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் ஐந்து மடங்கு அதிகம் நிதி உதவி பெற்றதாக 1859ஆம் ஆண்டு புள்ளிவிவரம் ஒ ன்று தெரிவித்தது. இந்தியாவில் 1857ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சி வெடித்த போது கிறிஸ்தவ பாதிரிமார்கள் செய்த நற்பணி காரணமாகவே சென்னை மாகாணத்தில் அமைதி நிலவியதாக இங்கிலாந்தில் பரவலாக நம்பப்பட்டது.
72வது வயதில் மரணம்
1797இல் தனது வயது முதிர்ந்த நிலையிலும் கூட ஒவ்வொரு ஞாயிறும் ஆங்கிலத்திலும், தமிழிலும், புதன் கிழமை தோறும் போர்த்து கீசிய மொழியிலும் நற்செய்தி உரை ஆற்றுவதுமாயிருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாகி மறு ஆண்டு தனது 72ஆவது வயதில் (1798 பிப்ரவரி 13) சுவார்ட்ஸ் காலமானார்.
தஞ்சாவூர் தேவாலயத்தில் நினைவுச்சின்னம்
சுவார்ட்ஸ் இறந்த செய்தி கேட்ட மன்னர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள விரும்பியதால் உடலை அடக்கம் செய்வது சிறிது தாமதம் ஆனது. சரபோஜி மன்னர் சுவார்ட்ஸ் பூத உடல் மீது பொன்னாடை போர்த்திக் கண்ணீர் விட்டார்.
சுவார்ட்ஸ் கட்டிய தஞ்சாவூர் தேவாலயத்தில் அவர் எங்கு நின்று பிரசாரம் செய்தாரோ அம்மேடைக்கு அருகே ஒரு நினைவுச் சின்னம் நிறுவ வேண்டும் என்ற மன்னரின் விருப்பத்திற்கு இணங்க, கம்பெனி அரசு சுவார்ட்ஸ் இறக்கும் தருவாயில் தனது ஆதரவாளர்கள் சூழ படுத்திருக்கும் காட்சியைச் சித்தரிக்கும் வெள்ளைப் பளிங்கிலான சிலையை அமைத்தது.
கா.அ. மணிக்குமார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்று பேராசிரியர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு