படக்குறிப்பு, இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின.
இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் இருந்து இத்தகைய செய்திகள் வந்தன. இது இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் விவாதப்பொருளானது.
பல வல்லுநர்களும் மனித உரிமை அமைப்புகளும் இத்தகைய சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தனர்.
இந்தியாவில் ‘கிறிஸ்தவ சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக்’ கருத்தில் கொண்டு, கிறிஸ்தவ சமூகத்திற்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பிரதமர் மோதி டிசம்பர் 25ஆம் தேதி காலை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அன்றைய தினம் காலையில் அவர் டெல்லியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குச் சென்றிருந்தார்.
இந்தத் தாக்குதல் செய்திகளை வெளியிட்ட பல சர்வதேச ஊடகங்கள் இந்த விவாதத்தை முக்கியப்படுத்தின.
சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகள்
‘அரபு டைம்ஸ் குவைத்’ பத்திரிகை, கிறிஸ்துமஸ் தினத்தன்று டெல்லியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியை வெளியிட்டது. அந்தக் காணொளியில், சிவப்பு தொப்பிகளை அணிந்திருந்த சில ஆண்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடிய பெண்களைத் தங்கள் தொப்பிகளைக் கழற்றிவிட்டு வீட்டிற்குச் செல்லுமாறு கூறுவது தெரிகிறது. இந்தக் காணொளியின் நம்பகத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
‘அரபு டைம்ஸ் குவைத்’ செய்தியில், ‘கிறிஸ்துமஸ் என்பது இந்தியாவின் கிறிஸ்தவ சமூகத்தால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. ஆனால் இந்த முறை கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்களுக்கு ‘வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சி’யே காரணம் என்று வல்லுநர்கள் குற்றம் சாட்டுவதாக அரபு டைம்ஸ் கூறுகிறது.
அதன் செய்தியில் ஒடிசாவில் சாலையோரத்தில் சாண்டா கிளாஸ் தொப்பிகளை விற்றவர்களை சிலர் மிரட்டியதாக வெளியான வீடியோ குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்ததாக வெளியான ஒரு காணொளி குறித்தும் அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆளும் பாஜக தலைவர் ஒருவர் காவல்துறையினர் முன்னிலையில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மிரட்டுவது அந்த வீடியோவில் காணப்பட்டதாக அந்த செய்தி கூறுகிறது.
பட மூலாதாரம், Devendra Shukla
படக்குறிப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ராய்ப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் புகுந்து சிலர் தாக்குதல் நடத்தினர்.
இந்தியாவில் இந்து வலதுசாரி குழுக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்தது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘தி இன்டிபென்டன்ட்’, இதுகுறித்து கிறிஸ்தவ மற்றும் மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கையை மேற்கோள் காட்டி ஒரு செய்தியை தி இன்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், இத்தகைய தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன என்றும், கிறிஸ்தவ சமூகத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து ‘கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘தி டெலிகிராஃப்’பும், இந்தியாவில் பல இடங்களில் தேவாலயங்களில் நடந்த கொண்டாட்டங்களை இந்து அமைப்புகள் தடுக்க முயன்றதாக செய்தி வெளியிட்டுள்ளது.
‘பயத்தின் நிழலில் இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்’ என்ற தலைப்பில் துருக்கியின் ‘டிஆர்டி வேர்ல்ட்’ பத்திரிகைச செய்தி வெளியிட்டது.
இந்தியாவில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிறிஸ்தவ சமூகத்தின் மீது தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் இந்து அமைப்புகள் ஈடுபட்டதாகவும் டிஆர்டி வேர்ல்ட் பத்திரிகை கூறியுள்ளது.
கிறிஸ்துமஸ் அன்று என்ன நடந்தது?
பட மூலாதாரம், Vishal Bhatnagar/NurPhoto via Getty Images
இந்தியாவில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், பல இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இந்து அமைப்புகள் கிறிஸ்துமஸுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது, பல இடங்களில் வன்முறையிலும் ஈடுபட்டனர் என்கிறார் பிபிசி அசோசியேட் பத்திரிகையாளரான அலோக் புத்துல்.
புதன்கிழமை ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ வணிக வளாகத்தில் (Magneto Mall) பணியாற்றும் ஊழியர்களிடம் அவர்களின் சாதி மற்றும் மதம் குறித்துக் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அங்கு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேக்னெட்டோ வணிக வளாகத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் ஆபா குப்தா கூறுகையில், “பெரிய எண்ணிக்கையிலான நபர்கள் கைகளில் ஹாக்கி மட்டைகளுடன் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் ஊழியர்களின் அடையாள அட்டைகளை பார்த்து, அவர்கள் இந்துகளா அல்லது கிறிஸ்தவர்களா என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.” என்றார்.
கிறிஸ்துமசுக்காக அந்த வணிக வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஒரு கும்பல் அதை முழுவதுமாகச் சேதப்படுத்தியது. ஆபா குப்தாவின் கூற்றுப்படி, இந்தச் சேதத்தின் மதிப்பு குறைந்தது 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
இந்தியாவில் மேலும் பல இடங்களிலும் கடைக்காரர்கள் மீது தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாகச் செய்திகள் வந்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் சில பகுதிகளில் கிறிஸ்தவப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகளின் போது வன்முறை நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோதி கிறிஸ்துமஸ் வாழ்த்து
பட மூலாதாரம், @narendramodi/X
பிரதமர் நரேந்திர மோதி இந்திய மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். கிறிஸ்துமஸ் தினத்தன்று டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு வியாழக்கிழமை காலை அவர் சென்றார்.
இது தொடர்பான பல படங்களை அவர் தனது சமூக ஊடகப் பதிவுகளில் பகிர்ந்துள்ளார்.
“டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின காலை வழிபாட்டில் கலந்துகொண்டேன். அந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணையின் நித்திய செய்தியைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டுவரட்டும்” என்று அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியுள்ளார்.