இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய போட்டியில் கென்ட் – ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற கென்ட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கென்ட் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பில்லிங்ஸ் 43 ரன்கள் எடுத்தார். ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் தரப்பில் வுட், ஜேம்ஸ், ஹோவெல், லியாம் டாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து ஆடிய ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணி 19.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் ஹாம்ப்ஷயர் ஹாக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளார் கிறிஸ் வூட் செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் இன்னிங்சின் கடைசி ஓவரை கிறிஸ் வூட் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை எவிசன் எதிர் கொண்டார். அந்த பந்தை வேகமாக விளாசினார். ஆனால் அந்த பந்து எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் பார்கின்சன் மீது தாக்கியது. இதனால் அவர் மைதானத்தின் பாதியில் சுருண்டு விழுந்தார். அவர் மீது பட்ட பந்து பவுலர் வூட் பக்கம் சென்றது. அதனை எடுத்துக் கொண்ட அவர் ஸ்டெம்பை அடித்து அவுட் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஸ்டெம்பை அடிக்காமல் கடைசி பந்தை வீசுவதற்காக சென்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கைதட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.