பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஃபேல் அபுசைபே
- பதவி, பிபிசி முண்டோ
-
வட அமெரிக்காவின் பாலைவனங்களில் பளபளக்கும், செதில்களைக் கொண்ட, மெதுவாக நகரும் அந்தச் சிறிய உயிரினம்தான் மருந்துகள் துறையில் புரட்சியை ஏற்படுத்த மறைமுகமாக உதவியுள்ளது.
அதன் அறிவியல் பெயர் ஹெலோடெர்மா சஸ்பெக்டம் (Heloderma suspectum), ஆனால், பெரும்பாலானோர் அதை கிலா மான்ஸ்டர் என்கின்றனர்.
அதன் விஷம், பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 2024 நவம்பரில் கொலோரடோ மாகாணத்தில் இந்த கிலா அரக்கப் பல்லியின் குட்டி ஒன்று கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சிறிய, விகாரமான உயிரினம்தான் வருங்காலத்தில் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றப் போகும் மருத்துவக் கண்டுபிடிப்பின் பின்னால் உள்ளது.
அதன் விஷத்தில், ஜிஎல்பி-1 ஏற்பி (GLP-1 receptor) எனும் புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்துகளை உருவாக்க உதவக்கூடிய ஊக்குவிக்கும் நொதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புரதம், தற்போது ஓஸெம்பிக் (Ozempic), வெகோவி (Wegovy), மௌஞ்சரொ (Mounjaro) எனும் பெயரில் மருந்துகளாக விற்கப்படுகின்றன. இவை, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை உருவாக்குவதில் கிலா மான்ஸ்டர் முக்கிய உயிரினமாக உள்ளது. விலங்கின் நஞ்சை மக்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்துவது புதிதல்ல, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் முதல் ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கான மருந்துகளில் அவை முக்கியப் பங்கு வகித்துள்ளன.
ஆனால், இந்தப் பல்லி எந்த அளவுக்குச் சிறப்பானது? நம்பிக்கைக்குரிய மருந்துகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதன் நஞ்சை எப்படிப் பெறுவது?
பட மூலாதாரம், Getty Images
அரக்க பல்லியின் நஞ்சு
“தன்னை வேட்டையாட வருவதிலிருந்து காத்துக்கொள்வது மற்றும் தன்னுடைய இரையை முடக்குவது என குறிப்பாகச் செயல்படும் வகையில் இத்தகைய நஞ்சுக்கள் பரிணமிக்கின்றன,” என உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆராய்ந்து, அதன் மாற்றுப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ந்து வரும் பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
வட அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஷப் பல்லி இனங்களில் ஒன்றான இந்த கிலா அரக்க பல்லியைப் பொறுத்தவரையில் அதனால், வேகமாக நகர முடியாது என்பதால் தன் இரை வேகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் விஷம் பரிணமித்துள்ளது.
இரையின் மீது ஏற்படுத்தும் இந்த விளைவைத் தவிர்த்து, அதன் விஷத்தில் உள்ள ஹார்மோன் ஒன்று, இந்தப் பல்லி வெறும் ஆறு வேளை உணவின் மூலம் ஓர் ஆண்டு வரை வாழும் வகையில் அதன் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைப்பதில் உதவுவதாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் எக்ஸென்டின் – 4 (exendin-4) எனப் பெயரிட்டுள்ள இந்த ஹார்மோன், மனிதர்களில் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உற்பத்தியாகும் ஜிஎல்பி 1-ஐ ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
எனினும், எக்ஸென்டின் – 4 ஜிஎல்பி 1-ஐ விட முக்கியமான ஒரு விஷயத்தில் வித்தியாசமானதாக உள்ளது. மனித உடலில் உள்ள ஜிஎல்பி 1 இயற்கையாகவே கழிவாக வெளியேறும் நிலையில், எக்ஸென்டின் – 4 உடலில் நீண்ட காலம் தங்குகிறது, இதனால், குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருப்பதில் இது நீண்ட கால விளைவைக் கொண்டிருக்கிறது.
இதுதான் ஜிஎல்பி-1 ஏற்பியாகச் செயல்படும் மருந்துகளை உருவாக்குவதன் அடிப்படையை வழங்குகிறது.
நஞ்சு மருந்தாக மாறுவது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
எக்ஸெண்டின்-4 முதன்முதலில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பையெட்டா (எக்ஸெனாட்டைட்) (Byetta -exenatide) எனும் மருந்துக்காகத்தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டது.
இந்த மருந்து குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் உதவியது. மேலும், சில மாற்றங்களுடன் செமக்ளூடைடு(semaglutide – Ozempic, Wegovy) போன்ற மிகவும் வலுவான மற்றும் நீடித்த சேர்மங்களுக்கு அடித்தளத்தை அமைத்தது.
“ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், அவற்றை ரத்த ஓட்டத்தில் நீடித்த விளைவுடன் மாற்றுவதால், அதன் சிகிச்சைத் திறனை சீராக நிர்வகிப்பது அல்லது அதிகப்படுத்துவது அற்புதமான விஷயம்,” என பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
செமக்ளூடைடை பொறுத்தவரை கொழுப்பு அமில சங்கிலியை ரத்தத்தில் ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகளை உடலில் கடத்துவதற்குப் பயன்படுத்தும் ஆல்புமின் எனும் புரதத்துடன் இணைப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தில் மருந்தின் விளைவை நீடித்ததாக ஆக்குவதாக அவர் விளக்கினார்.
எனினும், ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கு இத்தகைய நஞ்சு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதற்கு செமிக்ளூடைடு மட்டும் உதாரணம் அல்ல என்கிறார் பேராசிரியர் கினி.
மற்ற உயிரினங்கள்
பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் கினி சுட்டிக்காட்டுவது போன்று, கடந்த பல்லாண்டுக் காலமாக பல்வேறு விதமான உயிரினங்களின் நஞ்சை உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து சேர்மங்கள், சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
“கடந்த 1970களின் முற்பகுதிக்கு முன்பே பிரேசில் நாட்டு பாம்பு இனமான போத்ரோப்ஸ் ஜராராகா (Bothrops jararaca) எனும் இனத்தின் நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெப்டைட் எனும் அமினோ அமிலங்கள், ஏசிஇ (angiotensin-converting enzyme) எனப்படும் மருந்துகள் தயாரிக்கப்பட வழிவகுத்தது,” எனக் கூறும் அவர், அந்த மருந்துகள் தற்போது ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு ஆகியவற்றில் அத்தியாவசியமான மருந்துகளாக உள்ளன என்றார்.
காலப்போக்கில் கேப்டோப்ரில் (captopril) மற்றும் எனலாப்ரல் (enalapril) போன்ற மருந்துகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
கடல் நத்தைகளின் நஞ்சு, நாள்பட்ட வலிக்கு சிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும், இயற்கையான ரத்த உறைவு எதிர்ப்பு மருந்தாக விளங்கும் அட்டைப் பூச்சிகள், ரத்தக் குழாய் அடைப்பு ஆபத்தைக் குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.
“தன் இரை அல்லது வேட்டையாட வரும் உயிரினங்கள் மீது மிகவும் குறிப்பான விளைவுகளை இந்த நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு, நாம் பிரித்தெடுத்தால் அந்த நஞ்சை சிகிச்சை மருந்தாக மாற்ற முடியும்,” என கினி விளக்குகிறார்.
பாம்பின் நஞ்சு, கொசுவின் எச்சில் ஆகியவற்றிலிருந்து மாரடைப்புக்குப் பிறகான இதய செயலிழப்பைத் தடுப்பது அல்லது சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான சிறுநீர் உற்பத்தியாதல் (diuresis) ஆகிய பிரச்னைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் நோக்கத்துடன் அவற்றை ஆய்வு செய்து வருகிறார் கினி.
அவரது அனுபவத்தில், இந்த நச்சுகளில் பலவற்றில், ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் சிறிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவை மிகவும் குறிப்பிட்ட உடலியல் விளைவுகளைத் தூண்டுகின்றன, மேலும் புதிய சிகிச்சைகளை உருவாக்க அவற்றைத் தனிமைப்படுத்தி மாற்றியமைக்க வேண்டும்.
நஞ்சுகளின் எதிர்காலம்
பட மூலாதாரம், Getty Images
மூலக்கூறு உயிரியல், மருந்தியல் மற்றும் நஞ்சுகள் குறித்த விரிவான ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கிலா அரக்க பல்லி மீதான சோதனைகள் வழங்குகின்றன.
மிகவும் மெதுவாக நகரும், பெரிதாக ஆபத்து இல்லாத, சில வேளை உணவுகளில் மட்டும் உயிர் பிழைக்கும், நிலையான நஞ்சைக் கொண்டுள்ள இந்த உயிரினம், புரட்சிகரமான மருந்துகளைத் தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கும் என்கிறார் கினி.
“முன்பைவிட மிக வேகமாக இயங்குவதற்கு அனுமதிக்கும் புதிய சாதனங்கள் உள்ள யுகத்தில் நாம் வாழ்கிறோம். எனினும், இப்போதும் நிதி என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆய்வக கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக சந்தைப்படுத்துவதற்குப் பல ஆண்டுக்கால மனிதர்கள் மீதான சோதனைகள் மற்றும் பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன,” எனக் கூறுகிறார் அவர்.
ஆனால், இந்த முயற்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முடிவுகள் இருப்பதாக அவர் நம்புகிறார். குறிப்பாக, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்த முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக அவர் கூறுகிறார்.
இந்த ஆய்வில், “அடுத்த சில பத்தாண்டுகளில் இன்னும் புதிய ஆச்சர்யங்கள் ஏற்படும்” என்கிறார் கினி. மேலும், “இன்னும் பல விலங்குகளின் நஞ்சில் இருந்து அதிக திறன் வாய்ந்த மருந்து சேர்மங்களை நம்மால் கண்டுபிடிக்க இயலும் அல்லது, நோய்களைப் புதிய கோணத்தில் எதிர்க்கக்கூடிய செயற்கையான நஞ்சுகளை உருவாக்க முடியும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு