• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

கிளிநொச்சியில் வங்கி பணவைப்பு இயந்திரத்தில் நூதன முறையில் திருட்டு

Byadmin

Oct 2, 2025


வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கியொன்றுக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள பண வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடத் தெரியாத அந்தப் பெண், மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்காக அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார்.

பணத்தை வைப்பிலிடுவதற்காக அந்த இளைஞனிடம், தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும் ஆறாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார்.

அந்த இளைஞன், அப்பெண்ணுக்கு உதவி செய்வது போல் செயற்பட்டு, அவர் வழங்கிய கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்புச் செய்வது போல் பாசாங்கு காட்டி, தனது வங்கிக் கணக்கு இலக்கத்திறகு பணத்தை வைப்புச் செய்துள்ளார்.

பின், அருகில் இருந்த குப்பை கூடைக்குள் இருந்து பணம் வைப்புச் செய்த பற்றுச்சீட்டு ஒன்றை பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

வீடு திரும்பிய பெண், அந்தப் பற்றுச்சீட்டை மகனிடம் காட்டியபோதே, அது, மின்கட்டணத்துக்கான கணக்கில் வைப்பிலிட்டதற்குரிய பற்றுச்சீட்டு அல்ல என்பது  தெரியவந்துள்ளது.

பின்னர், அந்தப் பெண் குறித்த வங்கிக்குச் சென்று, இளைஞனின்  வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை கேட்டு, நடந்த சம்பவத்தை விபரித்துள்ளார். அதற்கு வங்கி நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு, முறைப்பாட்டு சீட்டைக் கொண்டுவந்தால் மாத்திரமே விபரங்களை வழங்க முடியும் எனக் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, முறைப்பாடு அளிப்பதற்காக அப்பெண் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், “ஆறாயிரம் ரூபாய்க்கெல்லாம் முறைப்பாடு எடுக்க முடியாது” என தெரிவித்துள்ளனர். இதனால் அப்பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

By admin