1
கிளிநொச்சி கம நல சேவை நிலையத்தினால் வயற்காணி உரிமையாளர் அல்லாதவர்களிடமிருந்து முறையற்ற விதத்தில் ஏக்கர் வரி அறவிடப்பட்டுள்ளதுடன் உரிய ஆவணங்கள் இல்லாது உரமானிய விடுவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினாலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை (13) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த விவசாய அமைச்சரிடம் விவசாயிகளால் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கமநல சேவை நிலையம், கண்டாவளை கமநல சேவை நிலையம், பரந்தன் கமநல சேவை நிலையம் ஆகியவற்றில் கீழான பயிர்ச்செய்கை காணிகள் பலவற்றில் முறைகேடுகள் காணி மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பாக ஏற்கனவே பல தடவைகள் பாதிக்கப்பட்டவர்களால் பல்வேறு தரப்பிடமிம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன .
இந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த குறித்த முறைகேடுகள் தொடர்பில் நேரடியாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அதாவது. கிளிநாச்சி கம நல சேவை நிலையத்தினால் வயற் காணி உரிமையாளர் அல்லாதவர்களிடமிருந்து காணி ஆவணங்கள் இல்லாமல் முறையற்ற விதத்தில் ஏக்கர் வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உரிய ஆவணங்கள் இல்லாது உரமானிய விடுவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மகிழங்காடு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள 28 ஏக்கர் காணிக்கு மூன்று தடவைகள் ஒரே நேரத்தில் அரச மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.