- எழுதியவர், கோபால் கடேஷியா
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
குஜராத்தின் துவாரகா நகருக்கு அருகே அமைந்துள்ளது பெட் துவாரகா என்ற தீவு. அந்த தீவுக்கு செல்வதற்கான பாதை அடைக்கப்பட்டது. புல்டோசர்களை வைத்து அங்குள்ள வீடுகள் இடிக்கப்பட்டது. வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினரின் கண்காணிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அங்கே அதிகப்படுத்தப்பட்டது.
துவாரகாவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவில் உள்ள குடியிருப்பு கட்டடங்களும், மத வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் இது குறித்து கூறும் போது, சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.
வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட தீவான பெட்-துவாரகா, குஜராத்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு இந்த பகுதியை அடைய படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. குஜராத் தலைநகரான காந்தி நகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீவு. மிக சமீபத்தில் குஜராத்தின் இதர பிராந்தியங்களோடு தீவை இணைக்க, சுதர்சன் சேது என்ற பாலம் கட்டப்பட்டது.
கடந்த ஜனவரி 11-ஆம் தேதி அன்று இந்த பாலம் மூடப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பதற்காக புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் நான்கு நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சூழலை பெரிதாக்காமல் இருப்பதற்காக சாலைகள் மூடப்பட்டன என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.
பாலப்பர் பகுதியில் உள்ள வீடுகள் நான்கு நாட்களில் இடித்துத் தள்ளப்பட்டது. ஜனவரி 16-ஆம் தேதிக்குள் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மீனவர்களின் வீடுகளும் அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களும் இதில் அடங்கும்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சாலை மீண்டும் ஜனவரி 15-ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. இருப்பினும் கூட பிம்சர் பகுதியில் இரண்டு நாட்களாக வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
“அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன,” என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஜனவரி 18, 2025-ல் கிட்டத்தட்ட 9 மத வழிப்பாட்டுத் தலங்கள், மூன்று வணிக வளாகங்கள் உட்பட 525 கட்டடங்கள் பெட்-துவாரகா, துவராகா மற்றும் ஒக்ஹா பகுதிகளில் இடிக்கப்பட்டன. ரூ. 73.55 கோடி மதிப்பு கொண்ட, 1,27,968 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
வீடுகளை இழந்த உரிமையாளர்கள் கூறுவது என்ன?
பெட் துவாரகாவில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள களத்திற்கு சென்றது பிபிசி குஜராத்தி. அங்கே மக்கள் இடிபாடுகளில் இருந்து தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்களில் இஸ்மாயில்பாய் ரென்க்டிவாலாவும் ஒருவர். அவருடைய மகன் இஸா, மகள் ஜரினா தற்போது செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இடிபாடுகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் அவர், “நாங்கள் படிக்கவில்லை. இந்த வீட்டை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டினேன். வீடு கட்ட நாம் நிலம் வாங்க வேண்டும் என்று கூட எனக்கு அப்போது தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் அதை வாங்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை,” என்று தெரிவிக்கிறார்.
“நான் இன்னும் அதிக காலம் உயிர் வாழமாட்டேன். என்னுடைய வீடும் பறிபோய்விட்டது. என்னுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது. நான் பலரிடம் உதவி கேட்டேன். ஆனால் அரசே என்னுடைய வீட்டை இடிக்கும் போது நான் எங்கே செல்வேன்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
சுதர்சன் சேது பாலம் கட்டப்படுவதற்கு முன்பு வயதான பக்தர்களை ஒரு கரையில் இருந்து படகு மூலம் அழைத்து வந்து கிருஷ்ணர் கோவிலில் விடும் பணியை செய்து வந்தார் இஸ்மாயில். அவருடைய மகன்கள் இருவரும் மீனவர்களாக உள்ளனர்.
இஸ்மாயில் மட்டுமின்றி பலரின் நிலைமையும் இதேதான்.
அஸிஜா பெஹன் அங்கரியா, அவருடைய இடிந்த வீட்டின் முன்பு இரண்டு புத்தகங்களோடு நின்று கொண்டிருக்கிறார். அவருடைய இரண்டு அறைகளை கொண்ட ஒரு வீடும், ஒரு குடிசையும் அரசால் இடிக்கப்பட்டுள்ளது.
அஸிஜாவும் அவருடைய கணவரும் மீன்வலை பின்னும் பணி செய்து வருகின்றனர். தற்போது அரசு அனைத்தையும் இடித்துவிட்டதால் மூன்று குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மரியம் இது போன்ற சூழலை இரண்டாவது முறையாக சந்திக்கிறார். 2022-ஆம் ஆண்டு தீவின் எல்லையில், பாஜ் பகுதியில் அமைந்திருந்த வீடு இடிக்கப்பட்டது. வீடில்லாத சூழலில், பாலப்பரில் உள்ள அவருடைய அம்மா வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார் மரியம். தற்போது அந்த வீடும் இடிக்கப்பட்டுவிட்டது.
“எங்களுடைய வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருக்கிறது என்றால் எங்களுக்கு ஏன் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பை அரசு தர வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்புகிறார் அஸிஜா
“நாங்கள் இதற்கு வரி கூட கட்டியுள்ளோம். இப்போது எங்கும் செல்ல வழியில்லை,” என்று அவர் தெரிவிக்கிறார்.
அஸிஜா இருபது வருடங்களுக்கும் மேலாக அந்த வீட்டில் வசித்து வந்தார். “மாற்று இடம் தர அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
அரசு கொடுத்த நிலங்களில் உள்ள வீடுகளும் இடிப்பு என குற்றச்சாட்டு
அரசு தந்த நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளும் இடிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 1982-ஆம் ஆண்டு, இந்திரா ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடு கட்ட, அரசால் நிலம் வழங்கப்பட்டது.
பெட்-துவாரகாவின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹெம்பா வதேர் இது தொடர்பாக பிபிசி குஜராத்தியிடம் பேசினார்.
”1982-ஆம் ஆண்டு , நாற்பத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாலப்பர் பகுதியில் வீடு கட்ட அரசு நிலம் வழங்கியது. இந்திரா ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மக்கள் வீடுகளை கட்டினார்கள்” என்றார் அவர்
மேற்கொண்டு பேசிய அவர், “நான் பேரூராட்சியில் உறுப்பினராக இருந்தபோது, நிலம் வழங்கப்பட்டது தொடர்பாக விவகாரங்களை மேற்பார்வை செய்து வந்தேன். சில கட்டடங்கள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார்களும் அளிக்கப்பட்டது. இந்திரா ஆவாஸ் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால் சில பயனர்கள், போதுமான அனுமதியை பெறாமல் வீடுகளைக் கட்டினார்கள். தற்போது அந்த வீடும் தரைமட்டமாக்கப்பட்டது,” என்று விளக்கினார்.
துவாரகா மாவட்ட துணை ஆட்சியர் அமோல் ஆவாத் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
“இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள். சட்டத்திற்கு உட்பட்டு கட்டப்பட்ட வீடுகளை நாங்கள் ஏதும் செய்யவில்லை. மேலும் குஜராத் நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியிருப்பதால் சில வழிபாட்டு தலங்களையும் நாங்கள் இடிக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
“அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட சில வீடுகள் இடிக்கப்பட்டன. ஏன் என்றால் அவை போதுமான அனுமதிகளைப் பெறாமல் கட்டப்பட்டது. மேலும் சில வீடுகள் அருகில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டது,” என்று தெரிவித்தார் அவர்.
தற்போது அந்த தீவில், சாலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த உள்கட்டுமானத்திற்காகத் தான் வீடுகள் இடிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய துவாரகாவின் எம்.எல்.ஏ பபுபா மேனக், “இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது,” என்றார்.
மேற்கொண்டு பேசிய அவர், “வளர்ச்சிப் பணிகளுக்காக சாலைகள் உள்ளிட்ட வசதிகளை நாங்கள் உருவாக்க வேண்டும். ஆனால் போதுமான அளவு நிலம் இல்லை. சாலை விரிவாக்கப் பணிகளுக்கு தேவைப்படும் இடத்தில் அனுமதி இன்றி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவையே இடிக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
‘வேலைவாய்ப்பையும் இழந்தோம், வீட்டையும் இழந்தோம்’
கடலால் நால்புறமும் சூழப்பட்ட பெட்-துவாரகா ஒரு சிறிய தீவாகும்.
இதற்கு முன்பு இந்த பகுதிக்கு வர படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு அங்கே சுதர்சன் சேது கட்டப்பட்டதால் மக்கள் நேராக, இந்த தீவுக்கு வாகனங்களில் வருகின்றனர். பாலம் கட்டப்பட்ட பிறகு இந்த பகுதியில் சவாரிக்காக படகுகளை இயக்கியவர்கள் தொழிலை விட்டு வெளியேறினார்கள்.
61 வயதான யக்குபாய் சங்க்டாவும் அப்படி வாழ்வாதாரத்தை இழந்தவர்களில் ஒருவர். மஃப்சியா பகுதியில் 13 வருடங்களுக்கு முன்பு வீட்டைக் கட்டிய அவர் ஒக்ஹா மற்றும் பெட்-துவாரகா இடையே பயணிகளுக்கு படகு சவாரி சேவைகளை செய்து வந்தார்.
“படகு சவாரிகள் இல்லாததால் முதலில் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்தோம். தற்போது எங்களின் வீடுகளும் இடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் கல்வி கற்கவில்லை. எங்களால் ஏதும் செய்யமுடியாது. என்னுடைய குழந்தைகளை நினைத்து கவலை அடைகிறேன்,” என்று அவர் கூறினார்.
“என்னுடைய பேரக்குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். அரசு பல கோடி மதிப்பில் பள்ளியையும் அங்கன்வாடியையும் கட்டிக் கொடுத்தது. அதனால் தற்போது என்ன பயன்? புல்டோசர்கள் வந்து சென்ற பிறகு இங்கு இருப்பது எல்லாம் இடிபாடுகள் மட்டுமே” என்று தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார் யக்குபாய்.
60 வயதான சகீனாபென் பழனியும் அவருடைய மகள், மருமகன் அயூப் சும்பானியாவும், பாலப்பரில் உள்ள குருத்வாரா அருகே சாலையில் அமர்ந்திருந்தனர். சகீனாபென்னின் நான்கு பேரக்குழந்தைகளும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
வீட்டுக்கான ஆவணங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என்று தெரிவிக்கும் அயூப், பல ஆண்டுகளாக அதே வீட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கிறார்.
“தற்போது எங்களின் உறவினர்கள் வீட்டில் இரவில் சென்று தங்குகிறோம். நாங்கள் தற்போது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளோம். அங்கே எங்களின் பொருட்களை எல்லாம் கொண்டு செல்கிறோம்,” என்று கூறினார் அயூப்.
சகீனாபென், அவருடைய வீடு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கட்டப்பட்டது என்று கூறுகிறார்.
ஒரு பிரிவினர் வீடுகள் மட்டும் இடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த துவாரகா எம்.எல்.ஏ மனேக், “வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்ற வேளையில் சிலர் சாலையோரம் வீடுகளை கட்டியுள்ளனர். சாலை அமைக்கும் பணி ஆரம்பித்தவுடன் அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறுகிறனர்,” என்று தெரிவித்தார்.
எந்த ஒரு தனிப்பட்ட பிரிவினரையும் குறிவைத்து இதனை நிகழ்த்தவில்லை என்று துணை ஆட்சியர் கூறினார்.
மேலும், “பிற மதத்தை சேர்ந்தவர்களின் 20 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. பெட் துவாரகாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 85% வாழ்வதால், இடிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் அவர்களுடையதாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
காவலர்கள் முகாமாக மாறிய பள்ளி
பாலப்பர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 537 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி ஆரம்பமான பிறகு அந்த பள்ளி காவலர்களின் முகாம்களாக மாறியுள்ளது.
ஜனவரி 16-ஆம் தேதி அன்று பிபிசி அந்த பள்ளிக்கு சென்ற போது அங்கே ஒரு மாணவர் கூட இல்லை. காவல்துறையினர் அங்கே இருந்த போதும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கூறி பெற்றோர்களுக்கு அலைபேசியில் ஆசிரியர்கள் அழைத்து பேசினார்கள்.
“எப்போதும் 80% மாணவர்கள் பள்ளிக்கு தவறாமல் வருவது உண்டு. ஆனால் ஜனவரி 11-ஆம் தேதி அன்று 17 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். அதன் பிறகு ஒருவரும் பள்ளிப்பக்கம் வரவில்லை. எங்களின் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு அழைப்புவிடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் முதலில் அவர்கள் தங்குவதற்கான வீட்டை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் காவலர்கள் பள்ளி வளாகத்தில் இருப்பதால் மாணவர்கள் பள்ளி வர தயங்குகின்றனர்,” என்று கூறுகிறார் பள்ளி முதல்வரான தீபக் கிம்சூரியா.
துவாரகா பற்றி ஒரு சிறு அறிமுகம்
குஜராத் மாநிலத்தில் உள்ள தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் அமைந்துள்ளது துவாரகாதீஷ் கோவில்.
மேற்கு இந்தியாவில் மிக முக்கியமாக கருதப்படும் வழிபாட்டு தலம் இது. இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெட் துவாரகா. அங்கே துவாரகாதீஷ்ஜி முக்ய மந்திர் என்ற கோவில் உள்ளது. இதுவும் சிறப்புமிக்க கோவிலாக கருதப்படுகிறது.
இந்த தீவில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். சுதர்சன் சேது பாலம் இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் பிப்ரவரி 24,2024-ல் திறக்கப்பட்டது. இந்த பாலம், இந்த தீவை குஜராத்தோடு இணைக்கிறது.
இதற்கு முன்பு ஒக்ஹா டவுனில் இருந்து மூன்று கிலோமீட்டர் படகில் பயணம் செய்து இந்த தீவுக்கு மக்கள் வருகை புரிந்தனர். பாலம் திறக்கப்பட்ட பிறகு, இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.