பட மூலாதாரம், Getty Images
‘குடிகாரர்களின் தொல்லையால், பெண்களும், பெண் குழந்தைகளும் மாலை நேரங்களில் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை.’
‘குடிப் பழக்கத்தின் விளைவுகளால் என் சகோதரனின் இரண்டு மகன்களும் தந்தையை இழந்தனர்.’
‘எங்கள் கிராமத்தின் அடுத்த தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர், அது அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கிறது.’
பனஸ்கந்தாவில் உள்ள டோடியா கிராமம் மற்றும் தனனா கிராம மக்கள், இவ்வாறான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், அவ்வப்போது மதுவிலக்குக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சட்டமன்றத்திலும், இதுகுறித்து சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களும் விவாதப் பொருளாகி உள்ளன.
இந்நிலையில், பனஸ்கந்தா மாவட்டத்தின் சுய்காம் தாலுகாவில் உள்ள தனனா கிராம மக்களும், லக்கானி தாலுகாவில் உள்ள டோடியா கிராம மக்களும் ஒன்றிணைந்து மதுவிலக்குக்கான தங்கள் சொந்த விதிகளை வகுத்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் கடுமையான மதுவிலக்கு சட்டம் இருந்தபோதிலும், கிராம மக்கள் மீது திணிக்கப்பட்ட விதிகள் குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் மது விற்பனை செய்யப்படாத ஒரு கிராமம் கூட இல்லை என்கிறது எதிர்க்கட்சி.
மறுபுறம், காவல்துறை நடவடிக்கை எடுப்பதாகவும், ஆனால் சிலர் சட்டத்தை மீறுவதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறுகிறது பாஜக.
‘கிராமத்தில் யாராவது மது விற்றாலோ அல்லது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாலோ, அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என்று தனனா கிராம மக்கள் ஜூன் 11-ஆம் தேதி முடிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில், டோடியா கிராம மக்கள் கிராமத்தில் மதுபான விற்பனையாளர்களைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர்.
கிராமத்திலேயே மதுபானம் தயாரிக்கப்படுவதாக டோடியா கிராம மக்கள் கூறுகிறார்கள்.
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்ற பிறகு, மீண்டும் மதுபானத்தைத் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது .
கிராமத்தில் மதுவால் ஏற்படும் தீமைகள் அதிகரித்து விட்டன என்கிறார்கள் தனனா கிராம மக்கள்.
கிராம பேருந்து நிலையம் அருகிலேயே சிலர் மது அருந்தியதால் பெண்களும், குழந்தைகளும் தனியாக வெளியே செல்வது கடினமாக இருந்ததாக அவர்கள் கூறினர்.
குஜராத்தில் உள்ள இந்த கிராமம் மதுவிலக்கு தொடர்பாக தனக்கென ஒரு விதியை உருவாக்கியது ஏன் ?
பட மூலாதாரம், AMARSINH CHAUHAN
பனஸ்கந்தாவின் இரண்டு கிராமங்களில், மது அருந்துபவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
லக்கானி தாலுகாவின் தோடியா கிராமத்திலும், சுய்கம் தாலுகாவின் தனனா கிராமத்திலும், மக்கள் மதுவைத் தடை செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
“அடுத்த தலைமுறையினரும் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி வருவது கவனிக்கப்பட்டது. எனவே எங்கள் கிராம மக்கள் ஒன்று கூடி மதுவை தடை செய்ய முடிவு செய்தனர். மது இளைஞர்களை அழிக்கிறது. அது கல்வியை பாதிக்கிறது. ஆனால், ஒரு மாதமாக எங்கள் கிராமத்தில் யாரும் விதிகளை மீறவில்லை” என்று தனனா கிராமத்தைச் சேர்ந்த அமிராம் வியாஸ் பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.
டோடியா கிராமத்தைச் சேர்ந்த பலாபாய் தாக்கூரின் சகோதரர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மது அருந்தியதால் தனது சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறுகிறார் பலாபாய் .
“மதுவால், என் சகோதரனின் இரண்டு குழந்தைகள் தந்தையை இழந்துவிட்டனர். மது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது. எங்கள் கிராமத்தில், ஒரு வருடத்தில் 8 முதல் 10 பேர் மதுவால் இறந்திருக்கலாம்” என்று பிபிசி குஜராத்தியிடம் பேசிய பாலபாய் கூறினார்.
“பெண்களும் குழந்தைகளும் மதுவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கணவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தால், அவர்களை அடிப்பார், அது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது. எங்கள் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக மது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக, யாரோ ஒருவர் ரகசியமாக மது விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக மக்கள் கூறி வருகின்றனர். நான் அதைப் பார்க்கவில்லை என்றாலும், மது அருந்தத் தொடங்கினால், போலீசார் வந்து அதைத் தடுக்க வேண்டும்” என்று தோடியா கிராமத்தைச் சேர்ந்த சுபிபென் தாக்கூர், பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.
“கிராமத்தில் மதுபானம் விற்பனை செய்யும் யாரையும் நான் பார்த்ததில்லை. அப்படி இருந்தால், நாங்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம்” என்கிறார் தோடியா கிராமத்தின் தலைவர் கல்பேஷ்ஜி தாக்கூர்.
‘மது அருந்துபவர்களுக்கும்,விற்பனை செய்பவர்களுக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம்’
பட மூலாதாரம், KALPESHJI THAKOR
“மதுவால் ஏற்படும் சிக்கல்களால், பெண்களும் குழந்தைகளும் கிராமத்தை விட்டு வெளியே செல்வது கடினமாகிவிட்டது. எங்கள் கிராமத்தில், மக்கள் மது அருந்திவிட்டு கிராம பேருந்து நிலையம் அருகே அமர்ந்திருப்பார்கள். கிராமத்துப் பெண்கள் பால் வாங்க பண்ணைக்குச் செல்வதற்காக அல்லது கிராமத்தில் உள்ள பிற வேலைகளுக்காக பேருந்து நிலையம் அருகே செல்ல வேண்டியுள்ளது. குடிபோதையில் இருப்பவர்கள் சில மோசமான வார்த்தைகளைப் பேசுவார்கள் அல்லது சண்டையிடுவார்கள், எனவே பெண்கள் வெளியே செல்வது கடினமாக இருந்தது” என்றார் பிபிசி குஜராத்தியிடம் பேசிய தனனா கிராமத்தின் தலைவர் அமர்சிங் சவுகான்.
எனவே, தனனா கிராம மக்கள் ஒன்று கூடி, மதுபானம் குறித்து கிராம கிராம பஞ்சாயத்துத் தலைவரிடம் புகார் அளித்தனர். பஞ்சாயத்துத் தலைவர், கிராம மக்களை ஒன்று திரட்டியுள்ளார். பின்னர், மக்கள் மதுவைத் தடை செய்து அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.
“மது விற்பனை செய்பவர்களிடமும், மது அருந்துபவர்களிடமும் நாங்கள் பேசினோம். அவர்கள் மது அருந்துவதை நிறுத்தவும் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, மது அருந்துபவர்களுக்கும், மது விற்பனை செய்பவர்களுக்கும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்தோம். கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து, மது அருந்துவது அல்லது விற்பனை செய்வது பிடிபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்” என்று பகிர்ந்து கொண்டார் அமர் சிங் சவுகான்.
அதனையடுத்து, தோடியா கிராமத்தில் ஏப்ரல் மாதத்தில் மதுவைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.
பிபிசி குஜராத்தியிடம் பேசிய தோடியா கிராமத்தின் தலைவர் கல்பேஷ்ஜி தாக்கூர், “எங்கள் கிராமத்தில் மதுபானம் தயாரிக்கப்படுகிறது. ஏப்ரல் 2025 இல் மதுபான விற்பனையாளர்களுக்கு எதிராக நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். கிராம மக்கள் ஒன்று கூடி, மதுபானம் விற்பனை செய்யும் ஒருவரின் வீட்டில் நடைபெறும் எந்தவொரு நல்ல அல்லது கெட்ட நிகழ்விலும் கிராமத்தைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தனர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஒரு வருடத்தில், சுமார் எட்டு இளைஞர்கள் மது அருந்தி இறந்திருக்கலாம். கிராம மக்கள் முன்னதாகவே காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர், ஆனால் காவல்துறையினர் வருவதற்குள், மது விற்பனை நின்றுவிடும். பின்னர், மறுநாள் முதல் மது விற்பனை மீண்டும் தொடங்கும். கடந்த மூன்று மாதங்களாக கிராமத்தில் யாரும் மது விற்பனை செய்யவில்லை” என்று கூறுகிறார்.
தடை பற்றி காவல்துறை கூறியது என்ன?
தனனா கிராமம் சுய்காம் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. தோடியா கிராமம் தாரத் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது.
இந்த இரண்டு காவல் நிலையங்களுக்கும் ஒரே துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பொறுப்பாக இருப்பது போல தெரிகிறது
பிபிசி குஜராத்தியிடம் பேசிய டி.எஸ்.பி வரோடாரியா, “எந்தவொரு கிராமமும் மது அருந்துவதால் தொந்தரவு செய்யப்பட்டதாகவும், கிராம மக்கள் மதுவுக்குத் தடை விதித்து அபராதம் விதித்ததாகவும் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மதுவிலக்கு குறித்து காவல்துறை மிகவும் தீவிரமாக உள்ளது. காவல்துறையினர் சோதனை நடத்தி மதுவைப் பறிமுதல் செய்கிறார்கள். மதுபான விற்பனையாளர்கள் மீதும் அவர்கள் புகார்களைப் பதிவு செய்கிறார்கள். பனஸ்கந்தாவில் போதை பழக்கத்தை ஒழிக்கவும் எங்கள் குழு பிரச்சாரம் செய்து வருகிறது” என்றார்.
குஜராத்தில் மதுவிலக்கு பற்றி காங்கிரசும் பாஜகவும் கூறியது என்ன ?
குஜராத்தில் மதுவிலக்கு என்பது மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
அவ்வப்போது, மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுவது குறித்த செய்திகள் குஜராத் ஊடகங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மது பாட்டில்களை காவல்துறையினர் அள்ளிச் செல்லும் காட்சிகளும் வெளிச்சத்திற்கு வருகின்றன.
இந்நிலையில் குஜராத்தில் மதுவிலக்கு சட்டத்தின் நிலை குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி, பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “குஜராத்தில் மது கிடைக்காத ஒரு கிராமம் கூட இல்லை. அரசாங்கம் வேண்டுமென்றே சமூக விரோத சக்திகள் மதுவை விற்க அனுமதிக்கிறது” என்றார்.
மேலும், “அரசாங்கம் மற்றும் காவல் துறையின் தோல்வியால் தான் கிராம மக்கள் தாங்களாகவே தங்கள் கிராமத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டியதாயிற்று. மக்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்குப் பிறகு, அரசாங்கம் விழித்துக் கொண்டு மதுவிலக்குச் சட்டத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் டேவ், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “எந்தவொரு சட்டம் இயற்றப்படும் போதெல்லாம், சிலர் சட்டத்தை மீறுகிறார்கள். உதாரணமாக, கார்களில் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் உள்ளது, ஆனால் சிலர் சீட் பெல்ட் அணியாமல் சட்டத்தை மீறுகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மதுவிலக்கு கண்டிப்பாக அமல்படுத்தப்படுகிறது. காவல்துறையினராலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, ஆனால் சிலர் சட்டத்தை மீறுகிறார்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது, ஆனால் கிராம மக்களும் இதுபோன்ற தன்னார்வ முயற்சிகளை மேற்கொண்டால், அது கிராம மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் நன்மை பயக்கும்” என்றும் கூறினார்.
குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சைலேஷ் பர்மாரின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி, “இரண்டு ஆண்டுகளில் (டிசம்பர் 2021 முதல் டிசம்பர் 2023 வரை) குஜராத்தில் ரூ.197.56 கோடி மதிப்புள்ள இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், ரூ.3.99 கோடி மதிப்புள்ள பீர் மற்றும் ரூ.10.51 கோடி மதிப்புள்ள நாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ரூ.28.23 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் ஆமதாபாத்தில் இருந்தும், ரூ.21.47 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் சூரத்தில் இருந்தும், ரூ.14.61 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் வதோதராவில் இருந்தும், ரூ.13.89 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் ராஜ்கோட்டில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு