பட மூலாதாரம், Gujarat CMO
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த தகவலை மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் அமைச்சர் ஹ்ரிசிகேஷ் படேல் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளனர்.
புதிய அமைச்சர்கள் நாளை (அக். 17) பதவியேற்க உள்ளனர். 16 அமைச்சர்களில் 8 கேபினட் அமைச்சர்களும், எட்டு இணை அமைச்சர்களும் அடங்குவர்.
பட மூலாதாரம், Getty Images
ராஜினாமா செய்த அமைச்சர்கள் யார் யார்?
கனுபாய் தேசாய், ஹ்ரிசிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பல்வந்த்சிங் ராஜ்புத்,குன்வர்ஜி பவாலியா, முல்லுபாய் பெரா, குபேர் டின்டோர் மற்றும் பானுபென் பபாரியா ஆகிய கேபினட் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஹர்ஷ் சிங்வி, ஜக்தீஷ் பன்சால், புருஷோத்தமன் செலன்கி, பச்சுபாய் காபட், முகேஷ் படேல், ப்ராஃபுல் பன்ஷேரியா, பிகுசிங் மற்றும் குன்வர்ஜி ஹல்பாடி ஆகிய 8 பேரும் ராஜினாமா செய்துள்ள இணையமைச்சர்கள் ஆவர்.
பட மூலாதாரம், Gujarat CMO
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன்?
அரசியல் விமர்சகரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான கன்ஷ்யாம் ஷா,”1985ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்த நிலையில், தற்போது பாஜக உள்ளது. 1985ல் மாதவ்சின் சொலன்கி 149 தொகுதிகளில் வென்றார். எனினும் 2022ஆம் ஆ ண்டு பாஜக இந்த சாதனையை முறியடித்து 156 தொகுதிகளை கைப்பற்றியது. அதன்பிறகு காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்து சேர்ந்ததால் இந்த எண்ணிக்கை 162ஆக உயர்ந்தது.
இந்த சூழலில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது கடினமான ஒன்று. அதனால்தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவில் முதல்முறையாக கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் வதோதரா மற்றும் சபர்கந்தா பகுதியில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். அப்போதில் இருந்து பாஜகவில் உள்ள அதிருப்தி தெளிவாகத் தெரிகிறது.” என்றார்
அமைச்சரவையை மாற்றியமைப்பதன் மூலம் ஆட்சி மீதான எதிர்ப்பலையை சமாளிக்க பாஜக விரும்புகிறது என அரசியல் விமர்சகர் வித்யூத் ஜோஷி நம்புகிறார்.
“பாஜக எப்போதெல்லாம் எதிர்ப்பலையை எதிர்கொள்கிறதோ, அப்போது மற்றவர்கள் மீது பழிபோடும். இந்த அமைச்சரவை மாற்றமும் அரசின் தவறை அமைச்சர்கள் மீது திருப்பும் முயற்சிதான்” என அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
பாஜகவிற்குள் நிலவும் அதிருப்தியும், சௌராஷ்டிராவில் அதிகார சமநிலையும்
பாரதிய ஜனதாவுக்குள் இருக்கும் அதிருப்தியை ஆதரித்து, சௌராஷ்டிராவின் மூத்த பத்திரிகையாளர் கௌஷிக் மேத்தா,”தெற்கு குஜராத் அமைச்சரவையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றதால், பாஜக தங்களைப் புறக்கணிப்பதாகச் சௌராஷ்டிரா மக்கள் உணர்ந்தனர். இரண்டாவதாக, சௌராஷ்டிராவின் லேவா படேல்களிடையே நிறைய அதிருப்தி உள்ளது” என்று பிபிசியிடம் கூறினார்.
“கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், படேலின் ஓபிசி வாக்கு வங்கியை ஈர்ப்பதற்காக ஜகதீஷ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சௌராஷ்டிராவில் அதிகாரச் சமநிலை தேவைப்படுகிறது. எனவே, நிதி, தொழில் மற்றும் வருவாய் போன்ற முக்கியத் துறைகளில் சௌராஷ்டிராவின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது” என்றும் அவர் கூறினார்.
“விசாவாதர் பாஜகவுக்கு ஒரு உறுதிசெய்யப்பட்ட இடம் இல்லை என்றாலும், அங்கிருந்து ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் கோபால் இத்தாலியா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஆம் ஆத்மி ஒரு புதிய உத்தியை வகுத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 40 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதற்கு முதல் உதாரணம் போடாட்டில் நடந்து வரும் போராட்டங்கள். இதன் தாக்கம் போடாட்டுக்கு மட்டும் அல்லாமல், அருகிலுள்ள கட்டடா முதல் கரியாதர் தொகுதி வரையிலும் காணப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவுக்கு ஒரு சவால்தான்” என கன்ஷ்யாம் ஷா தெரிவித்தார்.
“இது, குஜராத்தில் பிப்ரவரி 2026-ல் நடைபெறவிருக்கும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்தக் பருவமழை காலத்தின்போது அரசாங்கத்தின் செயல்பாடு, சௌராஷ்டிரா மற்றும் வட குஜராத்தில் ஆட்சிக்கெதிரான அலையை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சமாளிக்க, ஒரு புதிய அமைச்சரவை உருவாக்கம் உதவக்கூடும்” என்று அவர் கூறுகிறார்.
பாஜக இதற்கு முன்பும் செய்துள்ளது
“பாஜக இதை இதற்கு முன்பும் செய்துள்ளது. இயற்கைப் பேரிடர்களின் போது ஏற்பட்ட ஆட்சிக்கெதிரான அலையின் காரணமாக அவர்கள் கேஷுபாய் படேலை மாற்றினர். படேல் மற்றும் ஓபிசி போராட்டங்களை அடக்கத் தவறிய ஆனந்திபென் படேலின் கீழ் மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்களில் அதிருப்தியைக் கண்டபோது, அவர்கள் அவரை மாற்றினார்கள். பின்னர் முதல்வராக இருந்த விஜய் ரூபானியை மாற்றி தேர்தலில் வெற்றி பெற்றனர்.
தற்போது நடப்பதைஇதை மறுசீரமைப்பு என்று அழைக்க வேண்டுமே தவிர, விரிவாக்கம் என்று அழைக்கக் கூடாது” என்கிறார் அரசியல் ஆய்வாளர் வித்யுத் ஜோஷி.
“கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்குள் சாதிச் சமன்பாடுகளில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. காந்திநகரை அடைய, அவர்கள் சௌராஷ்டிரா வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், சி.ஆர். பாட்டீல் மாநிலத் தலைவராக ஆன பிறகு, 156 இடங்களில் வெற்றி பெற்றாலும், சௌராஷ்டிரா புறக்கணிக்கப்பட்டதாக அனைவரும் உணர்கின்றனர். சங்கர் சிங் பாஜகவுக்குள் கிளர்ச்சி செய்ததிலிருந்து, சௌராஷ்டிராவின் மாநிலத் தலைவர் அல்லது முதல்வர் தொடர்ந்து சௌராஷ்டிராவைச் சேர்ந்தவராகவே இருந்து வருகிறார். இருப்பினும், ஆமதாபாத் முதல்வர் மற்றும் சி.ஆர். பாட்டீல் ஆகியோரின் சேர்க்கை சௌராஷ்டிரா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
குஜராத்தில் அமோக வெற்றி பெற்ற பாஜக
2022ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 152 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாகினர்.
அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்ந்தது.
குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டும், சட்டமன்ற தேர்தல் 2027ஆம் ஆண்டும் நடக்க உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு