• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? – இபிஎஸ் கண்டனமும் அரசின் விளக்கமும் | Republic Day tablaeu issue: Fact Check unit of TN renders explanation

Byadmin

Dec 23, 2024


சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்துள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு, ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன், ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகத்தின் எக்ஸ் பக்கத்தில், “குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி 2025-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்.

2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது.” என்று விளக்கமளித்துள்ளது.



By admin