குடியரசு துணைத்தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் ஓர் உயர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். முன்பு அப்துல் கலாமை குடியரசு தலைவராக்கிய பாஜக, மீண்டும் ஒரு தமிழருக்கு உயர் பதவியைக் கொடுத்திருப்பதாக பாஜக தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தமிழரை, குடியரசு துணைத்தலைவராக்கியதன் பலன், தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்குமென்று கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு மண்டலத்தில் குறிப்பாக கொங்கு வேளாளர் சமுதாயத்தினரின் ஆதரவு அதிகரிக்க இது உதவுமென்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார் கூறினாலும், அவரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அல்லது ஒரு பகுதியின் பிரதிநிதியாகப் பார்க்க முடியாது என்கிறார்கள் பாஜக மூத்த நிர்வாகிகள். ஆனால் சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுத்திருப்பது, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.
இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவர், பாஜக சார்பில் இரு முறை (1998 மற்றும் 1999) கோவை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக பாஜக தலைவராக பதவி வகித்துள்ளார். தேசிய கயிறு வாரியத் தலைவர், ஜார்க்கண்ட் ஆளுநர் பதவிகளை வகித்த அவர், மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.
கொங்கு மண்டல பாஜகவுக்கு முதல் முறை உயரிய பதவி!
குடியரசு துணைத்தலைவருக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அவரை அறிவித்தவுடன், இது பாஜக ஆட்சியில் தமிழருக்கு வழங்கப்பட்டுள்ள பெரும் அங்கீகாரம் என்றும், தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை திமுகவும், கூட்டணிக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் அக்கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும் கருத்துகளை வெளியிட்டனர்.
ஆனால் தமிழகத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்யாதது உட்பட தமிழகத்தை புறக்கணித்துவிட்டு, சிபிஆருக்குப் பதவி கொடுப்பதால் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எந்த பலனும் இல்லை என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் அதற்கு பதில் கொடுத்துவந்தனர்.
தற்போது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்தத் தேர்வு அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவை தலைவராகவும், கட்சி சார்புக்கு அப்பாற்பட்ட பதவி என்றாலும், இந்த உயரிய பதவி பாஜகவுக்கு என்ன சாதமான பலன்களை கொடுக்கும் என விவாதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு ஆதரவும், கட்டமைப்பும் வலுவாகவுள்ள கொங்கு மண்டலத்தில் குடியரசு துணைத்தலைவராக சிபிஆர் தேர்வு செய்யப்பட்டிருப்பது, பாஜகவுக்கும், அதிமுக கூட்டணிக்கும் எவ்வளவு கூடுதல் பலம் சேர்க்கும், திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற விவாதங்களும் வலுத்துள்ளன. குறிப்பாக கொங்கு வேளாளர் சமுதாயத்தில் பாஜகவுக்கான ஆதரவை இது அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
விரக்தி அகன்றுள்ளதா?
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வக்குமார், ”கொங்கு மண்டலத்தில்தான் பாஜகவுக்கு அதிக தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த யாருக்கும் உயரிய பதவி என்று எதுவும் வழங்கப்பட்டதில்லை. தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். அதனால் கட்சியினரிடம் ஒரு வித விரக்தி இருந்தது. சிபிஆருக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தால் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.” என்றார்.
இந்த அங்கீகாரம், கொங்கு வேளாளர் சமுதாய மக்களிடம் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும், சி.பி.ராதாகிருஷ்ணன் தமது பதவிக்கு ஏற்ற வகையில் அடிப்படையில் சாதி, மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக எல்லோருடனும் இணைந்து பணியாற்ற விரும்புபவர் என்கிறார் செல்வக்குமார்.
ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தாலும், அவர் கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, கோவையில் இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதிகளுக்கே அதிகளவில் நிதியை ஒதுக்கி ஏராளமான பணிகளைச் செய்ததாகக் கூறுகிறார்.
படக்குறிப்பு, சி.பி.ராதாகிருஷ்ணன் உடன் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.கே.செல்வக்குமார் (கோப்பு படம்)
கொங்கு வேளாளர் சமுதாயத்தினரின் ஆதரவு அதிகரிக்குமா?
சிபிஆரை குடியரசு துணைத்தலைவராக நியமித்தது தொடர்பாக, கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் ஆதரவுக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவருடைய தேர்வால், கொங்கு மண்டலத்திலோ அல்லது கொங்கு வேளாளர் சமுதாயத்திலோ பாஜகவுக்கான ஆதரவு பெருகுமென்ற கருத்தையும் எதிர்பார்ப்பையும் மறுப்பவர்களும் இருக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய கொங்கு வேளாளர் கலாச்சார பாதுகாப்பு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் லோகநாதன், ”அண்ணாமலை பாஜக தலைவரானபோதும் இதே கருத்தைப் பலரும் பரப்பினர். அவர் பின்னால் கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் முக்கியமாக இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர். சமுதாயத்தைத் தாண்டியும் இளைய தலைமுறையினரிடம் அவர் மீது ஈர்ப்பு இருந்தது. அவரை பதவியிலிருந்து நீக்கிய பின் அந்த கூட்டம் விஜய் பக்கம் திரும்பிவிட்டது. அண்ணாமலை ஏற்படுத்திய தாக்கத்தை, சிபிஆரால் ஏற்படுத்த முடியாது. அவருக்கு பதவி கொடுப்பதால் அதை ஈடு செய்ய முடியுமென்று நான் கருதவில்லை.” என்கிறார்.
இதே போன்ற கருத்தை முன் வைக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன், கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் ஆதரவு அதிகமாகவுள்ள நிலையில், சிபிஆரை குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்ததால் மட்டும் இந்த ஆதரவு இன்னும் அதிகமாகிவிடுமென்று கருத முடியாது என்கிறார். இதற்காக தனியாக ஒரு வாக்கு வங்கி உருவாக வாய்ப்பில்லை என்கிறார் ப்ரியன்.
பட மூலாதாரம், லோகநாதன்
படக்குறிப்பு, வழக்கறிஞர் லோகநாதன்
”கொங்கு வேளாளர் பெரும்பாலானோர் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் அதிகாரம் பெற்றதால், அதிமுகவுக்கும் அந்த சமுதாயத்தின் ஆதரவு பெருகிவிட்டது. கீழ்மட்ட மற்றும் நடுத்தட்டு கொங்கு வேளாளர்கள் சிலர் மட்டுமே திமுகவை ஆதரிக்கின்றனர். அதனால் அதிமுக–பாஜக கூட்டணி வைப்பதால் அந்த சமுதாயத்தின் வாக்குகள் அப்படியே கிடைக்கும்.” என்று பிபிசி தமிழிடம் மேலும் விளக்கினார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.
வசதி படைத்த கொங்கு வேளாளர்கள் பெரும்பாலானோர், இந்துத்துவ மனநிலையில் உள்ளனர் அல்லது மத்தியில் அவர்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்பதற்காக தங்களை அப்படிக் காண்பித்துக் கொள்கின்றனர் என்று கருத்து கூறும் ப்ரியன், ஒரு சமுதாயம் ஒரு கட்சிக்கும், கூட்டணிக்கும் ஆதரவாகச் செல்லும்போது, மற்ற சமுதாயத்தினரின் வாக்குகள் அதற்கு எதிராகத் திரும்பும் என்கிறார்.
ஆனால் சி.பி.ராதாகிருஷ்ணனை ஒரு பகுதியின் அல்லது ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாகப் பார்க்க முடியாது என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். அவரை இந்தப் பதவியில் நியமித்தது, தமிழகத்துக்கும், தமிழர்களுக்குமான ஓர் அங்கீகாரமாகவே பார்க்கப்படும் என்கிறார்கள்.
பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பாஜக ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவரும், பாஜக சிந்தனையாளர் மையமான ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி மைய அறங்காவலருமான கனகசபாபதி, ”கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வளவு பெரிய உயரிய பதவி கிடைப்பது இதுதான் முதல் முறை. அதில் இங்குள்ள மக்களுக்கு பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் அவரை குறிப்பிட்ட பகுதியின், சமுதாயத்தின் பிரதிநிதியாகப் பார்க்க முடியாது. அது தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் சொல்ல முடியாது.” என்கிறார்.
இதே கருத்தைத் தெரிவித்த தமிழக பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர், ”கட்சிக்கு லாபம் கிடைக்குமென்ற நோக்கோடு அவரை இந்தப் பதவிக்கு கட்சித்தலைமை தேர்வு செய்யவில்லை. அதுமட்டுமின்றி அரசியல் சாசனத்திற்குட்பட்ட குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் மற்றும் ஆளுநர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள், அரசியலுக்காக குரல் கொடுக்க சட்டமும் அனுமதிப்பதில்லை.” என்றார்.
பட மூலாதாரம், எஸ்.ஆர்.சேகர்
படக்குறிப்பு, தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்
சிபிஆரால் கொங்கு மண்டலத்துக்கு நன்மை கிடைக்குமா?
பாஜக நிர்வாகிகள் இப்படிக் கூறினாலும், சிபிஆரின் தேர்வு, தங்களுடைய கூட்டணிக்கும், தேர்தல் பரப்புரைக்கும் சாதகமாக இருக்குமென்று அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில், இப்போது நடந்துள்ள இந்த தேர்வு, திமுகவின் பல கருத்துகளை முறியடிப்பதற்கான ஓர் ஆயுதமாக இருக்குமென்று அவர்கள் நம்புகின்றனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன், ”சிபிஆரை குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்திருப்பது, எங்களுடைய கூட்டணிக்கு உற்சாகம் தரும் டானிக் போன்றது. வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டணிக்கு இது ஒரு சாதகமான அம்சமாக இருக்கும்.” என்றார்.
”அப்துல் கலாமை குடியரசு தலைவராக்கியதும் இதே பாஜக ஆட்சியில்தான். இப்போதும் ஒரு தமிழரை இவ்வளவு பெரிய பதவியில் அமர்த்தியிருப்பதையும், பல நேரங்களில் தமிழர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரத்தை திமுக தடுத்ததையும் பரப்புரையில் நாங்கள் சொல்வோம். சிபிஆர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதால் அவருடைய தேர்வை இங்குள்ள மக்கள் அங்கீகரிப்பர். அவர் இந்தப் பொறுப்பில் அமர்வதால் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற அவருடைய பதவி பெரும் துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.” என்கிறார்.
படக்குறிப்பு, கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன்
உட்கட்டமைப்பு போன்ற விவகாரங்களைத் தாண்டி நாடு முழுவதுக்குமான நோக்குடன் சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்படுவார் என பாஜகவினர் கூறுகின்றனர்.
தமிழக பாஜக ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கனகசபாபதி, ”சிபிஆர் தேசிய அடையாளமாக மாறியுள்ளார். ஒரு பகுதிக்கான வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டியது அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. ஆனால் நாம் முறைப்படி கோரிக்கை வைத்து, அவர் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதற்காக அவரும் குரல் கொடுக்க வாய்ப்புள்ளது.” என்று தெரிவித்தார்.
”பாஜக தேசிய அளவிலான தொலைநோக்குடன் மாதம் ஒரு விமான நிலையத்தைத் திறந்து வருகிறது. அதனால் கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களை அரசே நிறைவேற்றும். சிபிஆர் ஓர் உயர்ந்த அதிகாரத்தில் இருப்பதால், மத்திய அமைச்சரவையுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு கூடுதல் வாய்ப்புள்ளது. அதனால் அவராகவே உரிய முறையில் பேசி நடவடிக்கை எடுப்பார். அவருக்கு தமிழகம் மீதான பார்வையும் உள்ளது. அதனால் அவருக்கு நினைவூட்டினாலே போதுமானது. ” என்கிறார் எஸ்ஆர் சேகர்.
ஆனால் “ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு உட்பட்டும் பாஜகவின் அஜெண்டாவையும் தாண்டி அவரால் தமிழக நலனுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்க வாய்ப்பில்லை” என்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.
குடியரசு துணைத்தலைவர் என்பது ஓர் அலங்காரப் பதவி என்பதால், சி.பி.ராதாகிருஷ்ணனால் தமிழகத்துக்கோ, கொங்கு மண்டலத்துக்கோ எந்த வகையிலும் பயன் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.
”அதேபோன்று பெரும்பான்மை சமுதாயம் ஒரு தரப்புக்கு ஆதரவாக ஒன்று சேரும்போது, சிறுபான்மை சமுதாயங்கள் எதிராக ஒன்று சேர்வது இயல்பு. அதிமுக–பாஜக கூட்டணிக்கு ஆதரவாக கொங்கு வேளாளர் வாக்குகள் 40 சதவீதம் கிடைத்தால் பிற சமுதாயத்தினரின் 60 சதவீத வாக்குகள், அந்த கூட்டணிக்கு எதிராகத் திரும்பும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதுதான் நடந்தது.” என்கிறார் ப்ரியன்.