இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
தோல்வியை தழுவிய சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 767 எம்.பி.க்கள் வாக்களித்ததாகவும், இதில் 752 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 15 வாக்குகள் செல்லாத வாக்குகள் எனவும் பிசி மோதி கூறினார்.
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களால் ஜூலை 21ஆம் தேதி இரவு திடீரென ராஜினாமா செய்தார். இதனால் இந்தத் தேர்தல் பெற்றது.
தற்போது வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும், சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிராவின் 24வது ஆளுநராக உள்ளார். ஜூலை 31, 2024 அன்று இந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக அவர் பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். மார்ச் மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.
பட மூலாதாரம், CPRADHAKRISHNAN/FB
சி.பி.ராதாகிருஷ்ணன் யார்?
மகாராஷ்டிர அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அக்டோபர் 20, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகராகத் தொடங்கி, 1974 இல் பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார்.
1996 இல், ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1998 மற்றும் 1999 என தொடர்ச்சியாக 2 முறை கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.
பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
2004 ஆம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றக் குழுவில் ஒரு பகுதியாக ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார்.
2004 முதல் 2007 வரை இவர் தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். இந்த பொறுப்பில் இருந்த போது 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார்.
அதன் பிறகு, 2004, 2014 மற்றும் 2019 என 3 முறை அதே கோவை மக்களவைத் தொகுதியில் அவர் தோல்வியடைந்தார்.
விளையாட்டு வீரரான ராதாகிருஷ்ணன் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்தார்.
பட மூலாதாரம், ANI
குடியரசு துணைத் தலைவரின் பொறுப்புகள் என்ன?
இது இந்திய அரசியலமைப்பில் 2வது உயரிய பதவியாகும். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால், பதவிக்காலம் முடிந்தாலும் புதிய குடியரசு துணைத் தலைவர் பதவியேற்கும் வரை அவரே பதவியில் தொடரலாம்.
எனினும், குடியரசு துணை தலைவர் என்பவர் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருக்க மாட்டார். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையின் தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் விளங்குகிறார். மாநிலங்களவையை நடத்துவதும் அவரின் முக்கியமான பொறுப்பாகும்.
மேலும், குடியரசு தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் குடியரசு துணைத் தலைவரே தற்காலிகமாக குடியரசு தலைவராகப் பதவி வகிக்க முடியும்.
உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் குடியரசு தலைவர் தனது வேலையை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் குடியரசு துணைத் தலைவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருக்கு குடியரசு தலைவர் பதவிக்கான அனைத்து அங்கீகாரங்களும் கிடைக்கும்.
குடியரசு துணைத் தலைவருக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.