அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறாத குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இம்முறை இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் நடத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.
இந்தியாவின் 15வது குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், போட்டியிடுகிறார், மறுபுறம், இந்தியா கூட்டணி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியை குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராக நியமித்துள்ளது.
வாக்குப்பதிவு செப்டம்பர் 9ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களால் ஜூலை 21ஆம் தேதி இரவு திடீரென ராஜினாமா செய்தார். இதனால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022இல் பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் ஆகஸ்ட் 10, 2027 வரை இருந்தது.
பொதுவாக மிகவும் சலிப்பை ஏற்படுத்தும் பெயரளவுக்கான தேர்தலான குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இம்முறை வித்தியாசமாக முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார், அரசியல் ஆய்வாளர் நீர்ஜா சவுத்ரி.
“சமீபத்திய நிகழ்வுகள் இந்தத் தேர்தலை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளன. ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த விதமாக இருந்தாலும் சரி, ராஜீவ் பிரதாப் ரூடி இந்திய அரசியலமைப்பு சங்கத்தின் செயலாளர் பதவியை வென்ற விதமாக இருந்தாலும் சரி”என்று நீர்ஜா சவுத்ரி கூறுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சங்கத்தின் தேர்தலில் (Constitution Club of India) ரூடி 100க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அவர் குறிப்பிடுகிறார். அதுவும் பாஜகவின் பெரிய தலைவர்களான , அமித் ஷாவும் ஜே.பி. நட்டாவும் ரூடியை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சீவ் பாலியனை ஆதரித்திருந்த சூழலில் கிடைத்த அந்த வெற்றியைப் பற்றி நீர்ஜா குறிப்பிடுகிறார்.
பொதுவாக பெரும் கவனமின்றி நடக்கும் இந்த தேர்தலில் நடப்பு ஆண்டில், அமித்ஷா, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்று வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில், சோனியா காந்தி ஆதரவு மட்டுமின்றி, பாஜக எம்.பி.க்கள் தலைமையின் விருப்பத்திற்கு மாறாக வாக்களித்திருக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலை, அரசாங்கத்தின் வலிமை, ஆர்எஸ்எஸ் மற்றும் அரசாங்கத்திற்கு இடையிலான ஒருங்கிணைப்பு, மற்றும் தலைமையின் தரநிலைகள் ஆகியவற்றின் அடிப்படைகளில் மதிப்பீடு செய்கிறார் நீர்ஜா சவுத்ரி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு வெற்றியில் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், சிறிதளவு வாக்குகள் மாறியிருந்தாலும், அது கூட்டணியின் ஒருங்கிணைப்பு மற்றும் அரசாங்கத்தின் வலிமை குறித்து சந்தேகங்களை ஏற்படுத்தும் என நீர்ஜா சவுத்ரி கூறுகிறார்.
“கூட்டணி, வெற்றிக்கு தேவையான எண்ணிக்கையை விட அதிக வாக்குகளைப் பெறுவதில் வெற்றி பெற்றால், அது தலைமைத்துவம், வலிமை மற்றும் அமைப்புசார் சக்தியின் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கணிப்பு யாருக்குச் சாதகமாக உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை வேறொரு கோணத்தில் அணுகுகிறார்.
எண்கள் அடிப்படையில் பார்த்தால், இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் அவர்.
“எந்த கூட்டணி, தங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக வாக்குகளைப் பெறுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். மொத்தம் 782 வாக்குகளில், 48 வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணியையோ, இந்தியா கூட்டணியையோ சார்ந்தவை அல்ல,” என அவர் விளக்குகிறார்.
“இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் உத்தியை வழிநடத்தும் முக்கிய பொறுப்பை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்றுள்ளார். அவர் அனைத்து கட்சிகளுடனும் பேசியுள்ளார். ஆனால் அவருக்கு வாக்குகள் கிடைக்குமா என்பது வேறு விஷயம்,” என திரிவேதி கூறுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி பெற தேவையான 391 வாக்குகளை விட 31 வாக்குகள் அதிகம் உள்ளன. இந்தியா கூட்டணி 312 வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை.
“இரண்டாவது முக்கிய அம்சம், இந்த தேர்தலில் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு தெளிவாகக் காணப்படுகிறது. அதனால்தான் ஒரு ஆர்எஸ்எஸ் தன்னார்வலர் (சி.பி.ராதாகிருஷ்ணன்) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,” என்றும் அவர் விவரிக்கிறார்.
இந்த தேர்தல் இன்னொரு காரணத்தால் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. ஒடிசாவின் முக்கிய பிராந்தியக் கட்சியான பிஜு ஜனதா தளம் (BJD) இன்னும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்கிறார் விஜய் திரிவேதி.
இதற்கிடையில், மூத்த பத்திரிகையாளர் வினிதா யாதவ் கூறுகையில், இந்த முறை குடியரசு துணைத்தலைவர் தேர்தல் தோன்றும் அளவுக்கு எளிதானது அல்ல. “தெற்கு மற்றும் வடக்கு மாநில போட்டிகள், எம்.பி.க்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்கும் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது” என அவர் கூறுகிறார்.
கொறடா உத்தரவை பின்பற்ற அவசியமில்லை
நாட்டில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் கட்சி சின்னங்களின் அடிப்படையில் நடைபெறுவதில்லை. எனவே, எந்தக் கட்சியும் கட்டாய வாக்களிப்பு உத்தரவை வெளியிடுவதில்லை என்று அரசியல் ஆய்வாளர் அனந்த் மிஸ்ரா கூறுகிறார்.
“இதன் விளைவாக, ஒரு உறுப்பினர், தனது விருப்பப்படி யாருக்கும் வாக்களிக்க முடியும். அதனால்தான் பலர் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடுவதைக் காணலாம்” என அவர் விளக்குகிறார்.
“இந்தத் தேர்தலில் கட்சியின் கொறடா உத்தரவு செயல்படுத்தப்படாததால், 1969 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தோல்வியடைந்தார். இந்திரா காந்தியின் ஆதரவுடன், வி.வி. கிரி தேர்தலில் வெற்றி பெற்றார்”என அவர் நினைவூட்டுகிறார்.
மூத்த பத்திரிகையாளர் மீனா சர்மா கூறுகையில், “இந்தியா கூட்டணி இந்தத் தேர்தலை தெற்கிற்கும் தெற்கிற்கும் இடையேயான போட்டியாக மாற்றியுள்ளது. ஆனால் தெற்குப் பகுதியின் முக்கிய கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெறுவதில் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது. ஆந்திராவில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா கூட்டணியின் முயற்சி உத்தி ரீதியாக பலவீனமாகத் தெரிகிறது”என்கிறார்.
AIMIM (மஜ்லிஸ் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
“தெலுங்கானா முதலமைச்சர் அலுவலகம் என்னிடம் தொடர்பு கொண்டு, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், மரியாதைக்குரிய சட்ட வல்லுநர் என்பதால் AIMIM அவருக்கு ஆதரவு அளிக்கும்,” என ஓவைசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவரின் பொறுப்புகள் என்ன?
பட மூலாதாரம், ANI
நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், இந்திய குடியரசு துணைத் தலைவருக்கு இரட்டைப் பொறுப்புகளை வழங்குகிறது.
அவர் நிர்வாகத்தின் இரண்டாவது தலைவர் என்பது முதல் பொறுப்பாகவும், அவர் நாடாளுமன்றத்தின் மேல் சபையின் அதாவது ராஜ்யசபாவின் தலைவர் என்பது இரண்டாவது பொறுப்பாகவும் உள்ளது.
அரசியலமைப்பில், குடியரசு துணைத் தலைவருக்கு மாநிலங்களவைத் தலைவராக செயல்படும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, சில கூடுதல் பொறுப்புகளும் உள்ளன. குடியரசுத் தலைவர் பதவி ஏதேனும் காரணத்தால் காலியாகும் பட்சத்தில், அந்த பொறுப்பை குடியரசு துணைத் தலைவரே ஏற்க வேண்டும். ஏனெனில், நாட்டின் தலைவர் பதவியை காலியாக வைத்திருக்க முடியாது.
படிநிலையைப் பார்க்கும்போது, குடியரசு துணைத் தலைவர் பதவி குடியரசுத் தலைவருக்குக் கீழும், பிரதமருக்கு மேலேயும் அமைந்துள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலில் என்ன வேறுபாடு?
பட மூலாதாரம், Getty Images
அரசியலமைப்பின் 66வது பிரிவின்படி, இந்திய குடியரசு துணை தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தேர்தல் குழு உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளான லோக்சபா மற்றும் ராஜ்யசபாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த தேர்தல் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்,
ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.
நியமன (nominated) எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால், அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். இது இந்த தேர்தலின் ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
தேர்தல் எத்தனை நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
அரசியலமைப்பின் படி, குடியரசு துணைத்தலைவரின் தேர்தல், அரசியலமைப்பின் 63 முதல் 71 வரையிலான பிரிவுகள் மற்றும் குடியரசு துணைத்தலைவர் (தேர்தல்) விதிகள், 1974 இன் கீழ் நடைபெறுகிறது.
அரசியலமைப்பின் பிரிவு 68 இன் பிரிவு 2 இன் படி, குடியரசு துணைத்தலைவரின் மரணம், ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப, விரைவில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு உள்ளது.
குடியரசு துணைத்தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அல்லது அவர் ராஜினாமா செய்த, 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவது அவசியம். இதற்காக, தேர்தல் ஆணையம், ஒரு அவையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்கிறது.
தேர்தல் அதிகாரி, தேர்தல் தொடர்பாக ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டு, வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை கோருகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட, ஒரு வேட்பாளருக்கு 20 முன்மொழிபவர்களும், குறைந்தது 20 வழிமொழிபவர்களும் இருக்க வேண்டும்.
முன்மொழிபவரும் வழிமொழிபவரும், மாநிலங்களவை மற்றும் மக்களவையைச் சேர்ந்த உறுப்பினர்களாக மட்டுமே இருக்க முடியும். வேட்பாளர் ரூ.15,000 டெபாசிட் செய்ய வேண்டும்.
இதன் பிறகு, தேர்தல் அதிகாரி வேட்புமனுக்களை சரிபார்த்து, தகுதியான வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் சேர்க்கப்படுகின்றன.
குடியரசு துணைத் தலைவர் ஆவதற்கான தகுதி என்ன?
பட மூலாதாரம், X@CPRGuv
இந்திய துணைக் குடியரசுத் தலைவர், மக்களவை , மாநிலங்களவை அல்லது எந்த மாநிலத்தின் சட்டமன்ற அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியாது.
ஒரு நபர் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையிலோ அல்லது மாநில சட்டமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையிலோ உறுப்பினராக இருந்தால், அவர் குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த அவையில் உள்ள அவரது இருக்கை உடனடியாக காலியாகிவிடும்.
குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட, ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவருக்கு குறைந்தபட்சம் 35 வயது இருக்க வேண்டும். மேலும், மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளை அவர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்திலோ அல்லது எந்தவொரு மாநில அரசாங்கத்திலோ பணியாற்றும் நபர், குடியரசு துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்.
வாக்குப்பதிவு எந்த விதிகளின் அடிப்படையில் நடைபெறுகிறது?
பட மூலாதாரம், Getty Images
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் (proportional representation system) மூலம் நடத்தப்படுகிறது.
இதில், வாக்களிப்பு ஒரு சிறப்பு முறையில் நடைபெறுகிறது, இது ஒற்றை மாற்றத்தக்க வாக்கு முறை (Single Transferable Vote System) என்று அழைக்கப்படுகிறது.
இந்த முறையில், வாக்காளர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்க வேண்டும். ஆனால், அவர் தனது விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமையை தீர்மானிக்க வேண்டும்.
வாக்குச்சீட்டில் இருக்கும் வேட்பாளர்களில், அவர் தனது முதல் விருப்பத்திற்கு 1, இரண்டாவது விருப்பத்திற்கு 2 என முன்னுரிமை அளிக்கிறார்.
குடியரசு துணைத்தலைவரை பதவியில் இருந்து நீக்கும் முறை
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில், குடியரசு துணைத்தலைவர் பதவி நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியாகும்.
அவர் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தில் நீடிப்பார், ஆனால் பதவிக்காலம் முடிந்த பிறகும், புதிய துணைத் தலைவர் பதவியேற்கும் வரை அவர் பதவியில் நீடிக்கலாம்.
அரசியலமைப்பின் படி, குடியரசுத் தலைவரின் மரணம், ராஜினாமா அல்லது பதவி நீக்கம் அல்லது வேறு எந்த காரணத்திற்காகவும் குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் வரை, குடியரசுத் தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கும் வரை (எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி காலியான தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு) குடியரசு துணைத்தலைவரே குடியரசுத் தலைவராகச் செயல்படுவார்.
குடியரசுத் தலைவர் இல்லாதது, நோய்வாய்ப்பட்டது அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தனது கடமைகளைச் செய்ய முடியாதபோது, துணைத் தலைவர் இந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் சலுகைகளையும் துணைத் தலைவர் பெற்றுக்கொள்கிறார்.
அதேபோல், மாநிலங்களவையின் அப்போதைய பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, மக்களவையால் ஒப்புக் கொள்ளப்பட்ட மாநிலங்களவையின் தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரை பதவியிலிருந்து நீக்க முடியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு