சுமார் 20 ஆண்டுகளுக்குப் முன்னர் வழி தவறி சிவகங்கை மாவட்டத்திற்கு சென்ற அப்பாராவ், தற்போது தமது மகள் மற்றும் குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார். சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நெகிழ்வான தருணத்தில் அப்பாராவை அழைத்துச் செல்ல அவரது மகள், சாயம்மாள் மற்றும் மருமகன் தம்புதோரா சந்து ஆகியோர் வந்திருந்தனர். அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தவாறே கண்களில் கண்ணீர் மல்க தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார் அப்பாராவ்.
அப்பாராவின் தமிழ்நாட்டு வாழ்க்கை 20 ஆண்டுகள் பின்னிருந்து தொடங்குகிறது. 2003 ம் ஆண்டு வாக்கில் ஆந்திர மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு கட்டட வேலைக்காக ரயிலில் வந்த அப்பாராவ், ரயில் நிலையம் ஒன்றில் டீ குடிக்க இறங்கிய போது ரயிலை தவறவிட்டார். இதன் பின்னர் கிடைத்த ரயிலில் ஏறி சிவகங்கை வந்தடைந்த அவரை, காளையார்கோயிலைச் சேர்ந்த நபர் தமது ஊருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சுமார் 20 ஆண்டுகளாக சம்பளம் ஏதும் பெறாமல் உணவு, உடையை மட்டுமே பெற்று வேலை பார்த்து வந்த அப்பாராவை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அப்பாராவ் மற்றும் அவரை ஆடு மேய்க்கச் செய்த அண்ணாதுரை ஆகியோரிடம் பேசியதன் பேரில் 20 ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை என்பதை உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 ஆண்டுகளாக அப்பாராவை கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியதாக அண்ணாதுரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகி ஜாமினில் வெளிவந்திருக்கும் அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசிய போது அப்பாராவை தமது சொந்த மகனைப் போல நடத்தியதாகக் கூறினார்.