பட மூலாதாரம், Colin Domnauer
ஆண்டுதோறும், சீனாவின் யூனான் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஓர் அசாதாரணமான பிரச்னையுடன் வரும் நோயாளிகளின் வருகையை எதிர்கொள்வதற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்கிறார்கள். அந்த நோயாளிகள், ஒரு விசித்திரமான அறிகுறியுடன் வருகிறார்கள்.
கதவுகளுக்கு அடியில் அணிவகுத்துச் செல்வது, சுவர்களில் ஊர்ந்து செல்வது, நாற்காலிகளைப் பிடித்துத் தொங்குவது போன்றவற்றைச் செய்யும் குட்டி மனிதர்களை ஒத்த உருவங்களைப் பார்ப்பதாக அந்த நோயாளிகள் கூறுகின்றனர்.
அந்த மருத்துவமனை, ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற மாயத் தோற்ற அறிகுறியுடன் வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான பின்னணி உள்ளது. அதுதான், லான்மாவோவா ஏசியாட்டிகா (Lanmaoa asiatica) என்ற ஒரு வகை காளான்.
இந்த காளான் அருகிலுள்ள காடுகளில், பைன் மரங்களுடன் இணைந்து ஓம்புயிரி உறவுகொண்டு வளர்கின்றன. இவை அந்தப் பகுதியில் பிரபலமான ஓர் உணவுப் பொருளாகவும் உள்ளது. இதற்கு இருக்கும் சுவை காரணமாகப் பரவலாக அறியப்படுகிறது.
யூனானில், எல். ஏசியாட்டிகா காளான் சந்தைகளில் விற்கப்படுகிறது. இது உணவகங்களின் உணவுப் பட்டியலிலும் இடம்பெறுகிறது. காளான் பருவகாலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வீடுகளிலும் சமைக்கப்படுகிறது.
இருப்பினும், இதைச் சமைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இதைச் சாப்பிடுபவர் மாயத் தோற்றங்களைக் காண நேரிடும்.
“ஒரு காளான் ஹாட்பாட் உணவகத்தில், உணவு பரிமாறுபவர், 15 நிமிடங்களுக்கு டைமர் செட் செய்துவிட்டு, ‘அது முடியும் வரை காளான் உணவைச் சாப்பிட வேண்டாம்’ என்றும் ‘முன்னதாகச் சாப்பிட்டால் குட்டி மனிதர்களைப் பார்ப்பீர்கள்’ என்றும் எங்களை எச்சரித்தார். இது அங்குள்ள கலாசாரத்தில் மிகவும் பொதுவான ஒரு விஷயமாக தெரிகிறது” என்கிறார் எல். ஏசியாட்டிகா பற்றி ஆய்வு செய்து வரும் யூட்டா பல்கலைக் கழகம் மற்றும் யூட்டா இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் உயிரியல் துறை முனைவர் பட்ட மாணவரான காலின் டோம்னாவர்.
ஆனால், யூனான் மற்றும் வேறு சில இடங்கள் தவிர, இந்த விசித்திரமான காளான் பற்றிப் பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்கவில்லை.
“மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும் இந்த காளானின் இருப்பு பற்றிய பல தகவல்கள் இருந்தன. அதைப் பலர் தேடினார்கள். ஆனால், அவர்களால் இந்த இனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்கிறார் காளான் ஆராய்ச்சியாளரும் காளான்களைக் கண்டறிதல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற அமைப்பான பூஞ்சைகள் அமைப்பின் (Fungi Foundation) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான கியுலியானா ஃபர்சி.
இந்த காளான் இனத்தைப் பற்றிய பல தசாப்த கால மர்மங்களைத் தீர்க்கவும், அது ஏற்படுத்தும் அசாதாரணமான மாயத் தோற்றங்களுக்கு காரணமாக இருக்கும் அறியப்படாத சேர்மத்தைக் கண்டறியவும், அத்துடன் அது மனித மூளை தொடர்பாக நமக்கு என்ன கற்பிக்கக்கூடும் என்பதைக் கண்டறியவுமான தேடலில் காலின் டோம்னாவர் ஈடுபட்டுள்ளார்.
டோம்னாவர் முதன்முதலில் இளங்கலை மாணவராக இருந்தபோது தனது காளான் ஆராய்ச்சிப் பேராசிரியரிடம் இருந்து எல். ஏசியாட்டிகா பற்றி அறிந்துகொண்டார்.
“பல்வேறு கலாசாரங்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் பதிவாகியுள்ள கற்பனைக் கதையைப் போன்ற மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும் ஒரு காளான் இருக்கக்கூடும் என்பது மிகவும் விசித்திரமாக இருந்தது. இது பற்றி மேலதிகமாக அறிய வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது,” என்கிறார் டோம்னாவர்.
பட மூலாதாரம், Colin Domnauer
ஆராய்ச்சி இலக்கியங்கள், சில தடயங்களை வழங்கின. 1991ஆம் ஆண்டு ஓர் ஆய்வுக் கட்டுரையில், சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள், யூனான் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட காளானை உட்கொண்ட சில நபர்களின் அனுபவங்களை விவரித்துள்ளனர். அந்த நபர்கள், “லில்லிபுட்டியன்(குட்டி மனிதர்கள்) மாயத் தோற்றங்களை” பார்த்த அனுபவத்தை விவரித்திருந்தனர். இது, குட்டி மனிதர்கள், விலங்குகள் அல்லது கற்பனை உருவங்களைப் பார்ப்பதைக் குறிப்பதற்கான உளவியல் மருத்துவப் பதமாகும்.
‘கல்லிவரின் பயணங்கள்’ என்ற புனைவில் வரக்கூடிய கற்பனையான லில்லிபுட் தீவில் வசிக்கும் அளவில் மிகவும் குட்டியாக இருக்கும் மனிதர்களின் பெயரைக் கொண்டு இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அந்த நோயாளிகள் இந்த உருவங்கள் “எல்லா இடங்களிலும் அங்குமிங்கும் நகர்வதை” கண்டதாக ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். பொதுவாக, அந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட சிறிய உயிரினங்கள் இருந்தன. “அவர்கள் ஆடை அணியும்போது தங்கள் உடைகளிலும், சாப்பிடும்போது தங்கள் தட்டுகளிலும் அவற்றைக் கண்டனர். கண்களை மூடியிருந்தபோது இந்தத் தோற்றங்கள் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே 1960களில், சைலோசைபின் காளான்களின் இருப்பை மேற்கத்திய மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்த அமெரிக்க எழுத்தாளரான கார்டன் வாஸ்ஸன், பிரெஞ்சு தாவரவியலாளர் ரோஜர் ஹெய்ம் ஆகியோர் பப்புவா நியூ கினியாவில் இதேபோன்ற ஒன்றைக் கண்டனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்ற ஒரு மிஷனரி குழுவினர், உள்ளூர் மக்களை “பித்து” பிடிக்கச் செய்த ஒரு காளானை தேடிக் கொண்டிருந்தனர். அந்த நிலையை ஒரு மானுடவியல் ஆய்வாளர் “காளான் பித்து” என்று குறிப்பிட்டுள்ளார்.
வியக்கத்தக்க வகையில், சீனாவில் தற்போது காணப்படும் நிகழ்வுகளை ஒத்த ஒன்றாகவே அதுவும் இருந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் சந்தேகத்திற்குரிய அந்த காளான் இனத்தின் மாதிரிகளைச் சேகரித்து, சுவிஸ் வேதியியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மேனிடம் சோதனைக்காக அனுப்பினர்.
ஆனால், ஹாஃப்மேனால் இந்த மாயத் தோற்றங்களுக்குக் காரணமான குறிப்பிடத்தக்க எந்த மூலக்கூறுகளையும் அடையாளம் காண முடியவில்லை. தாங்கள் களத்தில் கேட்ட கதைகள் எந்த மருந்தியல் அடிப்படையையும் கொண்டிருக்காமல், கலாசார கதைகளாகவே இருந்திருக்க வேண்டுமென்று அந்தக் குழு முடிவு செய்தது. அதோடு, மேலதிக ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.
பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டில்தான் ஆராய்ச்சியாளர்கள் இறுதியாக, எல். ஏசியாட்டிகாவை முறையாக விவரித்துப் பெயரிட்டனர். அப்போதும் அதன் உளவியல் பண்புகள் பற்றிய அதிக விவரங்கள் இல்லாமலேயே இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
எனவே, இந்த வகை காளானின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிவதே டோம்னாவரின் முதல் இலக்காக இருந்தது. கடந்த 2023இல் கோடைக்கால காளான் பருவம் உச்சத்தில் இருந்தபோது அவர் யூனானுக்கு சென்றார். அந்த மாகாணத்தின் காளான் சந்தைகளை ஆய்வு செய்து, தங்கள் காளான்களில் எது “குட்டி மனிதர்களைப் பார்க்க வைக்கிறது” என்று வியாபாரிகளிடம் கேட்டார். சிரித்துக்கொண்டே வியாபாரிகள் சுட்டிக்காட்டிய காளான்களை அவர் வாங்கினார். பின்னர் அந்த மாதிரிகளை ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று அவற்றின் மரபணுக்களை வரிசைப்படுத்தினார்.
இது எல். ஏசியாட்டிகாவின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். அவர் வெளியிடத் தயார்படுத்தி வரும் ஓர் ஆராய்ச்சியில், ஆய்வக மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ரசாயனச் சாறுகள், மனிதர்களில் பதிவானதைப் போன்ற நடத்தை மாற்றங்களை எலிகளில் ஏற்படுத்தின. காளான் சாறுகள் செலுத்தப்பட்ட பிறகு, எலிகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அதிக சுறுசுறுப்புடன் இருந்தன. அதைத் தொடர்ந்து ஒரு நீண்ட மயக்க நிலைக்குச் சென்றன. அப்போது அவை அதிகம் நகரவில்லை.
டோம்னாவர் பிலிப்பைன்ஸுக்கும் சென்றார். அங்கு சீனா மற்றும் பப்புவா நியூ கினியாவின் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளதைப் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் காளான் பற்றிய வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தார். அவர் அங்கு சேகரித்த மாதிரிகள் சீனாவில் சேகரித்த மாதிரிகளில் இருந்து சற்றே வித்தியாசமாக இருந்தன.
பெரிய சிவப்பு நிற சீன காளான்களுடன் ஒப்பிடும்போது, இவை சிறிதாகவும் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருந்ததாக அவர் கூறுகிறார். அனால், அவரது மரபணுப் பரிசோதனை அவை உண்மையில் ஒரே இனம் என்பதை வெளிப்படுத்தியது.
டிசம்பர் 2025இல், டோம்னாவரின் மேற்பார்வையாளரும் வாஸ்ஸன் மற்றும் ஹெய்ம் பதிவுகளில் உள்ள காளான்களைத் தேடி பப்புவா நியூ கினியாவுக்கு சென்றார். அதன் அடையாளம் “இன்னும் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது” என்று டோம்னாவர் கூறுகிறார். அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அது குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது.
“இது அதே இனமாக இருந்தால் ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில், பப்புவா நியூ கினியாவில் பொதுவாக, சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் காணப்படும் காளான் இனங்கள் காணப்படவில்லை,” என்று கூறிய டோம்னாவர், “ஒருவேளை இது வேறு இனமாகக்கூட இருக்கலாம். இது பரிணாமக் கண்ணோட்டத்தில் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.
இதன் பொருள், உலகின் முற்றிலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு காளான் இனங்களில் அதேபோல குட்டி மனிதர்களின் மாயத் தோற்றங்களைக் காட்டும் விளைவுகள் சுயாதீனமாகப் பரிணமித்து இருக்கலாம் என்பதாகும்.
இயற்கையில் இத்தகைய விஷயங்கள் முன்னமே நடந்துள்ளதாகப் பதிவுகள் உள்ளன. டோம்னாவருடன் அதே ஆய்வகத்தில் பணியாற்றும் சில விஞ்ஞானிகள் உள்பட, அறிவியலாளர்கள் சமீபத்தில், மாயக் காளான்களில் காணப்படும் ஓர் உளவியல் மயக்க மூலக்கூறான சைலோசைபின், தொலைதூரத் தொடர்புடைய இரண்டு வகையான காளான்களில் சுயாதீனமாகப் பரிணமித்துளதைக் கண்டறிந்தனர்.
ஆனால், எல். ஏசியாட்டிகா காளான்கள், குட்டி மனிதர்களைக் காட்டும் விளைவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருப்பது சைலோசைபின் மூலக்கூறு இல்லை என்கிறார் டோம்னாவர்.
பட மூலாதாரம், Colin Domnauer
எல். ஏசியாட்டிகா காளான்களில், அதை உட்கொள்பவர்களுக்கு மாயத் தோற்றங்களைப் பார்க்க வித்திடுவது எத்தகைய ரசாயன சேர்மம் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் டோம்னாவர் மற்றும் அவரது குழுவினர் இன்னமும் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய பரிசோதனைகளின்படி, இது அறியப்பட்ட வேறு எந்த உளவியல் மயக்கமூட்டும் சேர்மத்துடனும் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
முதலாவதாக, இது ஏற்படுத்தும் மாயத் தோற்ற அனுபவங்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் நீடிக்கின்றன. பொதுவாக 12 முதல் 24 மணிநேரம் வரை நீடிக்கும் இவை, சில நேரங்களில் ஒரு வாரம் வரை நீடித்து நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நிலையையும்கூட ஏற்படுத்துகின்றன.
இந்த மாயத்தோற்ற அனுபவங்களின் அசாதாரணமான நீண்ட கால அளவு மற்றும் மனப்பிரமை, தலைச்சுற்றல் போன்ற நீடித்த பக்க விளைவுகளுக்கான வாய்ப்பு காரணமாக, டோம்னாவர் இன்னும் அந்தக் காளான்களை தானே உட்கொண்டு முயன்று பார்க்காமல் தவிர்த்து வருகிறார்.
இந்தப் பெரியளவிலான மாயத்தோற்ற அனுபவங்கள், சீனா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் எல். ஏசியாட்டிகாவை அதன் உளவியல் மயக்க விளைவுகளுக்காக வேண்டுமென்றே தேடிப் பயன்படுத்தும் ஒரு மரபைக் கொண்டிருக்காததற்கான காரணத்தை விளக்கக்கூடும் என்று டோம்னாவரின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. “இது எப்போதும் உணவுக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது” என்று கூறும் அவர், இந்த மாயத் தோற்றங்கள் எதிர்பாராத பக்க விளைவாகவே இருந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதில் இன்னொரு விசித்திரமான காரணியும் உள்ளது. இதுவரை அறியப்பட்ட பிற மனமயக்கமூட்டும் சேர்மங்கள்கூட பொதுவாகத் தனிப்பட்ட வகையில் நபருக்கு நபர் மாறுபட்ட மாயத் தோற்றங்களையே ஏற்படுத்தின. மேலும் ஒரே நபருக்கு உள்ளேயே வெவ்வேறு அனுபவங்களில் வெவ்வேறு மாயத் தோற்றங்களை உருவாக்குகின்றன.
ஆனால், எல். ஏசியாட்டிகாவை பொறுத்தவரை, “குட்டி மனிதர்களைப் பற்றிய பார்வை மிகவும் நம்பகத்தன்மையுடன், மீண்டும் மீண்டும் பதிவாகியுள்ளது. இவ்வளவு சீரான மாயத் தோற்றங்களை உருவாக்கும் வேறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,” என்கிறார் டோம்னாவர்.
பட மூலாதாரம், Colin Domnauer
இந்த காளானை புரிந்துகொள்வது எளிதான காரியமாக இருக்காது என்கிறார் அவர். ஆனால், பிற மனமயக்கமூட்டும் சேர்மங்களைப் பற்றிய ஆய்வுகளைப் போலவே, இதன் மீதான அறிவியல் ஆராய்ச்சியும், உணர்வுநிலை, மனம், எதார்த்தம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு போன்ற மிகப்பெரிய கேள்விகளைத் தொடும் வகையில் அமையக்கூடும்.
மக்கள் எல். ஏசியாட்டிகாவை உட்கொள்ளாதபோது, அவர்களுக்குத் தானாகவே ஏற்படும் குட்டி மனிதர்களின் மாயத் தோற்றங்களின் பின்னணியில் உள்ள காரணம் பற்றிய முக்கியமான தடயங்களைக்கூட இது வழங்கக்கூடும்.
ஏனெனில், இந்த நிலைமை அரிதானது. 1909இல் குட்டி உருவங்களின் மாயத் தோற்றங்கள் முதன்முதலில் விவரிக்கப்பட்டதில் இருந்து, 2021ஆம் ஆண்டு வரையிலான நிலவரப்படி, காளான்களுடன் தொடர்பில்லாத இத்தகைய 226 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
ஆனால், ஒப்பீட்டளவில் சிலருக்கு இதன் விளைவு தீவிரமான ஒன்றாக இருக்கலாம். காளான்களுடன் தொடர்பில்லாத பாதிப்புகளுக்கு உள்ளான நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முழுமையாக குணமடையவில்லை.
எல். ஏசியாட்டிகாவை பற்றி ஆய்வு செய்வது, இந்த இயற்கையாக நிகழும் குட்டி மனித மாயக் காட்சிகளுக்குப் பின்னாலுள்ள மூளையின் செயல்முறைகளை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவும். அதோடு, இந்த நரம்பியல் நிலையால் பாதிக்கப்பட்டோருக்குப் புதிய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் இது வித்திடும் என்று டோம்னாவர் கூறுகிறார்.

“இதன் மூலமாக மூளையின் எந்தப் பகுதியில் (குட்டி உருவ மாயத் தோற்றங்கள்) உருவாகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்,” என்கிறார் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாப நோக்கமற்ற கல்வி மையமான மெக்கென்னா அகாடமி ஆஃப் நேச்சுரல் ஃபிலாசஃபியின் இயக்குநரும் இன மருந்தியல் நிபுணருமான டென்னிஸ் மெக்கென்னா.
காளானின் சேர்மங்களைப் புரிந்துகொள்வது புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புக்கு வித்திடும் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். அதோடு, “இதில் ஏதேனும் சிகிச்சை பயன்பாடு உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றும் மெக்கென்னா குறிப்பிட்டார்.
உலகின் பூஞ்சை இனங்களில் 5%க்கும் குறைவானவையே இதுவரை விவரிக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சியாளகள் மதிப்பிடுகின்றனர். எனவே இந்தக் கண்டுபிடிப்புகள், உலகின் வேகமாகச் சுருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் அமைப்புகளில் கண்டுபிடிப்புகளுக்கான “மகத்தான சாத்தியக்கூறுகளை” எடுத்துக் காட்டுவதாக பூஞ்சை உலகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் ஃபர்சி கூறுகிறார்.
மேலும் அவர், “பூஞ்சைகளில் மிகவும் பரந்த உயிர்வேதியியல் மற்றும் மருந்தியல் நூலகம் உள்ளது. அதை நாம் இப்போதுதான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். இன்னும் அதில், கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒரு புதிய உலகமே இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு