• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

குட் பேட் அக்லி | திரைவிமர்சனம்

Byadmin

Apr 13, 2025


தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

நடிகர்கள் : அஜித்குமார், திரிஷா, சிம்ரன், ஜேக்கி ஷெரஃப் , சுனில்,  அர்ஜுன் தாஸ், யோகி பாபு மற்றும் பலர்.

இயக்கம் : ஆதிக் ரவிச்சந்திரன்

மதிப்பீடு : 2.5 / 5

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அஜித் குமாரின் ‘விடா முயற்சி’ திரைப்படம் – வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அஜித் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

இந்தத் தருணத்தில் அவர்களுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’. இந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அஜித் குமார் ஏ கே எனும் ரெட் டிராகன் கதாபாத்திரத்தில் நிழல் உலக காரியங்களில் ஈடுபடுகிறார். அவருடைய மனைவி ரம்யா ( திரிஷா) குழந்தை பிறக்கும் தருணத்தில் அஜித்திடம் , ‘நீங்கள் குழந்தையை தொடக்கூடாது. பார்க்க கூடாது. எப்போது உங்கள் மீதுள்ள வழக்குகளுக்காக தண்டனை பெற்று குற்றமற்றவராக இருக்கிறீர்களோ .அதன் பிறகு குழந்தையை சந்திக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்.

மனைவியின் பேச்சை கேட்கும் ஏ கே தன்னுடைய நிழல் உலக நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துகிறார். அத்துடன் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் உன்னை சந்திக்க வருவேன் என்று குழந்தையிடம் வாக்குறுதி அளித்துவிட்டு சிறைக்கு செல்கிறார்.

அப்பா எப்போது வருவார்? என்று அவருடைய பிள்ளை காத்திருக்க 17 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளிவரும் முன், அவருடைய மகன் மீது போதை பொருளை கடத்தியதாகவும், போதை பொருளை பாவனை செய்ததாகவும் குற்றம் சுமத்தி ஒரு கும்பல் அஜித்தின் மகனை சிறைக்குள் தள்ளுகிறது.

இதனை கேள்விப்படும் சிறையில் இருக்கும் அஜித் – முன்னதாக விடுதலையாகி, தன் மகனை சிறைக்கு அனுப்பியது யார்?  என்று விசாரிக்கிறார். அவர்கள் பழைய பகையாளிகள் என தெரிந்ததும் அவர்களை எப்படி அடக்கி தன் குடும்பத்துடன் ஒன்றிணைகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

ரெட் டிராகன் வேடத்தில் அஜித் குமார் அலட்டிக்கொள்ளாமல் அதகளம் செய்கிறார். அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் கரவொலி விண்ணைப் பிளக்கிறது. அவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் இடம் பிடித்திருக்கும் வசனங்களை பேசும் போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமடைகிறார்கள்.

குடும்பத்தின் மீது பேரன்பு கொண்ட குடும்பத் தலைவன் ஒருவன் – குடும்ப ஒற்றுமைக்காக எந்த எல்லைக்கும் செல்வான் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தை அஜித் குமார் நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார்.

ரம்யா எனும் கதாபாத்திரத்தில் அஜித் குமாரின் மனைவியாக நடித்திருக்கும் திரிஷா – வழக்கம்போல் இளமைக் குன்றாமல் பேரழகுடன் திரையில் தோன்றி நன்றாக நடித்திருக்கிறார்.

இவர்களைக் கடந்து இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் தனித்துவமாக தோன்றி ரசிகர்களை கவர்கிறார். மேலும் ஏராளமான திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களின் திறமை வீணடிக்கப்பட்டிருக்கிறது என சொல்லலாம்.

படத்தில் அதிரடி சண்டை காட்சிகள்-  சாகச அனுபவத்தை வழங்கும் துரத்தல் காட்சிகள்-  ரசிகர்களை இருக்கைகளில் கட்டி போடுகிறது. இதற்கு வசதியாக ஒளிப்பதிவும் ,பின்னணி இசையும் இணைந்து, ரசிகர்களுக்கு உற்சாகத்தை அள்ளித் தருகிறது.

கதையை அழுத்தமாக எழுதாமல் காட்சிகளுக்காக மட்டுமே உழைத்திருக்கிறார் இயக்குநர் . பக்கா மாஸ் என்டர்டெய்னர் என்பதால் ‘நோ லாஜிக் ஒன்லி மேஜிக் ‘என்ற பாணியை இயக்குநர் பின்பற்றி இருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமே இப்படத்தை கொண்டாடலாம்.

குட் பேட் அக்லி – தாட் பூட் அஜித்.

The post குட் பேட் அக்லி | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.

By admin