பட மூலாதாரம், Getty Images
“இந்த தீவு மூழ்கினால், நானும் அதனுடன் மூழ்கி விடுவேன்,” என்று புன்னகைத்துக்கொண்டே கூறுகிறார் டெல்ஃபினோ டேவிஸ்.
பனாமாவில் உள்ள தனது குனா சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் சிறிய அருங்காட்சியகத்தை டேவிஸ் நிர்வகிக்கிறார்.
அருங்காட்சியகத்தின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் துடைப்பத்தின் ஓசை கேட்கும் அளவுக்கு அங்கு அமைதி நிலவுகிறது.
“முன்பு, குழந்தைகள் கூச்சலிடுவதையும், எங்கும் இசை ஒலிப்பதையும், பக்கத்து வீட்டுக்காரர்கள் வாக்குவாதம் செய்வதையும் நீங்கள் கேட்கலாம். ஆனால் இப்போது அந்த சத்தங்கள் எல்லாம் மறைந்துவிட்டன ” என்கிறார் டேவிஸ்.
சிறிய, தாழ்வான பகுதியிலுள்ள கார்டி சுக்துப் தீவில் வசிக்கும் அவரது சமூகம், காலநிலை மாற்றத்தின் காரணமாக பனாமாவில் இருந்து இடம்பெயரும் முதல் சமூகமாகும்.
கடல் மட்டம் உயர்வதால், 2050 ஆம் ஆண்டுக்குள், இந்தத் தீவு வாழத் தகுதியற்றதாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், “உடனடி ஆபத்தை” எதிர்கொள்வதாக அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பெரும்பாலான மக்கள், தங்களின் சிறிய, மரத்தால் மற்றும் தகரத்தால் செய்யப்பட்ட நெரிசலான வீடுகளை விட்டுவிட்டு, அப்பகுதியின் பிரதான நிலப்பரப்பில் நேர்த்தியாக கட்டப்பட்ட வீடுகளுக்குக் குடிபெயர்ந்தனர்.
பூட்டியே கிடக்கும் வீடுகள்
அந்த தீவில் வாழ்ந்த மக்களின் கலாசாரம் மற்றும் அடையாளத்தை முற்றிலும் புதிய உள்நாட்டு சூழலுக்கு கொண்டு செல்வதை உள்ளடக்கியதுதான் அவர்களது இடமாற்றம்.
உலகெங்கிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சமூகங்களுக்கு இந்த இடமாற்றம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என சிலர் பாராட்டினார்கள். ஆனாலும், இந்த இடமாற்றம் குனா சமூகத்தைப் பிளவுபடுத்தியுள்ளது.
“எனது தந்தை, சகோதரர், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் வெளியேறிவிட்டனர்,” என்கிறார் டெல்ஃபினோ.
சில சமயங்களில் அங்கு தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் நண்பர்களை நினைத்து, அவர்கள் எங்கே போனார்கள் என அழுவார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சுமார் 1,000 பேர் வெளியேறியதாலும், 100 பேர் மட்டுமே தங்கியிருப்பதாலும் பல வீடுகள் பூட்டியே கிடக்கின்றன.
புதிய குடியேற்றத்தில் போதுமான இடம் இல்லாததால் இந்தத் தீவிலேயே சிலர் தங்கியிருந்தனர்.
மறுபுறம், டெல்ஃபினோவைப் போன்ற மற்றவர்கள், காலநிலை மாற்றம் ஒரு அச்சுறுத்தல் என்பதை முழுமையாக நம்பவில்லை அல்லது இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை.
தொடர்ந்து மீன்பிடிக்க முடியும் என்பதால் டெல்ஃபினோ கடலுக்கு அருகில் தங்க விரும்புகிறார். “தங்கள் பாரம்பரியத்தை இழக்கும் மக்கள் தங்கள் ஆன்மாவை இழக்கிறார்கள். எங்கள் கலாசாரத்தின் சாராம்சம் இந்த தீவுகளில் உள்ளது,” என்கிறார் டெல்ஃபினோ.
மூழ்கும் தீவுகள்
குனா இன மக்கள் 19-ஆம் நூற்றாண்டிலிருந்து கார்டி சுக்துப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பனாமாவின் வடக்கு கடற்கரையில் காணப்படும் மற்ற தீவுகளிலும் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் முதலில் ஸ்பானிய படை வீரர்களிடமிருந்தும், பிற பூர்வீக குழுக்களுடனான நோய்கள் மற்றும் மோதல்களிலிருந்தும் தப்பிக்க பிரதான நிலப்பகுதியிலிருந்து நகர்ந்தனர் என அறியப்படுகின்றது.
வண்ணமயமான வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட “மோலாஸ்” என்று அழைக்கப்படும் ஆடைகளுக்குப் பெயர் பெற்றவர்கள் குனா இன மக்கள்.
குனா மக்கள் தற்போது 40க்கும் மேற்பட்ட தீவுகளில் வாழ்கின்றனர். பனாமாவில் உள்ள ஸ்மித்சோனியன் டிராபிகல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீவ் பாட்டன், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்த தீவுகளில் பெரும்பாலான தீவுகள் நீரில் மூழ்கி விடும் என்பது “கிட்டத்தட்ட உறுதி” என்கிறார்.
மேலும், பனாமா முழுவதும் 60க்கும் மேற்பட்ட கடலோர சமூகங்கள் 2050ம் ஆண்டுக்குள், கடல் மட்டம் உயரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
காலநிலை மாற்றம் பூமியை வெப்பமாக்குகிறது. இதன் விளைவாக, பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயர்கிறது.
மேலும், கடல் நீர் வெப்பமடையும்போதும் கடல் மட்டம் உயர்கிறது.
அதன் விளைவாக, உலகின் கடலோரப் பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
கார்டி சுக்துப்பில், மழைக்காலத்தில் எழும் கடல் அலைகள் வீடுகளுக்குள் புகுந்து, அங்கு வசிக்கும் மக்கள் உறங்கும் ஹமோக்கின் (கம்பிகள் அல்லது மரங்களுக்கு நடுவே கட்டப்படும் ஊஞ்சல் போன்றது) அடிப் பகுதி வரை வந்துவிடும்.
“தற்போதைய கடல் மட்ட உயர்வு மற்றும் முன்கூட்டியே கணக்கிடப்பட்ட கடல் மட்ட உயர்வு விகிதங்களின் அடிப்படையில், 2050 ஆம் ஆண்டுக்குள், இந்த தீவு வாழத் தகுதியற்றதாக மாறிவிடும்” என பாட்டன் கூறுகிறார்.
ஆனாலும், அங்கு வாழும் மக்களை இடமாற்றம் செய்வது தொடர்பான ஆரம்பகால விவாதங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள்தொகை வளர்ச்சியால் தொடங்கியது, காலநிலை மாற்றத்தால் அல்ல.
ஏனென்றால், இந்த தீவு வெறும் 400 மீ நீளமும் 150 மீ அகலமும் மட்டுமே கொண்டது.
அங்கு வாழும் மக்கள் அதிக கூட்ட நெரிசலை மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கிறார்கள்.
ஆனால், மாக்டலேனா மார்டினெஸ் போன்ற மற்றவர்கள், கடல் மட்டம் உயருவதைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்.
“ஒவ்வொரு ஆண்டும், அலைகள் உயர்ந்துகொண்டே இருப்பதை நாங்கள் காண்கிறோம்” என்கிறார் மாக்டலேனா மார்டினெஸ்.
மேலும், “எப்போதும் வெள்ளத்தில் மூழ்கிவிடுவதால், எங்கள் அடுப்பில் எங்களால் சமைக்க முடிவதில்லை. அதனால் ‘நாங்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்’, என்று கூறினோம்” என விளக்குகிறார். மாக்டலேனா.
கடந்த ஜூன் மாதம் மோட்டார் படகுகள் மற்றும் மரப் படகுகளில் ஏறி, புதிய வீடுகளுக்குச் சென்றவர்களில் மாக்டலேனாவும் ஒருவர்.
“நான் என் ஆடைகள் மற்றும் சில சமையல் பாத்திரங்களை மட்டுமே கொண்டு வந்தேன்,” என்கிறார் மாக்டலேனா
மேலும் “உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை தீவில் விட்டு செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது”
மக்களின் வேதனை
கடலில் பயணம் செய்ய ஏதுவான வானிலை இருக்கும்போது, 15 நிமிட படகு சவாரியிலும் அதைத் தொடர்ந்து ஐந்து நிமிட பயணத்திலும், கார்டி சுக்துப்புக்கு அருகில் உள்ள இஸ்பெரியாலா எனும் புதிய குடியிருப்பு பகுதியை அடைய முடியும். ஆனால், அது முற்றிலும் வேறொரு உலகம் போல் உள்ளது.
அங்குள்ள தார் சாலைகளில், ஒரே மாதிரியான வெள்ளை மற்றும் மஞ்சள் வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன.
மாக்டலேனா தனது 14 வயது பேத்தி பியான்கா மற்றும் பியான்காவின் நாயுடன் வசிக்கும் “சிறிய வீட்டை” காட்டும்போது, அவரது கண்கள் ஒளிர்கின்றன.
புதிய குடியிருப்பில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சிறிய கொல்லைப்புறம் உள்ளது, இப்படியான நிலம் இருப்பது, பழைய தீவுடன் ஒப்பிடும்போது ஆடம்பரமாகக் கருதப்படுகிறது.
“நான் தக்காளி, வாழைப்பழங்கள், மாம்பழங்கள் மற்றும் அன்னாசிப்பழங்களை நட விரும்புகிறேன்,” என்று உற்சாகமாக கூறுகிறார் மக்தலேனா.
ஆனால், “இவ்வளவு காலமாக இருந்த இடத்தை விட்டு வெளியேறுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்கள் நண்பர்களையும், நீங்கள் வாழ்ந்த தெருக்களையும், கடலுக்கு மிக அருகில் இருப்பதையும் நீங்கள் இழக்கிறீர்கள்,” என்று வருத்தம் தெரிவிக்கிறார் மாக்டலேனா.
பனாமா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 15 மில்லியன் டாலர் மற்றும் இண்டர்-அமெரிக்கன் டெவலப்மென்ட் வங்கியின் கூடுதல் நிதியுதவியுடன் இஸ்பெரியாலா கட்டப்பட்டது.
பாரம்பரிய பாணியில் கிளைகள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கூரையுடன் கூடிய, புதிய ‘சந்திப்பு இல்லத்தில்’, சமூகத்தின் தலைவர் டிட்டோ லோபஸ் காத்திருக்கிறார்.
“எனது அடையாளமும் எனது கலாசாரமும் மாறப்போவதில்லை, வீடுகள்தான் மாறிவிட்டன” என்று டிட்டோ லோபஸ் கூறுகிறார்.
ஹமோக் குனா கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வரை, “குனா மக்களின் இதயம் உயிருடன் இருக்கும்” என்று அவர் ஒரு ஹமோக்கில் படுத்தபடியே விளக்குகிறார்.
குனா இனத்தைச் சேர்ந்த ஒரு நபர் இறந்துவிட்டால், அவரது உடல் ஒரு நாள் ஹமோக்கில் வைக்கப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் அருகில் புதைக்கப்படுகிறது.
மூடப்பட்ட பள்ளி
அங்கு குடியிருப்பவர்கள் சிலர் தங்களது புதிய வீடுகளில் ஹமோக்குகளை அமைத்துள்ளனர். இதற்கிடையில், ஒரு நவீன பள்ளியில், 12 மற்றும் 13 வயது மாணவர்கள் பாரம்பரிய குனா இசை மற்றும் நடனங்களை பயிற்சி செய்கின்றனர். பளிச்சென்ற சட்டை அணிந்த சிறுவர்கள் பான் பைப்புகளை விளையாடுகிறார்கள், அதே சமயம் மோலாஸ் அணிந்த பெண்கள் மராக்காஸ் எனப்படும் இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்.
கடல் அலைகள் மற்றும் கூட்ட நெரிசல் அந்த தீவில் பள்ளி நடத்துவதை கடினமாக்கியது.
“தீவின் பல்வேறு மூலைகளிலும், எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் வகுப்பறைகளை உருவாக்கினோம்.” என பள்ளியின் இயக்குனர் பிரான்சிஸ்கோ கோன்சாலஸ் தெரிவித்தார்.
அந்த தீவில் உள்ள பள்ளி இப்போது மூடப்பட்டுள்ளது, மேலும் தீவில் தங்கியிருக்கும் மாணவர்கள் தினமும் இஸ்பெரியாலாவில் உள்ள புதிய பள்ளி கட்டடத்துக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு கணினிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகம் போன்ற வசதிகள் உள்ளன.
தீவை விட இஸ்பெரியாலாவின் வசதிகள் சிறப்பாக இருப்பதாக மாக்டலேனா குறிப்பிடுகிறார். தீவில், அவர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெற்றதாகவும், நிலப்பரப்பில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து படகு மூலம் குடிநீர் எடுக்க வேண்டியிருந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
இஸ்பெரியாலாவில், மின் விநியோகம் சீராக உள்ளது, ஆனால் அருகிலுள்ள கிணறுகளில் இருந்து பம்ப் மூலம் எடுக்கப்படும் தண்ணீர், ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் நீர் வழங்கும் அமைப்பு சில நேரங்களில் பழுதடைந்துவிடுகிறது.
மேலும், அங்கு இதுவரை மருத்துவ வசதி செய்யப்படவில்லை. அங்கு குடியிருக்கும் யானிசெலா வல்லரினோ என்பவர், ஒரு நாள் மாலையில் தனது இளம் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மருத்துவரைப் பார்க்க இரவில் தாமதமாக தீவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது என்றும் கூறுகிறார்.
இஸ்பெரியாலாவில் ஒரு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிதி பற்றாக்குறையால் பத்தாண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது என பனாமா அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த ஆண்டு மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இன்னும் அந்த தீவில் வசிக்கும் மக்கள் புதிய இடத்துக்கு செல்வதற்கான இடத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கண்டுபிடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
‘யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்’
யானிசெலா இப்போது புதிய பள்ளியில் மாலை வகுப்புகளில் கலந்து கொள்ள முடிவதால் மகிழ்ச்சி அடைகிறார், ஆனாலும் அடிக்கடி தீவுக்குத் திரும்புகிறார்.
இஸ்பெரியாலாவில் தண்ணீர் கிடைக்காதபோது துணி துவைக்கவும், தீவில் தங்கியிருக்கும் தன் தாய் மற்றும் சகோதரர்களுடன் நேரத்தை செலவிடவும் அவர் திரும்பிச் செல்கிறார்.
“எனக்கு இன்னும் இது பழகவில்லை. அதுமட்டுமல்ல நான் எனது வீட்டை நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் யானிசெலா.
கார்டி சுக்டுப்பில் வசிப்பவர்கள் தங்கள் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதன் மூலம் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் “உத்வேகம்” பெறும் என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பின் காலநிலை இடப்பெயர்வு குறித்த ஆராய்ச்சியாளர் எரிகா போவர்.
இடப்பெயர்வு தொடர்பான “வெற்றி எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆரம்ப நிகழ்வுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் அனைவரும் நாம் வாழ்ந்த இடங்களையும் மக்களையும் விரும்புகிறோம்”
”சிங்கப்பூரில் உள்ள ஒருவர், மியாமியில் உள்ள ஒருவர், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒருவர், ரஷ்யாவில் உள்ள ஒருவர் இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இது யாருக்கும் நிகழலாம். காலநிலை மாற்றம், இடங்களோடு உள்ள உங்கள் உறவுகளை மாற்றும்.” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
மதிய வேளையில், கால்பந்து, கூடைப்பந்து மற்றும் கைப்பந்து ஆகியவற்றின் கூச்சல் மற்றும் கைக்கலப்புகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் பள்ளியில் நடைபெறுகின்றன.
“நாங்கள் விளையாடுவதற்கு அதிக இடம் இருப்பதால், தீவை விட இந்த இடத்தை நான் விரும்புகிறேன்,” என்று எட்டு வயது ஜெர்சன் கால்பந்து விளையாடுவதற்கு முன் கூறிச்செல்கிறார்.
மறுபுறம், மாக்டலேனா தனது பேத்தியுடன் அமர்ந்து, அவருக்கு மோலாஸ் தைக்க கற்றுக்கொடுக்கிறார்.
“அவருக்கு கடினமாக இருக்கிறது, ஆனால் அவர் கற்றுக்கொள்ளப் போகிறார் என்று எனக்குத் தெரியும். எங்கள் தனித்துவத்தின் இழக்க முடியாது,” என்கிறார் மாக்டலேனா.
தீவு குறித்து நீங்கள் இழப்பது என்ன என்று கேட்டதற்கு, “நாங்கள் அனைவரும் இங்கே ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் ” என்று பதிலளித்தார் மாக்டலேனா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு