நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்துள்ளதால் எந்நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது.
நேற்று முன்தினத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு விடிய விடிய பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்து கன மழை வெளுத்து வாங்கியது. மழையின்போது சூறைக்காற்று வீசியதால் குலசேகரம், அருமனை, நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தென்னை சார்ந்த தொழில், செங்கல் சூளை, உப்பள தொழில் என அனைத்து தரப்பட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டன. வேம்பனூர் உட்பட பல இடங்களில் இறுதிகட்ட நெல் அறுவடைப் பணி பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 87 மிமீ மழை பெய்தது.
பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு-1 அணைப்பகுதியில் தலா 72 மிமீ, பெருஞ்சாணியில் 69, புத்தன்அணையில் 68, திற்பரப்பில் 58, கொட்டாரத்தில் 49, சிவலோகம் மற்றும் சுருளோட்டில் தலா 45, கோழிப்போர்விளையில் 44, மயிலாடி, களியல் மற்றும் நாகர்கோவிலில் தலா 40, குருந்தன்கோட்டில் 38 மிமீ மழை பெய்தது.
இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 1,286 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 492 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1,597 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. பிற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42 அடியை நேற்று தாண்டியது. மழையினால் 46 அடியை அடைந்தால், அதற்கு மேல் வரும் உபரிநீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, இரயுமன்துறை வழியாக தேங்காப்பட்டினம் கடலை சென்றடையும். எனவே, தாமிரபரணி மற்றும் கோதையாற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு, குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.