கும்கி 2 – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : பென் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் பெராடி, ஆகாஷ், ஸ்ரீநாத் மற்றும் பலர்.
இயக்கம் : பிரபு சாலமன்
மதிப்பீடு : 2/ 5
2012 ஆம் ஆண்டில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கும்கி’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி இருக்கும் இந்த ‘கும்கி 2’ திரைப்படம் நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக சற்று தாமதமாக வெளியானது. இப்படத்தின் முதல் பாகத்தில் ஏற்படுத்திய மேஜிக் .. இரண்டாம் பாகத்திலும் நிகழ்ந்ததா ?இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மலை கிராமம் ஒன்றில் சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்டு ஒழுக்கம் இல்லாத பெற்றோர்களுக்கு ஒரே வாரிசாக இருக்கிறார் பூமி ( மதி) . தாய் அன்பு முழுமையாக கிடைக்காத இந்த பூமிக்கு பாடசாலையிலும் சக மாணவர்களின் சிநேகம் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்.
இதனால் தாழ்வு மனப்பான்மையில் விரக்தியுடன் தனிமையில் தவிக்கும் பூமியை அவருடைய ஆசிரியர் இயற்கையை நேசி.. மரங்களை நேசி.. ஆர்ப்பரித்து செல்லும் அருவியை நேசி.. விலங்குகளை நேசி.. என அவருடைய அன்பு பகிர்தலுக்களுக்கான மடை மாற்றத்தை விதைக்கிறார்.
இந்தத் தருணத்தில் குட்டியானை ஒன்று வழி தவறி பள்ளம் ஒன்றில் சிக்குகிறது. அதை கவனிக்கும் பூமி அந்த யானையை பள்ளத்திலிருந்து மீட்கிறார் இதனால் யானைக்கும் சிறுவன் பூமிக்கும் இடையே இனம் புரியாத பாசமும், ஆழமான நட்பும் உண்டாகிறது. அதற்கு நிலா என பெயரிட்டு, அதிகம் அறியப்படாத வனப் பகுதியின் ஓரிடத்தில் வைத்து வளர்த்து வருகிறான். பாடசாலை நேரத்தை தவிர மீதமுள்ள அனைத்து நேரத்திலும் யானையுடன் பூமி பழகுகிறான்.
ஒரு நாள் தன்னுடைய பிரியத்திற்குரிய நிலாவை சந்திப்பதற்காக வழக்கமான இடத்திற்கு வந்தபோது அங்கு யானை இல்லாததை கண்டு அதிர்கிறான். அதை தேடி அலைகிறான். இதனால் தன் நிலை மறக்கிறான். அவனது தேடுதலின் தீவிரத்தை ஒரு புள்ளியில் பார்க்கும் ஆசிரியர்.. உண்மையான நேசம் இருந்தால்.. நட்பு இருந்தால்.. உன் நிலா உன்னை தேடி வரும் என நம்பிக்கை கூறி, உயர்கல்வி கற்பதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.
இதனால் யானையை தேடும் பணியை தொடர்ந்தாலும் தன் கல்வியையும் தொடர்கிறான் பூமி. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தன் நிலாவை பற்றி ஒரு தகவல் கிடைக்கிறது. அதை உறுதியாக பற்றிக்கொண்டு யானையை தேட தொடங்குகிறார் பூமி. அவனுக்கு யானை கிடைத்ததா? இல்லையா? யானை காணாமல் போனதன் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதியில் சிறுவன் பூமிக்கும் குட்டியானை நிலாவிற்கும் இடையேயான உறவை விவரிப்பதில் அதீத கவனம் காட்டிய இயக்குநர் பூமியின் பெற்றோர்கள் குறித்த கதாபாத்திர வடிவமைப்பில் பார்வையாளர்களுக்கு நெருடல் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். யானைக்கும் இளைஞருக்கும் இடையேயான நட்பு மட்டுமே மையப் புள்ளி என்பதால்.. திரைக்கதை ஓர் எல்லைக்கு மேல் பயணிக்காமல் வனத்திலேயே முடங்கி விடுகிறது. அதற்காக இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கும் ஏனைய காட்சிகளில் அப்பட்டமான வணிகத்தனம் மட்டுமே மிஞ்சுகிறது.
யானை வேட்டை – யானை தந்தங்கள்- யானையை முன் நிறுத்தி நடைபெறும் கஜ பூஜை- போன்ற விடயங்கள் ஒரு பிரிவு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விறுவிறுப்பை உண்டாக்கினாலும் அதனால் பார்வையாளர்களிடத்தில் ஏற்பட வேண்டிய விளைவுகள் பூஜ்யமாகவே இருக்கிறது.
பூமி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இருக்கும் நடிகர் மதி.. யானையுடன் நெருங்கி இயல்பாக பழகி இருப்பதும்.. யானையை முத்தமிடுவதும யானை மீது சவாரி செய்வதும்.. யானையுடன் நவரச உணர்வுகளை வெளிப்படுத்துவதும்.. தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். பொருத்தமான இயக்குநரும், கதையும் அமைந்தால் இவராலும் தமிழ் சினிமாவில் நம்பிக்கையுடன் கூடிய நட்சத்திர நடிகராக உயர முடியும்.
பாரி எனும் வன அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றும் அர்ஜுன் தாஸ் வழக்கம்போல் தன்னுடைய அதிரடியான நடிப்பால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார்.
ஆஸ்கார் விருதினை வென்ற இந்திய ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டியின் உதவியாளராக கதையில் அறிமுகமாகும் நடிகை ஷ்ரிதா ராவின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
நாயகன் பூமியின் நண்பனாக அறிமுகமாகி இருக்கும் நடிகர் ஆண்ட்ரூஸ் உரத்த குரலில் மாடுலேஷன் இல்லாமல் பேசிப் பேசியே ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கிறார்.
பாடல்களில் மெல்லிசையை இடம்பெறச் செய்து தனது திறமையை வெளிப்படுத்திய நிவாஸ் கே. பிரசன்னா- பின்னணி இசையில் போதிய கவனம் செலுத்தாதது குறை தான்.
அடர்ந்த வனத்தின் அழகியல்களை காட்சிப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் தன் கடமையை மீண்டும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
யானையைப் பற்றியும், வனத்தை பற்றியும் ஏராளமான நுட்பமான தகவல்களை விடா முயற்சியால் தேடி, ஏராளமான விடயங்களை சேகரித்திருக்கும் இயக்குநர் பிரபு சாலமன்- நாயகனுக்கும் யானைக்கும் சமமான பங்களிப்பு இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும் என்ற கோணத்தில் பயணித்திருந்தாலும்.. முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் பல இடங்களில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதனால் குழந்தைகளுக்கான படமாகவும் இல்லாமல்.. அனைத்து தரப்பினருக்கான படைப்பாகவும் இல்லாமல்… திரிசங்கு நிலையில் இந்தப் படைப்பு உருவாகி இருக்கிறது.
கும்கி 2 – நட்பின் நந்தகி
The post கும்கி 2 | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.