மதுரை: கும்பகோணம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ பிறந்தநாள் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரிய வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “கும்பகோணம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகனின் பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உள்ள பொதுச் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் முன் அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகளால் பொதுமக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இவற்றை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கும்பகோணம் நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “சில இடங்களில் உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று வைத்துள்ளனர். அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ள பேனர்களை அகற்றி விட்டோம். வழக்கு பதிவும் செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், விதிமீறல் பேனர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.