கும்பகோணம்: கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான யானை ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய யானை ராஜேந்திரன் கூறியதாவது: கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை தூர்வாராததால், சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி பல்வேறு பயிர்கள் நாசமாகிவிட்டது.
தேப்பெருமாநல்லூர் வடிகால் வாய்காலில், வராக குளம் அருகில் அடைக்கப்பட்டிருப்பது வேதனையாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காக தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதி பேரான்மை உத்தரவில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு அரசுத் துறை அதிகாரிகள் அளித்த பதிலில், அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டது என பதில் கொடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பில் இருந்த 700 பாமர மக்களை அகற்றினர், ஆனால் 250 ஆக்கிரமிப்புகள் உள்ள பழவத்தான் கட்டனை, தேப்பெருமாநல்லூர், உள்ளூர், ஒலைப் பட்டிணம் வாய்க்கால்களில் உள்ள கட்டுமானங்களை அகற்றவில்லை.
இந்த ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றாததற்கு, அவர்கள் பணம் பலமிக்கவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பது தான் காரணம். இந்த நிலை இப்படியே நீடித்தால் கும்பகோணத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். கோயில் நகரமான கும்பகோணம், சாக்கடை நகரமாக மாறிவிடும்.
கும்பகோணத்தில் உள்ள அதிகாரிகள் எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. அவர்களிடம் எடுத்துக் கூறியும் மெத்தனமாக உள்ளார்கள். அதிகாரி களின் அலட்சியத்தால் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும். இதே நிலை நீடித்தால் கும்பகோண த்தில் உள்ள இப்போது உள்ள அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை, எனவே தனிக்குழு அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் கோரினால், அனுமதி கிடைக்கும்.
அப்படி குழு அமைத்தால் இப்போது இருக்கின்ற அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளில் கட்டுமான உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியவர்கள், உறுதுணையாக இருந்தவர்கள் உள்பட அனைவரது மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படும். எனவே, அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்திற்கு வரும், அதற்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், நிச்சயமாக தனிக்குழு கட்டாயம் அமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு வாங்கி விட்டால், இங்கிருந்த அனைத்து அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு (எப்ஐஆர்) பதிவு செயப்படும். மழை நீரினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்தால் நிச்சயம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு யானை ராஜேந்திரன் கூறினார்.