பட மூலாதாரம், Getty Images
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. வருகின்ற பிப்ரவரி 26-ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. கும்பமேளா முடிவதற்கு வெகு சில நாட்களே இருக்கின்ற சூழலில் கங்கையும், யமுனா நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள நீரின் தூய்மை குறித்து இரண்டுவிதமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(சி.பி.சி.பி), தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மகா கும்பமேளாவில் மக்கள் புனித நீராடும் நீரின் தூய்மை குறித்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது.
கங்கை-யமுனை நதியின் நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முடிவுகள் சி.பி.சி.பி.யின் நீர் தரம் தொடர்பான அறிக்கை முடிவுகளை நிராகரித்தது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த அறிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், புதிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிப்ரவரி 26-ஆம் தேதி மகா கும்பமேளா முடிவடைகின்ற சூழலில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 28 அன்று நடைபெற உள்ளது. உத்தரபிரதேச அரசின் தரவுகள் படி மகா கும்பமேளாவில் இதுவரை 58 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுவது என்ன?
ஶ்ரீங்காவேர்பூர் படித்துறை, லார்ட் கர்சன் பாலம், நாகவாசுகி கோவில், திஹா படித்துறை, நைனி பாலம், மற்றும் கங்கை – யமுனா ஒன்று சேரும் இடமான திரிவேணி சங்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியது.
ஜனவரி 13-ஆம் தேதி அன்று கங்கை நதி மேல் அமைந்திருக்கும் திஹா படித்துறை மற்றும் யமுனா நதியின் நைனி பாலத்தின் அருகே இருந்து எடுக்கப்பட்ட 100 மில்லி லிட்டர் நீரில் 33,000 எம்.பி.என் (தண்ணீரில் உள்ள பாக்டீயாக்களின் செறிவை அளவிடும் முறை) அளவுக்கு கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருந்தன.
ஶ்ரீங்காவேர்பூர் படித்துறையில் இதன் அளவு 23,000 ஆக இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 100 மி.லி. நீரில் 2500 என்ற அளவில் எம்.பி.என். இருந்தால் மட்டுமே அது குளிப்பதற்கு பாதுகாப்பான நீர் என்று அறிவிக்கிறது.
காலையிலும் மாலையிலும் திரிவேணி சங்கமத்தில் தான் பெரும்பாலான மக்கள் புனித நீராடுகின்றனர். அங்கே இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் 13,000 எம்.பி.என். என்ற அளவில் உள்ளது.
கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி அந்த நீரில் பல மாசுக்கள் கலந்திருப்பதால் அது குளிக்கவும் குடிக்கவும் தகுதியற்ற நீராக குறிப்பிட்டிருந்தது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
அதிகப்படியான மக்கள் அங்கே குளிக்கின்றனர். அவர்களின் உடல் மற்றும் துணிகளில் இருந்தும் அசுத்தங்கள் வெளியேறுவதால் அங்கே உள்ள நீரில் இந்த பாக்டீரியாக்களின் செறிவு அதிகரிக்கிறது என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
எவையெல்லாம் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள்?
கோலிஃபார்ம் பாக்டீரியா என்பது பல பாக்டீரியாக்களின் குழுவாகும். அது பொதுவாக மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடல் பகுதிகள் மற்றும் கழிவுகளில் காணப்படும் என்று குறிப்பிடுகிறது அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண சுகாதாரத்துறை.
அது உடலில் இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நீரில் கலக்கும் போது அச்சுறுத்தலாக மாறிவிடும். இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்களில் இ.கோலி, டோட்டல் பாக்டீரியாக்களும் அடங்கும்.
இதில் டோட்டல் பாக்டீரியாக்கள் மண்ணில் கூட காணப்படும். ஆனால் கழிவு கோலிஃபார்ம் (fecal coliform) மற்றும் இ.கோலி போன்றவை கழிவுகளில் காணப்படும். இ.கோலியின் அனைத்து திரிபுகளும் ஆபத்தானவை இல்லை. ஆனால், 0157:H7 என்ற திரிபு மிகவும் ஆபத்தானதாக அறியப்படுகிறது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது என்ன?
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை வெளியான பிறகு இது அரசியல் தளத்தில் இது பேசுபொருளானது. உத்தரபிரதேச அரசு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி, அந்த மாநில சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று அறிக்கையை முழுமையாக நிராகரித்தது மட்டுமின்றி, திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று கூறினார்.
“நீரின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சங்கமத்தைச் சுற்றியுள்ள அனைத்து கால்வாய்களும் கண்காணிக்கப்படுகின்றன. நீர் முழுமையாக சுத்தகரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக நீரின் தரத்தை மதிப்பீடு செய்து வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
பிரயாக்ராஜில் 100 மி.லி நீரில் 2500க்கும் குறைவான அளவிலேயே கோலிஃபார்கள் இருப்பதாக தெரிவித்தார். மகா கும்பமேளாவின் நன்மதிப்பை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனின் அளவு 3-க்கும் குறைவான அளவே இருந்தால் போதும். ஆனால் சங்கமம் பகுதியில் அதன் அளவு 8-9 ஆக இருக்கிறது. எனவே சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று தெரிவித்தார் யோகி.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,”பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அந்த நீரை குடித்து, அதில் குளித்தால் மட்டுமே கங்கை சுத்தமாக உள்ளது என்று நாங்கள் நம்புவோம்,” என்று தெரிவித்தார்.
உத்தரபிரதேச சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சிவ்பால் சிங் யாதவ், “இந்த நிகழ்வின் மையமாக கங்கை நதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நதியின் நீர் குடிக்க உகந்ததாக இல்லை. அரசு அந்த கங்கை நதி நீரை கையில் எடுத்து உண்மையை பேச வேண்டும்,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பாக்டீரியாக்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
ஆறு அம்சங்களை கருத்தில் கொண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீரை பரிசோதனை செய்தது. தர நிர்ண்யத்தின் படி கழிவு கோலிஃபார்மின் அளவு 100 மி.லி. நீரில் 2500க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சங்கமத்தில் எடுக்கப்பட்ட நீரில் இதன் அளவு மிக அதிகமாக இருந்தது.
ஆனால் உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய தலைவர் சுரேஷ் சந்திரா சுக்லா, பிப்ரவரி 18-ஆம் தேதி அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் 549 பக்களைக் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.
உத்தரபிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜல் நிகாம், ஜியோடியூப், மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப மையம் வழங்கிய ஆய்வுகளின் முடிவுகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. அந்த ஆய்வு முடிவுகள் அனைத்தும், நீர் நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஜியோடியூப் எனப்படும் கருவியானது சங்கமம் பகுதியில் நீருக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நீரின் தரம் குறித்து முடிவுகளை இது வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நதி நீரின் தரம் குறித்து ஆய்வுகளை நடத்தும் தீபேந்திர சிங் கபூர், “மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை, அந்த நீர் அசுத்தமாக இருக்கிறது என்று தெரிவித்தால் அதனை மறுக்க இயலாது,” என்று தெரிவித்தார்.
இதில் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.
“ஒன்று இந்த நீராடலின் போது ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது. மற்றொன்று, புனித நீராடியவர்கள் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். அங்கே அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கும்பமேளாவிற்கு சென்று திரும்பிய உங்களின் உடல்நிலை மோசமடைகிறதா?
கும்பமேளாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் பலருக்கு காய்ச்சல், சளி, தும்மல், இருமல் மற்றும் சுவாச பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று தன்னுடைய குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் நீராடிய நொய்டாவைச் சேர்ந்த சிம்ரன் ஷா இதுகுறித்து பேசிய போது, “கும்பமேளாவில் இருந்து திரும்பி வந்த பிறகு அனைவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. அவர்களின் உடல் நிலை முன்னேறுவது போன்று தெரியவில்லை,” என்று கூறினார்.
அவரின் குடும்பத்தினருக்கு தொண்டையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
உத்தரபிரதேசத்தின் அயோத்தியைச் சேர்ந்த அன்கித் பாண்டே பிப்ரவரி 17 அன்று தன்னுடைய 19 குடும்ப உறுப்பினர்களுடன் புனித நீராடினார். “பிரயாக்ராஜில் இருந்து திரும்பி வந்த பிறகு அனைவருக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருந்துகளை எடுத்து வருகின்றனர்,” என்று கூறினார்.
புதுடெல்லியில் அமைந்திருக்கும் மௌலானா அசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் பன்னலால் இது குறித்து பேசும் போது, “இது அடிக்கடி நடப்பது உண்டு. அதிக அளவில் மக்கள் ஒன்று கூடுவதால் இது தவிர்க்க முடியாத ஒன்று. குறைந்தபட்சம் 20% பக்தர்களாவது இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள். அதன் தாக்கம் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த கோலிஃபார்ம்கள் காரணமாக மக்களுக்கு இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும். அதனோடு காய்ச்சல், இருமல், மற்றும் இதர தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் அதிகமாக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும் போது ஏற்படும் ஒன்று தான் எனவும் மருத்துவர் பன்னலால் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு