பட மூலாதாரம், Getty Images
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மாபெரும் மதம் சார்ந்த ஒன்றுகூடலான கும்பமேளா தற்போது நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதால் பிரயாக்ராஜ் நகரம் திணறிக் கொண்டிருக்கிறது.
கும்பமேளா என்றதும் அனைவரது நினைவுக்கும் வருவது உடல் முழுவதும் விபூதியைப் பூசிய நாகா சாதுக்கள்தான். ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தக் கும்பமேளா, வெறும் நாகா சாதுக்களைப் பற்றியது அல்ல, இது பல கோடி மக்களின் மாபெரும் நம்பிக்கை.
புனித நதிகளில் நீராடுவதன் மூலம் மோட்சம் பெறலாம் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கும்பமேளா, பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக், உஜ்ஜயினி என இந்தியாவின் நான்கு நகரங்களில் நடைபெறுகிறது.
பிரயாக்ராஜில் கும்பமேளாவுக்காக ஒரு தற்காலிக நகரமே உருவாக்கப்பட்டிருக்கிறது.
கும்பமேளாவுக்கு வரும் மடாதிபதிகள், சாதுக்கள், பக்தர்கள் தங்குவதற்கான கூடாரங்கள் ஆயிரக்கணக்கில் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, இந்த கும்பமேளா நிகழ்வை ஒட்டி, உபநியாசங்கள், உரைகள், பூஜைகள், ஊர்வலங்கள் என பல்வேறு ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சிகளும் நடந்துவருகின்றன.
கும்பமேளா ஏன் நடைபெறுகிறது?
புராணங்களின்படி, பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்த பிறகு, விஷ்ணு மோகினியாக மாறி அமிர்த கலசத்தைக் கொண்டுசெல்ல முயல்கிறார். அப்போது அந்தக் கலசத்திலிருந்து நான்கு துளிகள் பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜயினி, ஹரித்வார் ஆகிய இடங்களில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
ஆகவே இங்குள்ள நதிகள் அந்த அமிர்தத்தால் புனிதமடைந்ததாகவும் அதில் நீராடும் ஒருவர் மோட்சத்தை அடைவார் என்றும் நம்பப்படுகிறது என்கிறார் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையைச் சேர்ந்தவரும் ‘பாரத் கா கும்ப்’ (Bharat ka Kumbh) நூலை எழுதியவருமான தனஞ்சய் சோப்ரா.
பல நூற்றாண்டுகளாக இந்த அகாராக்களின் மூத்த துறவிகளே கும்பமேளாக்களை ஏற்பாடு செய்து, நடத்துவார்கள். ஆனால், சஹி ஸ்னான் எனப்படும் புனித நீராடும் தினம் என்றைக்கு என்பதை தீர்மானிப்பதில் ஆகாராக்களுக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இப்போதும், அகாராக்கள்தான் அந்த நாளை முடிவு செய்கிறார்கள் என்றாலும் அரசுதான் அதனை அங்கீகரிக்கிறது. மகர சங்கராந்தி, பௌஸ் பூர்ணிமா, மௌனி அம்மாவாசை, வசந்த பஞ்சமி, மகி பூர்ணிமா போன்ற சஹி ஸ்னான் தினங்களின் போது மகா மண்டலேஸ்வர்கள் எனப்படும் அகாராக்களின் மூத்த மடாதிபதிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வந்து அதிகாலையின் புனித நீராடுகிறார்கள்.
“கும்பமேளா குறித்து வெளிநாட்டு யாத்ரீகர்களின் குறிப்புகள் நிறையவே இருக்கின்றன. முகாலாயர் காலத்தில் இந்த விழா நடைபெற்றது பற்றிய குறிப்புகள் அக்பர் நாமா உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன. 1857-ல் நடந்த முதல் இந்திய சுதந்திர போரில், நாகா சாதுக்கள் பங்கேற்றார்கள். குறைந்தது 745 சாதுக்கள் இந்தப் போரில் உயிரிழந்தார்கள்” என்கிறார் தனஞ்சய் சோப்ரா.
முதல் இந்திய சுதந்திர போர் நடந்த 1857க்கு அடுத்த ஆண்டு, அதாவது 1858ல் கும்பமேளா நடைபெற்ற நிலையில், நாகா சாதுக்கள் இந்த எழுச்சியில் பங்கேற்று ஜான்சி ராணிக்கு உதவினார்கள் என்கிறார் அவர்.
அதேபோல, 20ஆம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, கும்பமேளாக்களை தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார் அவர். குறிப்பாக, 1918-ல் நடந்த கும்பமேளாவில் காந்தி பங்கேற்றதைச் சுட்டிக்காட்டுகிறார் தனஞ்சய்.
இந்த கும்பமேளாவிற்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அரிதாகவே கண்ணில் படுகிறார்கள். ஆனால், வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்கள் இதில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள்.
கொல்கத்தாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பாவனா, பெங்களூரு நகரில் படித்துவருகிறார். இந்த விழாவில் பங்கேற்பத்காக, கொல்கத்தா சென்று பெற்றோரை அழைத்துக் கொண்டு இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்.
“இது போன்ற புனித யாத்திரைகள் செல்ல வேண்டுமென்பது எங்களது நீண்ட நாள் ஆசை. மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே திட்டமிட்டோம். இருந்தாலும் ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்தது. இவ்வளவு பெரிய கூட்டம் அசௌகர்யம்தான் என்றாலும், எல்லோரும் நம்மைப் போலத்தானே வருகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறேன்” என்கிறார் பாவனா. இதேபோல, மும்பையைச் சேர்ந்த தமிழர்களைப் பலரையும் இங்கே காண முடிகிறது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட துறவிகள் இங்கே வந்து தங்கியிருக்கின்றனர். நித்யானந்தா மடத்தைச் சேர்ந்த பக்தர்களையும் கும்பமேளாவில் காண முடிகிறது.
இங்கே வரும் பக்தர்கள் என்ன செய்கிறார்கள்?
கும்பமேளாவைப் பொறுத்தவரை, திரிவேணி சங்கமம் பகுதிதான் இதன் மையம். நதியில் நீராடுவதற்கென 40க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருந்தாலும் பக்தர்கள் பெரும்பாலும் திரிவேணி சங்கமம் பகுதியில்தான் நீராட விரும்புவார்கள். ஆகவே எப்போதுமே இந்தப் பகுதி நெரிசல் மிகுந்த ஒன்றாகவே இருக்கும்.
இது இந்தியாவின் மிகவும் பேசப்படும் விழாவாக இருந்தாலும், இங்கே செய்வதற்கென விரிவான சடங்குகள் ஏதும் இல்லை. வந்துசேரும் பக்தர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப சில சடங்குகளைச் செய்கிறார்கள்.
ஒரு சிலர் விளக்குகளை ஏற்றி, ஒரு சிறிய காகிதப் படகில் நதியில் விடுகிறார்கள். சிலர் பாலை நதியில் வார்க்கிறார்கள். சிலர் சூடம் ஏற்றி நதியை வணங்குகிறார்கள். இதற்குப் பிறகு நதியில் நீராடிவிட்டு, வெளியேறுகிறார்கள். பலர், அந்த இடத்தில் உள்ள நீரை புனித நீராகக் கருதி பிளாஸ்டிக் கேன்களில் வீடுகளுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
நீராடிவிட்டு வரும் பக்தர்கள், நெற்றியில் மஞ்சளைப் பூசி அதன் மேல் குங்குமத்தில் இந்தி மொழியில் கடவுள்களின் பெயரை எழுதிக் கொள்கிறார்கள் அல்லது இந்து மதச் சின்னங்களை வரைந்துகொள்கிறார்கள்.
கும்பமேளா என்றாலே நினைவுக்கு வரும் நாகா சாதுக்கள் தங்குவதற்கென தனியாக ஒரு பகுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்குள்ள குடில்களில்தான் இவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஆனால், கும்பமேளாவின் முக்கியமான மௌனி அமாவாசை நிறைவடைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான நாகா சாதுக்கள் கும்பமேளா நடக்கும் இடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். வெகு சில சாதுக்களே தற்போது அங்கே தங்கியிருக்கின்றனர்.
உடல் முழுவதும் விபூதி பூசி, நிர்வாண கோலத்தில் இருக்கும் சாதுக்களின் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியுலகில் வித்தியாசமாக பார்க்கப்பட்டாலும், இங்கே வரும் பக்தர்கள் இந்த சாதுக்களை மிகுந்த பக்தி உணர்வுடன் அணுகுகின்றனர். புதிதாக வருபவர்களிடம் இந்த சாதுக்கள் பெரிதாக ஏதும் பேசுவதில்லை.
ஆனால், சில இடங்களில் பக்தர்களை ஏமாற்றும் நிகழ்வுகளும் நடக்கின்றன. லக்னோவைச் சேர்ந்த சுஜித் பாண்டே தனது தாய், தந்தை, மனைவி, தங்கை ஆகியோருடன் கும்பமேளாவுக்கு வந்துள்ளார். நீராடிவிட்டு, தனது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த பார்க்கிங் பகுதிக்கு வந்தார் சுஜித் பாண்டே.
“நான் பார்க்கிங்கிற்கு வந்தபோது சில சாதுகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். என் கையைப்பிடித்துக் கொண்டார்கள். பத்து ரூபாய் கொடுங்கள் என்றார்கள். சரி என பத்து ரூபாய் கொடுத்தேன். பிறகு, ஒரு பூவை கையில் கொடுத்துவிட்டு, பத்து ரூபாயைத் திருப்பி என் பாக்கெட்டிலேயே வைத்துவிட்டார்கள்.
அதன் பிறகு, பாக்கெட்டில் இருந்த எல்லா பணத்தையும் கொடு என்றார்கள். நான் ஐநூறு ரூபாய் தருவதாகச்சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் இருந்த எல்லா பணத்தையும் கேட்டார்கள். எல்லாப் பணத்தையும் தரவில்லையென்றால் உங்களை ஏதாவது செய்துவிடுவேன் என்றார்கள்.
நான் பயந்துபோனேன். 6-7 பேர் சூழ்ந்துகொண்டிருந்தார்கள். என் கையிலிருந்த நான்காயிரம் – ஐந்தாயிரம் ரூபாயையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். எல்லாப் பணத்தையும் கொடுத்துவிட்டால், நான் எப்படி என் குடும்பத்துடன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வது?” என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
தற்போதுவரை கும்பமேளா நிகழ்விற்கு சுமார் 43 கோடி பேர் வந்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இவ்வளவு பேரின் வருகையைச் சமாளிக்க முடியாமல் பிரயாக்ராஜ் நகரம் திணறுகிறது.
திரிவேணி சங்கமத்திலிருந்து சுமார் ஏழு – எட்டு கி.மீ. தூரத்திற்கு வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு பக்தர்கள் நடந்துசென்றுகொண்டிருக்கின்றனர். நீராடிவிட்டு வரும் பக்தர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்வதற்கோ ரயில் நிலையத்தை அடைவதற்கோ வாகனங்கள் ஏதும் கிடைக்காமல் அலைபாயும் நிலை நீடிக்கிறது.
சில இடங்களில் இ-ரிக்ஷாக்கள், இரு சக்கர வாகனங்கள், சில சரக்கு ரிக்ஷாக்கள் ஆகியவை பக்தர்களின் போக்குவரத்துக்கு உதவுகின்றன என்றாலும்கூட, இந்த நகரில் வந்து குவியும் கூட்டத்திற்கு இது போதுமானதாக இல்லை.
கும்பமேளா நடைபெறும் இடம், தெளிவாக பல்வேறு செக்டார்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் புதிதாக நகரை வந்தடைபவர்கள் இது பற்றி அறியாத காரணத்தால், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதையும் பல கி.மீ. தூரத்திற்கு நடப்பதையும் காண முடிகிறது.
பிப்ரவரி 9ஆம் தேதியன்று பெரும் எண்ணிக்கையில் பிரயாக்ராஜில் பக்தர்கள் குவிந்தார்கள். இதனால், கும்பமேளா நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சங்கம் ரயில் நிலையம் பிப்ரவரி 14ஆம் தேதிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜிலிருந்து அயோத்தி, லக்னோ, வாரணாசி செல்லும் சாலைகள் போக்குவரத்து நெரிசலில் திணறுகின்றன. குறிப்பாக பிரயாக்ராஜ் – வாரணாசி சாலையில் பயணிப்பவர்கள் இரு நகரங்களுக்கும் இடையிலான சுமார் 125 கி.மீ. தூரத்தைக் கடக்க, ஏழு – எட்டு மணி நேரம் வரை ஆகிறது. இதனால், சொந்த வாகனங்களில் பிரயாக்ராஜிற்கு வருபவர்களும் திணறிப் போயிருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் இவர்கள் சாலைகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பிரயாக்ராஜில் உள்ள நெரிசல் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்தாலும், தங்கள் பாவங்களைத் தொலைக்க நினைக்கும் பக்தர்களை அவை தடுப்பதாகத் தெரியவில்லை.
இந்த மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது. இந்த காலகட்டத்தில் மட்டும் கும்பமேளா நடக்கும் பகுதி ஒரு தனி மாவட்டமாகக் கருதப்படும்.
இந்தப் பகுதியில் கூடும் கோடிக்கணக்கான மக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவாக நிர்வாக ரீதியாக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. கும்பமேளா நடக்கும் 4,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதி, அடையாளம் காண ஏதுவாக 25 செக்டார்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
பத்து நிரந்தர படித்துறைகள், 31 தற்காலிக படித்துறைகள் என 41 படித்துறைகள் பக்தர்கள் குளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படித்துறைகளை அடைய 14 முக்கிய வழித்தடங்கள் உள்ளன.
இந்த கும்பமேளாவுக்கு கூடுதலான ஒரு முக்கியத்துவமும் இருக்கிறது. அதாவது, 12 கும்பமேளாக்களுக்கு ஒரு முறை நிகழும் கும்பமேளாவாக, அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளாவாக இந்த கும்பமேளா கருதப்படுகிறது. இந்த மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் மட்டுமே நடைபெறும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.