திருவள்ளூர் மாவட்டத்தில் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அரசு அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்திப் போராடிய தங்களை காவல்துறை அடித்துத் துன்புறுத்தியதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது.
மண் குவாரிக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் மக்கள் போராடுவது ஏன்? அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது கரடிபுத்தூர் கிராமம். ஒருபுறம் விவசாய நிலங்கள், மறுபுறம் தொழிற்சாலைகள் என ஆந்திர மாநில எல்லையோரத்தில் இக்கிராமம் உள்ளது.
பட்டியல் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தக் கிராமத்தில் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களை மக்கள் விளைவிக்கின்றனர்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மூலம் நடைபெறும் சாலைப் பணிகளுக்காக இக்கிராமத்தில் உள்ள கிராவல் மண்ணை எடுக்க எல் அண்ட் டி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபுசங்கர் அனுமதி அளித்துள்ளார்.
சுமார் 3 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து 22,223 சதுர மீட்டரில் ஒன்றரை மீட்டர் ஆழத்துக்கு கிராவல் மண் எடுப்பதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, மண் எடுப்பதற்கான பணிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த நிறுவனம் இறங்கியது.
இதற்கு கரடிபுத்தூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கான காரணத்தை பிபிசி தமிழிடம் விவரித்தார் இந்த கிராமத்தை சேர்ந்த அனுசுயா.
“நாங்கள் மேய்க்கால் (மேய்ச்சல்) புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு பட்டா இல்லை. பட்டா கொடுக்குமாறு நீண்டகாலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்” எனக் கூறுகிறார் அவர்
மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பட்டா கொடுப்பதற்கு விதிகள் அனுமதிக்காது என்பதால், கிராமத்தில் உள்ள கல்லாங்குத்து வகை புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி பட்டா தருமாறு கோரிக்கை வைத்ததாக அவர் கூறுகிறார்.
“ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்காமல் அந்த நிலத்தை கிராவல் மண் எடுக்கும் குவாரி பணிகளுக்கு அரசு ஒதுக்கிவிட்டது” என்கிறார் அனுசுயா.
குவாரிக்கு எதிராக போராடுவது ஏன்?
மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, கரடிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜான் பிரிட்டோவிடம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று தங்களின் ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கிராம மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
அரசு கொடுத்த குவாரி அனுமதியை ரத்து செய்யுமாறு வி.ஏ.ஓ-விடம் கூறியபோது, வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு பதில் அளிக்க அவகாசம் கோரியதாகவும், இதனால் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகவும் கூறுகிறார் அனுசுயா.
“கடைக்கோடி கிராமத்தில் இருப்பதால் எங்களை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. அதனால் எங்களை அகதிகளாக அறிவித்துவிடுமாறு வி.ஏ.ஓ-விடம் கூறினோம்” எனவும் அவர் கூறினார்.
‘காவல்துறை தாக்குதல்’
இதன்பிறகு மீண்டும் மார்ச் 1 ஆம் தேதியன்று கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதற்கு கிராம மக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையை அதிக எண்ணிக்கையில் குவித்து தங்களின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார் இக்கிராமத்தைச் சேர்ந்த சரளா.
“போராட்டம் செய்வதற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை. ஆனால் எங்களை ரொம்பவே அவமானப்படுத்திவிட்டனர். எந்தத் தப்பும் பண்ணாத எங்களை இந்தளவுக்கு அடிப்பார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறி கலங்கினார்.
தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் வீட்டு மனை வாங்கும் அளவுக்கு வசதி இல்லை எனக் கூறும் சரளா, “அந்த இடம் வேண்டும் எனக் கேட்டு போராடினோம். இந்தக் கிராமத்தில் நான்கு ஏரிகள் உள்ளன. அதில் மண் எடுக்குமாறு கூறினோம். அதைப் புரிந்து கொள்ளாமல் போலீஸார் அடித்தனர்” எனக் கூறினார்.
மக்களைக் கைது செய்து அரசுப் பேருந்துகளில் காவல்துறை அழைத்துச் சென்றபோது, இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்துக்குள் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், HANDOUT
போலீஸ் டி.எஸ்.பி-யின் பதில்
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதிக்கு செல்லும் வழியை மூடிவிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். இது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுத்தது” எனக் கூறினார்.
இந்த விவகாரத்தில் 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான்கு தலைமுறைகளாக வசித்தும் அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை” எனக் கூறுகிறார் இப்பகுதியைச் சேர்ந்த எஸ்தர்.
“குவாரிக்கு அனுமதியை வழங்கியது எங்களுக்கு தெரியாது. இது தெரியவந்தபோது மண் எடுக்கும் லாரிகளை நிறுத்தினோம். அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம், ‘எங்கள் மண் எங்களுக்கு உரிமையானது’ எனக் கூறினோம். அவர்களிடம் பதில் இல்லை. கலெக்டரும் வந்த பார்ப்பதாக கூறினார். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து, குவாரியின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் இப்பகுதி மக்கள் கறுப்புக் கொடி கட்டியுள்ளதைப் பார்க்க முடிந்தது. குவாரிக்கு எதிராக மீண்டும் பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஊரில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
‘விவசாயம் பாதிக்கும்’
“அனுமதிக்கப்பட்ட இடத்தில் மண் தோண்டப்பட்டால் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து விவசாயம் பாதிப்படையும்” எனக் கூறுகிறார் இப்பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “குவாரிக்கு ஒதுக்கப்பட்ட இடம் சமநிலையாக உள்ளது. இந்த இடத்தில் பள்ளம் தோண்டினால் தண்ணீர் இங்கேயே நின்றுவிடும். ஏரிக்கு நீர் செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆடு, மாடுகளை மேய்க்க வருகிறவர்கள் குழிக்குள் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறுகிறார்.
“மேடு பள்ளம் இல்லாமல் சமதளத்தில் நிலம் உள்ளதால் குவாரிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மக்களுக்கு அரசு ஒதுக்க வேண்டும்” எனக் கூறும் மைக்கேல் ராஜ், “எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் அருகில் உள்ள ஆந்திராவுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்.
கூடுதலாக மண் தோண்டப்பட்டதா?
அதேநேரம், குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண்ணைத் தோண்டி எடுத்துள்ளதாக கூறுகிறார் சமூக ஆர்வலர் சரவணன்.
“குவாரியில் அரசு அனுமதித்த மண்ணின் ஆழ அளவு என்பது 1.5 மீட்டர். ஆனால், 2.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துள்ளதை ஆதாரப்பூர்வமாக அதிகாரிகளிடம் தெரிவித்தோம்” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “கூடுதலாக மண் எடுப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலத்தை விட்டுவிட்டு ஏரிகளில் மண் எடுக்குமாறு கூறியும் கேட்கவில்லை. மக்கள் தொடர் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக குவாரியின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர்” எனக் கூறுகிறார்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்டு எல் அண்ட் டி நிறுவனத்துக்கு பிபிசி தமிழ், மெயில் அனுப்பியது. ஆனால், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் பிபிசி தமிழ் கேட்டது. “எட்டு இடங்களில் 2 இடங்களில் மட்டும் அரை அடி மண்ணை கூடுதலாக எடுத்துள்ளனர். அதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என கூறினார்.
மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?
கரடிபுத்தூர் கிராம மக்களின் பட்டா கோரிக்கை குறித்து அவரிடம் கேட்டபோது, “கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 150 பேர் வீடுகளைக் கட்டியுள்ளனர். அவர்களில் 35 பேர் மட்டுமே பட்டாவுக்கு தகுதியானவர்கள். அவர்களுக்கு பட்டா கொடுப்பதாக உறுதியளித்துள்ளோம்” எனக் கூறினார்.
“பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதலை நடத்தவில்லை” எனக் கூறும் மாவட்ட ஆட்சியர் பிரதாப், “வாகனங்களை மறித்ததால் காவல்துறை அவர்களை வெளியேற்றியது” என்கிறார்.
குவாரிக்காக குழி தோண்டுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கும் எனக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, “தண்ணீர் தேங்கினால் நிலத்தடி நீர் மட்டும் உயரும். அதனால் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை” என்கிறார்.
“அங்குள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ரோடு போடுவதற்கு சாலைகளை சமப்படுத்துவதற்கு கிராவல் மண்தான் சரியானதாக இருக்கும். தவிர எந்த தனிநபருக்காகவும் அரசு இதைச் செய்யவில்லை” எனக் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர் பிரதாப்.
கரடிபுத்தூர் மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக குவாரியில் மண் எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு