சென்னை: குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகம் தண்ணீர் வழக்க மறுக்கும் சூழலில் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு குறுவை பருவ சாகுபடியை நிறைவு செய்ய முடியுமா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ஆம் நாள், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக இருந்தால், குறுவை பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 75.20 டி.எம்.சி, அதாவது 107.72 அடி தண்ணீர் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், வெற்றிகரமான குறுவை சாகுபடிக்கும் இது மட்டுமே போதுமானதல்ல.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய தினமும் ஒரு டி.எம்.சி, அதாவது வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு திறந்து விடப்பட்டால், மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரைக் கொண்டு அதிகபட்சமாக 45 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27-ஆம் தேதி வரை மட்டும் தான் குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியும்.
அதற்குள்ளாக, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்கும். கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில், இன்று காலை நிலவரப்படி 51.80 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. இது கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 45% மட்டுமே.
கர்நாடக அணைகள் நிரம்பி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்றால், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத் தொடக்கத்தில் தொடங்கி, விரைவாக தீவிரமடைய வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இருக்குமா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தமிழக விவசாயிகள் மத்தியில் நிலவும் ஐயங்கள் போக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்பட வேண்டும்.
கடந்த 2023-ஆம் ஆண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அன்றைய நாளில் மேட்டூர் அணையில் 103.35 அடி தண்ணீர் இருந்தது. ஆனால், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததாலும், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததாலும் அந்த ஆண்டு குறுவை நெல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளால் இன்று வரை மீள முடியவில்லை.
2003&ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட அதே நிலை இப்போதும் ஏற்பட்டு விடக்கூடாது. அது குறித்து விவாதிப்பதற்காகத் தான் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? குறுகிய கால நெல் வகைகளை பயிரிடுவதா அல்லது வழக்கமான நெல் வகைகளை பயிரிடுவதா?
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யுமா? மேட்டூர் அணைத் திறப்பைக் கருத்தில் கொண்டு சாகுபடி பணிகளை எப்போது தொடங்க வேண்டும்? என்பன உள்ளிட்ட அனைத்து வினாக்களுக்கும் விடை காணப்பட வேண்டும். இவை தொடர்பாக காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு வசதியாக மே மாதத்தின் முதல் பாதியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். கூட்டத்திற்கு முதல்வர் தலைமை ஏற்பதுடன், நீர்வளம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, வருவாய், உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கூடுதலாக வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டு பருவமழை வாய்ப்புகள் குறித்த செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.