• Wed. Oct 30th, 2024

24×7 Live News

Apdin News

“குறைத்தோ, கூடுதலாகவோ மதிப்பிட முடியாது” – விஜய் கட்சி குறித்து ஜி.கே.மணி கருத்து | Can’t be underestimated or overestimated – GK Mani opinion on Vijay party

Byadmin

Oct 30, 2024


கோவில்பட்டி: “நண்பர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அது அவரது விருப்பம். எந்தக் கட்சியை யார் விரும்புகிறார்களோ, அங்கு செல்வார்கள். யாரும் எந்தக் கட்சியையும் குறைத்து மதிப்பிடவோ, கூடுதலாக மதிப்பிடவோ முடியாது” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று மாலை கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு ஆதாரமாக இருப்பது விவசாயம். ஆனால் இன்று விவசாயம் நலிந்து வருகிறது. இதனை பாதுகாக்க தமிழக அரசு பெருந்திட்டத்தை தீட்டி செயல்படுத்த வேண்டும். இதற்கு தமிழகத்தில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஒரு சொட்டு கூட வீணாகக்கூடாது. ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற அனைத்து ஆறுகளிலும் 5 அல்லது 10 கி.மீ. ஒரு தடுப்பணை கட்டி தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தென் மாவட்டங்களுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வைகை, தாமிரபரணியை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். முல்லை – பெரியாறு பாசன பெறும் 5 மாவட்டங்கள் பயன்படும் வகையில், அணையின் கொள்ளளவை 152 அடியாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு வேகமாக செயல்பட வேண்டும். மத்திய அரசும் உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். முல்லை – பெரியாறு, பாலாறு, காவேரி போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெசவு தொழில் மிகவும் நலிந்துவிட்டது. மீன்பிடி தொழிலில் மீனவர்கள் சோதனைகளை சந்திக்கின்றனர். இவற்றுக்கு பின்னர் வேலை வாய்ப்பை உருவாக்குவது தொழிற்சாலைகள்தான். படித்த இளைஞர்கள் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் வர வேண்டும். இதன் மூலம் தமிழகம் சமச்சீர் வளர்ச்சி பெறும். வேளாண் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வந்து, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

பொதுவாக உடை அணிவது அவரவர் விருப்பம். ஒருவர் அணியும் உடை குறித்து மற்றொருவர் குறை கூறுவது சரியாக இருக்காது. கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு உடைந்து அணிந்து வருவதில் கட்டுப்பாடு உள்ளது. அரசியலில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது.

யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். நண்பர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அது அவரது விருப்பம். எந்தக் கட்சியை யார் விரும்புகிறார்களோ, அங்கு செல்வார்கள். யாரும் எந்தக் கட்சியையும் குறைத்து மதிப்பிடவோ, கூடுதலாக மதிப்பிடவோ முடியாது. விரும்பியவர்கள் விரும்பக்கூடிய கட்சிக்கு செல்வார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. இப்போதே யார் யாருடன் கூட்டணி என ஆருடம் சொல்ல முடியாது. பாமக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது இல்லை. அரசியல் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாற்றியமைக்கப்படுகிறது” என்று அவர் கூறினார். அப்போது பாமக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



By admin