குற்றம் புதிது – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஜி கே ஆர் சினி ஆர்ட்ஸ்
நடிகர்கள் : தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர்.
இயக்கம் : நோவா ஆம்ஸ்ட்ராங்
மதிப்பீடு: 2.5/5
புதுமுக கலைஞர்கள் – கிரைம் திரில்லர் ஜேனர் – விரிவான மற்றும் விசாலமான விளம்பரங்கள் – போன்ற காரணங்களால் ரசிகர்களின் மனதில் ‘குற்றம் புதிது’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படமாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு படக் குழுவினர் மனநிறைவை வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் சத்யா( மதுசூதன் ராவ்) இவரது மகள் ப்ரீத்தி ( செஷ்விதா) ஓர் இரவு திடீரென்று காணாமல் போகிறார். இது தொடர்பாக காவல்துறை விசாரணையில் இறங்குகிறது. மூவருளி சாரதியான விநாயகம் ( ராமச்சந்திரன்) மீது சந்தேகம் எழுகிறது.
அவரை விசாரிக்கும் போது அவர் தங்கி இருக்கும் அறையின் அருகே கதிரேசன்( தருண் விஜய்) என்ற உணவை விநியோகம் செய்யும் ஊழியரும் விசாரிக்கப்படுகிறார். சில தினங்களுக்கு பின் ப்ரீத்தியை நான் தான் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் கதிரேசன் சரண் அடைகிறார்.
காவல்துறை தீவிரமாக விசாரித்து அவரை நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்துகிறது. ஆனால் நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்படுகிறார். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது? என்பதையும், இந்த பிரீத்தி கொலை சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? என்பது குறித்து பரபரப்புடனும், விறுவிறுப்புடனும், எதிர்பாராத திருப்பங்களுடன் விவரிப்பதுதான் ‘குற்றம் புதிது’ படத்தின் திரைக்கதை.
இதுபோன்ற கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படங்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் தான் பலம். அதை ஓரளவிற்கு சமாளித்து திரை கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். உச்சகட்ட காட்சி வெகுஜன பார்வையாளர்களால் எளிதில் ஊகிக்க இயலாது. இதன் காரணமாகவே இந்த படம் ஓரளவு ஆறுதலை தருகிறது.
கதிரேசன் எனும் உணவை விநியோகம் செய்யும் ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் தருண் விஜய் – நடிகர் கௌதம் கார்த்திக்கின் சாயலில் சில கோணத்தில் தோன்றினாலும்.. நடிப்பில் தனக்கு தெரிந்த அளவில் நடிக்க முயற்சி செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை செஷ்விதா இளமையும், அழகும் கை கொடுப்பதால் ரசிகர்களை எளிதாக வசீகரிக்கிறார்.
காவல்துறை அதிகாரி சத்யா வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் மதுசூதன் ராவ்- சாரதி விநாயகம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது.
காவல்துறை விசாரணை தொடர்பான பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும்… சுவராசியமான திருப்பங்களுக்காக இயக்குநரை மன்னிக்கலாம்.
முதல் பாதியே விட இரண்டாம் பாதி திரைக்கதையில் ஓரளவு எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவும் , பின்னணி இசையும், படத்தொகுப்பும் இயக்குநருக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
குற்றம் புதிது – 2K கிட்ஸின் கிரைம் காதல்.
The post குற்றம் புதிது | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.