கரூர்: குளித்தலை அருகே கூகுள் மேப் பார்த்து சென்றவரின் கார் நடைபாலத்தில் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது(50). இவர் காரில் கோயம் புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில் திரும்பியுள்ளார்.
கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை அருகே தொழுகை நடத்துவதற்காக கூகுள் மேப் மூலம் பள்ளிவாசலை முகமது தேடியுள்ளார். அப்போது, குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலின் குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியுள்ளது.
இதையடுத்து, குறுகிய நடைபாதை வழியே முகமது காரை இயக்கியுள்ளார். இதில் காரின் முன்சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழே இறங்கி, அந்தரத்தில் தொங்கியுள்ளது. வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில், அங்கிருந்தவர்கள் முகமதுவை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, கிரேன் உதவியுடன் கார் நடைபாலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது.